சூம் மூலமாக விருட்சம் – குவிகம் நடத்தும் கி.ராஜநாராயணனின் நினைவைப் போற்றி கூட்டம்.

அழகியசிங்கர்  

சமீபத்தில் காலமான முதுபெரும் எழுத்தாளர் கி.ராஜநாரயணின் நினைவாக நாளை (வெள்ளிக்கிழமை) 21.05.2021 அன்று
மாலை 6.30 மணிக்குக் கூட்டம் நடத்துகிறோம்.

கீழ்க்கண்ட படைப்பாளிகள் அவர் குறித்துப் பேச உள்ளார்கள்.

உயர் திரு

1. பா.செயபிரகாசம் 2. வண்ணதாசன் 3. சிட்டி வேணுகோபாலன் 4. பாரதி மணி 5. இந்திரன் 6. பஞ்சாங்கம் 7. இளவேனில் 8. கீரா பிரபி 9. அம்சா 10. அம்ஷன்குமார் 11. தமிழ்ச்செல்வன் 12. சமயவேல் 13. நாறும்பூநாதன் 14..டாக்டர் பாஸ்கரன் 15.எஸ்.வி வேணுகோபாலன் See Less

‘மிஸ்டர் ஜூல்ஸுடன் ஒரு நாள்’ என்ற டயான் ப்ரோக்கோவன் என்ற நாவலை முன் வைத்து…

 

அழகியசிங்கர்

டாக்டர் பாஸ்கரன், இந்தப் புத்தகத்தை – ‘மிஸ்டர் ஜூல்ஸுடன் ஒரு நாள் – என்ற புத்தகத்தைப் படிக்கக் கொடுத்தார்.

கிட்டத்தட்டப் பல மாதங்கள் நான் படிக்காமலே இந்தப் புத்தகத்தை வைத்திருந்தேன். திரும்பவும் அவர் ஞாபகப்படுத்தியபோது, இன்று (27.10.2020) இந்தப் புத்தகம் முழுவதும் படித்து முடித்தேன்.

இதை ஒரு நாவல் என்று சொல்லலாமா? குறுநாவல் என்று சொல்லலாமா? ஒரு நாவல் என்றால் குறைந்த பட்சம் 80 பக்கங்களாவது இருக்க வேண்டும். இந்தப் புத்தகம் 71 பக்கங்களில் முடிந்து விடுகிறது. காலச்சுவடு பதிப்பகம் நவீன உலக கிளாசிக் நாவல் வரிசையில் இந்தப் புத்தகத்தைச் சேர்த்துள்ளது. டயான் ப்ரோகோவன் (பிறந்த வருடம் 1976)

ஃப்ளெமிஷ் மொழியில் எழுதிய இந்த நாவல், ஜெர்மன் மொழியில் மட்டும் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனை ஆகியுள்ளன. ஜூல்ஸுன் மரணம் இயல்பாக இந்த நாவலில் விவரிக்கப்படுகிறது. ஜூல்ஸு மரணத்தோடு நாமும் பயணம் செய்கிறோம். ஜூல்ஸ் இறந்து போயிருந்தார். ஆனால் முதலில் அவர் தன் கடமையைச் செய்து முடித்திருந்தார். மேஜையைச் சீர்செய்து காபி கலந்து வைத்திருந்தார்.

‘உயிரோடு இருப்பவர்கள் நிலைமைதான் மோசமானது’ என்று ஆலிஸ் நினைக்கிறாள். மௌனமாக ஒரு உரையாடல் நடக்கிறது ஜூல்ஸுடன். ஆலிஸ் அந்த உரையாடலை நடத்துகிறாள்.

அவர் இறந்து விட்டார் என்று அவளுக்கு வருத்தமும் துக்கமும் இருந்தாலும் அவருடன் ஒரு மென்மையான உரையாடலை நிகழ்த்திக்கொண்டிருக்கிறாள். இந்த நாவல் முழுவதும் அவளுடைய அவரைப் பற்றிய நினைவுகள்தான். அதைச் சிறப்பாக நிகழ்ந்திருக்கிறது. அவள் என்ன செய்ய வேண்டுமென்று நினைக்கிறாள்? உண்மையில் மருத்துவரை அழைக்க வேண்டும். ஹெர்மன் என்ற அவள் பையனிடம் தெரிவிக்க வேண்டும்.

அப்படியில்லாவிட்டால் அவன் மனைவி எய்மியை கூப்பிட வேண்டும். அவள் இதையெல்லாம் செய்யவில்லை. இயல்புக்கு மாறாக அவள் இருப்பதால் அவளுக்குப் பீதி ஏற்படுகிறது. பீதியைத் தடுக்க இன்னொரு கோப்பை தேநீரைக் குடிக்கிறாள்.அவள் எப்போதும் குளித்துவிட்டு வரும்போது செய்தித்தாள்களைப் படிப்பாள். இன்றும் ஜூல்ஸ் உயிரோடு இல்லை என்று தெரிந்தும், ‘கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் ஜூல்ஸ் , ஒரு நிமிடத்தில் செய்தித்தாளைக் கொண்டு வருகிறேன்,’ என்கிறாள். அது அவருடைய காலைநேரச் சடங்கு வெளியே தக்காளி வாங்கச் சென்றால் எல்லோரும் ஜூல்ஸ் பற்றிக் கேட்பார்கள் என்று அவளுக்குத் தோன்றுகிறது. அதற்கு என்ன பதில் சொல்வது? அவள் யாரிடமும் சொல்லாதவரை அவர் இன்னும் இறந்து போகவில்லை. ஜூல்ஸுடன் சதுரங்கம் ஆட டேவிட் வந்து விடுவான் என்பதை நினைத்துத் திகைத்து விட்டாள். டேவிட்டுக்கு ஆட்டிஸம். டேவிட் தாய் பியா அவன் பள்ளிக்கூடத்தில் சதுரங்கம் ஆடக் கற்றுக் கொள்கிறாள். அவர்களை லிப்ட்டில் ஒருநாள் ஜூல்ஸிம் ஆலிஸிம் சந்திக்கிறார்கள். இப்படியே தொடங்கியது நட்பு. தினமும் டேவிட் ஜூல்ஸுடன் சதுரங்கம் ஆட வருவான். சரியாக பத்து மணிக்குத் தினமும் டேவிட் சதுரங்கம் விளையாட வந்துவிடுவான். போன் செய்து பியா சொன்னாள்.

அவள் தாய் இன்று காலை பனியில் சறுக்கி விழுந்துவிட்டாள். அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அவள் வீட்டில் தனியாக விட்டுவிட்டுச் சென்றால் டேவிட் குலைந்து போவதாகச் சொல்கிறாள். அவனை ஆலிஸ் பொறுப்பில் விட்டுவிட்டுப் போக நினைக்கிறாள்.லி டேவிட் வந்து விடுகிறான். அவள் சதுரங்கப்பெட்டியைத் தேடி எடுத்து வருகிறாள். அவன் கோபத்துடன் ஆலிஸ் உடன் செஸ் விளையாட விரும்பவில்லை. “எனக்குப் பத்து மணிக்கு மிஸ்டர் ஜூல்ஸுடன் சதுரங்கம் ஆட வேண்டு” மென்கிறான் டேவிட். “மிஸ்டர் ஜூல்ஸ் சற்று உடல்நலம் இல்லாமல் இருக்கிறார்,” என்கிறாள் ஆலிஸ்.

அவனை ஜூல்ஸ் இருக்குமிடத்திற்கு அழைத்துச் செல்கிறாள். அவன் ஜூல்சைத் தொட்டுப் பார்க்கிறான். பிறகு சொல்கிறான். “மிஸ்டர் ஜøல்ஸ் இறந்து விட்டார்” என்கிறான். டேவிட் சதுரங்கம் விளையாடுகிறான். இரண்டுபேர் ஆட்டங்களையும் அவன் ஒருவனே ஆடுகிறான். ஆட்டம் முடிவில் “மிஸ்டர் ஜூல்ஸ் நீங்கள் ஜெயித்து விட்டீர்கள்,” என்கிறான் டேவிட். ஒயின் பாட்டிலை எடுத்துக்கொண்டு வந்து டேவிட்டை திறக்கச் சொல்கிறாள். தக்கைத் திருகியை அவனிடம் கொடுக்கிறாள். “தக்கைத் திருகி ஒரு நெம்புகோல்” என்கிறான் டேவிட். ஆட்டிஸம் இருந்தாலும் டேவிட் ஒவ்வொரு முறையும் எதாவது குறிப்பாகச் சொல்வான்.

“சொர்க்கத்திலிருந்து வந்த அமிர்தம்” என்றான் டேவிட் திறந்த ஒயின் பாட்டிலை அவள் பக்கமாகத் தள்ளி வைத்தபடி. இதுதான் முதல் முறையாக அவன் தேவையின்பாற்படாத ஒன்றைச் சொன்னது என்கிறார் நாவலாசிரியர். பியா வந்து டேவிட் அழைத்துச் சொல்வதற்கு முன்,’பிற்பகல் என் அம்மாவிற்கு அறுவை சிகிச்சை. நான் திரும்பவும் போக வேண்டும்’ என்கிறாள். டேவிட் தன் தாயைப் பார்த்தவுடன் ஒரே ஒரு வார்த்தைதான் சொன்னான். ” மிஸ்டர் ஜூல்ஸ் ஜெயித்துவிட்டார்,” என்று.

ஒரு புதையல் போல் மிஸ்டர் ஜூல்ஸ் காதலியான ஓல்காவிற்கு எழுதிய கடிதத்தை, கண்டுபிடித்து விட்டேன் என்கிறாள் ஆலிஸ். அந்தக் கடிதத்தில் மிஸ்டர் ஜூல்ஸ் விடுமுறை தினத்தில் ஓல்காவை அழைத்துப் போவதாக எழுதியிருந்தார். ஆனால் ஏனோ அது நிறைவேறவில்லை. அவருடன் வாழ்ந்த பழைய நினைவுகளை அசை போடுகிறாள்.

மிஸ்டர் ஜூல்ஸ் ஓல்காவுடன் விடுமுறைக்குச் செல்லவில்லை. அதைத் தடுத்து விட்டாள் ஆலிஸ். ‘உங்களை வாழ்க்கைக்கு அர்பணிப்பதைவிட மரணத்திற்கு அர்ப்பணிப்பது எளிதாக இருக்கிறது’ என்று நினைக்கிறாள் ஆலிஸ். தன் நினைவுகள் மூலம் அவருடன் ஆலீஸ் வாழ நினைக்கிறாள். ஓல்காவுடன் ஏற்பட்ட கள்ள உறவு முறிந்ததற்குக் காரணமாக ஆலிஸ் இருக்கிறாள். அவள் அதை அவர் முன் அவர் இறந்தபின் வெளிப்படுத்துகிறாள். அவள் நினைத்துப் பார்க்கிறாள் தன் மகன் ஹெர்மனிடம் எப்போது சொல்வது என்று. முன் மாலையில்தான் ஹெர்மனை அழைக்க நினைக்கிறாள். ஆனால் அவள் மகன் ஹெர்மனை அழைக்கவில்லை. ‘ ஹெர்மனை அழைப்பதற்கு மிகவும் பயமாக இருக்கிறது’ என்று அவள் இறந்து போன கணவருடன் பேசுகிறாள்.

தந்தை இறந்து விட்டதை ஒரு மகனிடம் சொல்வதை விட ஒரு மகளிடம் சொல்வது எளிதாக இருக்குமென்று நினைத்தாள். இப்போது அவள் ஏற்கனவே பிறக்க இருந்த தன் முதல் குழந்தை அரைகுறைப் பிரசவமாகப் போனதை நினைத்துப் பார்த்தாள். திரும்பவும் பியா போன் செய்தாள். அவள் அம்மா உடல்நிலை மோசமாகி விட்டதாகவும், அவள் கட்டாயம் போகும்படி இருக்கும் என்றும், ஆனால் அவள் பையன் டேவிட் அழைத்துக்கொண்டு போக முடியாது என்றும் சொல்கிறாள். எப்படியும் டேவிட்டை அவள் பொறுப்பில் விட்டுச் செல்கிறேன் என்று அழாதகுறையாகச் சொல்கிறாள்.

ஆலிஸ். அந்த வேண்டுகோளைத் தட்ட முடியவில்லை. டேவிட்டை பியா அழைத்துக்கொண்டு அவளிடம் விடும்போது, ”மிஸ்டர் ஜூல்ஸ் எப்படி இருக்கிறார்,” என்று கேட்கிறாள். “அவர் அப்படியே இருக்கிறார்,” என்று ஆலிஸ் பதில் அளிக்கும்போது டேவிட்டைப் பார்க்கிறாள். அவன் முகத்தில் ஒருமாற்றம் நிகழ்கிறது. அவன் அவள் அம்மாவிடம் மிஸ்டர் ஜூல்ஸ் இறந்து போய்விட்டார் என்று சொல்லவில்லை . எப்படி அவனைப் பாதுகாப்பது என்று அவளுக்குப் பெரிய நிர்ப்பந்தமாக இருக்கிறது. மிஸ்டர் மிஸ்டர் ஜூல்ஸ் இருந்த அறையில் அவனை அழைத்துக்கொண்டு போக விரும்பவில்லை. ஏன்னென்றால் மிஸ்டர் ஜூல்ஸ் விரும்பாத தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப விரும்பவில்லை. டேவிட் எப்போதும் பத்துமணிக்குத்தான் சதுரங்க ஆட்டம் ஆடுவான். அதனால் தற்சமயம் பத்து மணியைக் கடந்து விட்டதால் அவன் ஆட மறுக்கிறான். “வா நாம் ஜூல்ஸ் பக்கத்தில் உட்கார்ந்து கொள்ளலாம்” என்று அவனை அழைத்துக்கொண்டு போகிறாள்.

“மிஸ்டர் ஜூல்ஸ் இறந்து விட்டார்” என்றாள் டேவிட்டைப் பார்த்து. டேவிட் ஜூல்ஸ் இறந்த உடலைத் தொட்டுப் பார்க்கிறான். அவருடைய முகத்தின் மீது அவனுடைய கையை ஓட்ட விட்டான். அப்போது ஒன்று சொல்கிறான். அது முக்கியமாக இந்த நாவலில் தோன்றுகிறது. “மிஸ்டர் ஜூல்ஸ் போய்விட்டார். இது மிஸ்டர் ஜூல்ஸின் வெளிப்புறம்தான்” என்கிறான். இங்கே அவன் சொல்வது முக்கியமாகத் தோன்றுகிறது. அவன் சொன்னதை விட்டு கதாசிரியர் சொல்வதுபோல் ஒரு வரி வருகிறது. கல்லாகிப்போய் சோஃபாவில் அமர்ந்திருந்த ஜூல்ஸின் உடல் அவருடைய வெளிப்புறம்தான் உலகத்திற்கான அவரது ஆடை அது. இப்போது அதை அவர் கழற்றிப் போட்டுவிட்டார்.

சாப்பிடக் கூப்பிடுகிறாள் டேவிட்டை. ‘சமையல் அறையில் நுழைந்த அலங்கோலம்..அலங்கோலம்..அலங்கோலம்’ என்று தன்னிச்சையாக ஒரு கருத்தைக் குறிப்பிடுகிறான். சிறிது நேரத்தில் டேவிட் சொல்கிறான், ‘ஜூல்ஸின் வெளிப்புறம் தனியாக இருக்கிறது’ என்று. டேவிட் அம்மா போன் செய்து தான் அங்கு வர முடியாது என்று தெரிவிக்கிறாள். டேவிட் சோபாவில் ஜூல்ஸின் பக்கத்தில் அமர்ந்தபடியே தூங்கிக் கொண்டிருந்து விட்டு விழித்துக் கொள்கிறான்.

அவன் ஆலிஸ் பார்த்துக் கேட்கிறான். நான் சோஃபாவின் தலையணி, போர்வையுடன் படுத்துக்கொண்டால் மிஸ்டர் ஜூல்ஸின் வெளிப்புறம் எங்கே போகும் என்று கேட்கிறான். ஆலிஸ் அவனைத் தனியாகப் படுக்கை அறையில் படுத்துக் கொள்கிறான். அப்போது அவன் சொல்கிறான் “பனி வெளி யே பெய்கிறது. வெம்மை உள்ளே இருக்கிறது” என்கிறான். அது ஒரு கவிதைபோல் ஒலித்தது என்கிறார் கதாசிரியர். அவளும் தூங்கி விடுகிறாள். காலையில் எழுந்தபோது ஒரு புதிய நறுமணத்தை நோக்கி அவள் சென்றாள் என்று முடிவுக்கு வருகிறது நாவல். டேவிட் ஆட்டிஸம் என்ற நோயிக்கு ஆளாகப்பட்ட சிறுவன் அவருடைய மரணத்தைப் புறம் என்று விவரிக்கிறான். அவன் அவர் உயிரோடு இருப்பதாகத்தான் நினைக்கிறான்.

‘மிஸ்டர் ஜூல்ஸுடன் ஒரு நாள்’ – நாவல் – ஆசிரியர் : டயான் ப்ரோகோவன் – தமிழில் ஆனந்த் – முதல் பதிப்பு : டிசம்பர் 2014 வெளியீடு : காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிமிடெட், 669 கே.பி.சாலை, நாகர்கோவில் 629001(குவிகம் மே மாத மின் இதழில் வெளி வந்தது)

1Chandramouli Azhagiyasingar1 ShareLikeCommentShare

0 Comments

51வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி 15.05.2021 அன்று சனிக்கிழமைûமை மாலை 6.30 மணிக்கு நடந்ததின் ஒளிப்பதிவு.

 

அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 51வது  கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி 
இந்தக் கவி அரங்கத்தில் மற்றவர்கள் கவிதைகளை வாசித்தார்கள். சிறப்பாக நடந்து நிகழ்ச்சி.  ஒளிப்பதிவில் கேட்டு மகிழுங்கள்.  

சூம் மூலமாக விருட்சம் நடத்தும் பதினொன்றாவது கதை வாசிக்கும் நிகழ்ச்சியின் ஒளிப்பதிவு

 

வரும் 14.05.2021 வெள்ளிக்கிழமை அன்று கதை வாசிக்கும் கூட்டத்தில் இரு கதைஞர்களின் கதைகளை எடுத்து 10 பேர்கள் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்கள். அதன் ஒளிப்பதிவைக் கேட்டு மகிழுங்கள்.


தேர்ந்தெடுக்கப்பட்ட இரு கதைஞர்களின் பெயர்கள். எஸ்.வி வேணுகோபாலன், பானுமதி. கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்

51வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி

15.05.2021 அன்று சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு.

அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 51வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி வருகிற சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு 15.05.2021 நடைபெற உள்ளது.

இந்தக் கவி அரங்கத்தில் மற்றவர்கள் கவிதைகளை வாசிக்க வேண்டும். உங்கள் கவிதைகளை வாசிக்கக் கூடாது. நீங்கள் நேசிக்கும் கவிஞர்கள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள்.

அவர்களை ஞாபகப்படுத்துகிற கவிதைகள் வாசிக்க வேண்டும். நிகழ்ச்சியைச் சிறப்பிக்கக் கேட்டுக்கொள்கிறேன்

.Topic: சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 51வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி

Time: May 15, 2021 06:30 PM IndiaJoin Zoom Meetinghttps://us02web.zoom.us/j/87893417974…

Meeting ID: 878 9341 7974Passcode: 514841

இன்று செவிலியர் தினம்…

27.04.2021


துளி – 194



அழகியசிங்கர்


இன்று உலக செவிலியர் தினம். போற்றப்பட வேண்டியவர்கள் செவிலியர்கள். அறுபதுகள் முடிவில் நான் ஒரு முறை சுரத்தில் விழுந்தேன். ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். என் பெரியப்பா செவிலியர்களுக்கெல்லாம் தலைமை வகித்தவர்.
ஒரு வாரம் நரக வேதனை. அப்போது ஒரு பெண் செவிலியர் அன்பாக இருந்தார். எனக்கு அவருடைய அன்பு ஆச்சரியமாக இருந்தது. நான் சிறுவன். ஊரிலிருக்கும் அவளுடைய சகோதரன் ஞாபகத்திற்கு வந்து விட்டான்.


நான் அவருடைய சகோதரனை ஞாபகப்படுத்தினேன். என்னை 1 வாரம் நன்றாகக் கவனித்துக்கொண்டார். அவரால் என்னை மறக்க முடியவில்லை. அடிக்கடி வந்து பார்க்கும்படி கூறினார். மருத்துவமனை என்பதால் என்னால் அங்குத் திரும்பவும் போகவில்லை.


அவரை கதாபாத்திரமாக வைத்து நோயாளிகள் என்று சிறுகதை எழுதியிருக்கிறேன். என் கதையை ஆங்கிலத்தில் பேஷன்ட் என்ற பெயரில் அஷ்வின் குமார் மொழிபெயர்த்திருக்கிறார். ஜீரோ டிகிரி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
ஏனோ இன்றைய செவிலியர் தினத்தில் அவரை நினைவுக் கூறுகிறேன்.

சூம் மூலமாக விருட்சம் நடத்தும் பதினொன்றாவது கதை வாசிக்கும் நிகழ்ச்சி

 

அழகியசிங்கர்

வரும் 14.05.2021 வெள்ளிக்கிழமை அன்று கதை வாசிக்கும் கூட்டத்தில் இரு கதைஞர்களின் கதைகளை எடுத்து வாசிக்கிறோம். 10 போர்கள் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட இரு கதைஞர்களின் பெயர்கள். எஸ்.வி வேணுகோபாலன், பானுமதி. கலந்துகொண்டு சிறப்பிக்கவும். இது 11வது கூட்டம்.

Topic: சூம் மூலமாக விருட்சம் நடத்தும் பதினொன்றாவது கதை வாசிக்கும் நிகழ்ச்சி

Time: May 14, 2021 06:30 PM

IndiaJoin Zoom Meetinghttps://us02web.zoom.us/j/88495694488…

Meeting ID: 884 9569 4488Passcode: 452384

50வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி 08.05.2021 அன்று சனிக்கிழûமை மாலை 6.30 மணிக்கு நடந்ததின் ஒளிப்பதிவு.

அழகியசிங்கர்



சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 50வது  கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி வருகிற சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு 08.05.2021  நடைபெற்றதின் ஒளிப்பதிவு.


கவிதையை நேசிக்கும் கூட்டத்தில்…

 27.04.2021
துளி – 193

அழகியசிங்கர்

கவிதை நேசிக்கும் கூட்டங்களில் நான் கவிதைப் புத்தகங்களை அறிமுகப்படுத்தும் வழக்கத்தை வைத்திருக்கிறேன்.


49வது கவிதை நேசிக்கும் கூட்டத்தில் 2 கவிதைப் புத்தகத்தை அறிமுகப் படுத்திúன்ன. சுரேஷ் ராஜகோபால் எழுதிய இரண்டு கவிதைப் புத்தகங்கள். 1. ஆர்ப்பரிக்கும் கடல் 2. வாடாமல்லி


நேற்று நடந்த 50வது கவிதைக் கூட்டத்தில் நான் அறிமுகப் படுத்திய கவிதைப் புத்தகம் கரையும் மணித்துளியில் ஒளிரும் நொடிகள். எழுதியவர் மனோஹரி.
சுரேஷ் ராஜகோபால் வாடாமல்லி என்ற புத்தகத்திலிருந்து.
புத்தகங்கள் நடுவிலே


புத்தகங்கள் நடுவிலே நான் பயத்திலே இருந்தேன் என்னருகே புத்தகங்கள் நடுக்கத்தில் இருந்தன புதுசு புதுசாக நூல்கள் வந்தவண்ணம் இருந்ததால் பயம் மட்டும் கூடிக்கொண்டே போயின புத்தகங்கள்போலே


‘கரையும் மணித்துளியில் ஒளிரும் நொடிகள்’ என்ற மனோஹரி கவிதைப் புத்தகத்திலிருந்து,
மீனைக் கொத்திய பறவையின் சிறகைப் பற்றிக்” கொண்டது துளி கடல்….!

நிஜந்தனின் புதிய வெயிலும் நீலக் கடலும்

அழகியசிங்கர்

அழகியசிங்கர் : வணக்கம்.
மோகினியும், ஜெகனும் : வணக்கம்.
அழகியசிங்கர் : நாம் இப்போது நிஜந்தன் நாவலான புதிய வெயிலும் நீலக் கடலும் என்பதைப் பற்றிப் பேசப் போகிறோம்.
மோகினி : அந்த நாவல் 2008ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.
அழகியசிங்கர் ; ஆமாம்.
ஜெகன் : இந்தக் கதை அசோகராஜன் என்ற 40வயதுக்காரன் லதா என்கிற 20 வயதுக்காரியை காதலிக்கிற கதை.
அழகியசிங்கர் : ஆனா லதாவை அசோக் காதலிப்பதாக எந்த இடத்திலும் நாவலில் கூறவில்லை.
மோகினி : அசோகராஜன் லதா என்ற வண்ணத்தியைக் காதலிக்கிறான்.  அவள் அழகாக இருக்கிறாள்.
ஜெகன் : அவள் அம்மா இறந்து விடுகிறாள்.  அந்த ஊர்வலத்தில் அசோக்ராஜா லதாவைப் பார்க்கிறான்.  வளர்ந்த பெண்ணாக அவன் கண்களுக்கு அப்போதுதான் அவள் தென்படுகிறாள்.
மோகினி : அசோகராஜா குறும்படம் எடுப்பவன். நாடகம் அல்லது நதிக்கரை என்ற குறும்படம் முடித்தபோதுதான் லதாவின் அம்மா இறந்து விடுகிறாள்.
அழகியசிங்கர் : இந்த நாவல் முழுவதும் ஒரே பேச்சு.  அதுவும் லதாவுடன்.
ஜெகன் : ஒரு இடத்தில் அசோகராஜா இப்படிக் குறிப்பிடுகிறான்.  ஜெகன் படிக்கிறான். . இதோ இந்தக் கணம் கூட நாம் ஒரு அறைக்குச் சென்று உடலுறவு கொண்டு விடலாம்.  ஆனால் அது வேண்டாம். 
மோகினி : லதாவை வண்ணாத்தி என்று கூறும் அசோகராஜா தான் எந்த வகுப்பைச் சேர்ந்தவன் என்று எங்கும் கூறவில்லை. ஏனோ நாவலாசிரியர் இதைத் தெரியப்படுத்தவில்லை.
அழகியசிங்கர் : அவனுக்குச் சோரன் கீர்க்கிகார்ட் புத்தகத்தைத் தோழி கண்ணகிதான் அறிமுகப்படுத்தினாள்.  அசோகராஜாவிற்கு கீர்க்கிகார்ட் புத்தகம் பிடித்திருந்தது.  கொஞ்ச நாட்களாய் கற்பனையில் மார்க்ஸ் என்ற பாத்திரத்தில் உலாவிக்கொண்டிருந்த அவன் திரும்பவும் அசோகராஜா ஆகிவிட்டான். 
ஜெகன் : அசோகராஜன் தன் வீட்டைவிட்டு வந்தது பற்றிச் சிறப்பாக நாவலில் குறிப்பிட்டிருக்கிறார். அசோகராஜா அக்கா அந்த வீட்டை எடுத்துக்கொண்டிருப்பதாகக் குறிப்பிடப் பட்டிருக்கும். இது குறித்து அசோகராஜாவிற்கு எந்த வருத்தமும் இல்லை.அமைந்தகரை குடியிருப்பில் ஒரு சிறிய குடியிருப்பை எடுத்துக்கொண்டு தங்கியிருக்கிறான்.பக்கத்தில் மாடர்ன் லான்டிரி இருந்தது.அங்குச் சலவைக்குத் துணிப்போட்ட 3ஆம் நாள் மூன்று வயதுக் குழந்தை லதாவைப் பார்க்கிறான்.
மோகினி : லதாவின் அப்பா சோமு அசோகராஜ்ஜைப் பார்த்துத் தான் முன்புபோல் என் மனைவியிடம் சந்தோஷமாக இருக்க முடியவில்லை என்று குறைபட்டுக்கொள்கிறான்.
ஜெகன் : கல்யாணம் ஆகாத அசோகராஜாவிடம் அவன் இதைக் கூறியிருக்கிறான்.
மோகினி : சோமு பைத்தியமாகக் காரணமாக அவனுடைய அப்பா வேலுதான் காரணமாக இருப்பார் என்பதை அசோகராஜா கண்டுபிடித்து விடுகிறான்.
ஜெகன் : ஒரு உறவு மீறல் வாழ்க்கை முழுவதும் சிதைத்து விட்டது என்கிறாள் லதா.  அழகியசிங்கர் : ஒரு கிழவர் தன் மருமகளுடன் உறவு கொள்வது ஒரு சமூக அவலம் என்கிறார் கதாசிரியர். 
மோகினி : சோமுவின் பைத்தியம் முற்றி விடுகிறது.  அதற்குக் காரணம் அவன் மனைவியும் அப்பாவும் வைத்துக்கொண்டிருந்த தகாத உறவு. 
ஜெகன் : கூனி குறுகிப் போய் வேலு வீட்டிலேயே கிடந்திருக்கிறார்.  சோமு தற்கொலை செய்து கொண்டு விட்டான்.
மோகினி : ஒரு குடும்பம் எல்லாவிதங்களிலும் கெட்டுப் போய் விடுகிறது என்பதற்கு உதாரணமாக சோமு, சேகர், வேலு போன்றவர்களில் தகாத உறவுகள் ஒரு காரணமாக அமைகிறது. 
அழகியசிங்கர் : இந்த நாவல் எழுதும்போது எய்ட்ஸ் நோய் உலகம் முழுவதும் பரவி எல்லோரையும் அச்சப்பட வைத்திருக்கிறது.   மோகினி : ஆமாம்.  சேகருக்கு எய்ட்ஸ் நோய் வந்து இறந்தான் என்றுநாவலில்  வருகிறது.
ஜெகன் : அசோகராஜனுக்கு ஏன் லதா அம்மாவிற்கு எய்ட்ஸ் நோய் வரவில்லை என்று சந்தேகம் வருகிறது.  சேகருடன் அவளும் தொடர்பு வைத்துக்கொண்டிருந்தாள் என்றும் அவனுக்குத் தோன்றுகிறது. உண்மையில் அவள் அம்மா புற்று நோயால்தான் இறந்தாள்.
அழகியசிங்கர் : கல்லூரியில் படிக்கும்போது கோபால் என்ற பையனுடன் தொடர்பு ஏற்படுகிறது. அவன் பிடியில் சிக்கித் தவிக்கிறாள். 
மோகினி : இந்த நாவல் சமுதாயத்தில் சீரழிந்து போனவர்களின் வாழ்க்கையைச் சுற்றிச் சுற்றி வருகிறது.
ஜெகன் : கோபாலுக்கும் அசோகராஜாவிற்கும் சண்டை வருகிறது.  கோபால் சண்டை போடுகிறான்.  வயதான அசோகராஜா ஏன் லதாவுடன் அடிக்கடி சுற்றுகிறான் என்பதுதான் வாதம்.
மோகினி : அவள் விரும்பினால் கோபால் திருமணம் செய்து கொள்ளலாம்.  தனக்கும் அதுதான் விருப்பம் என்கிறான் அசோகராஜா.
அழகியசிங்கர் : அசோகராஜனின் அப்பாவிற்கு உடம்பு சரியில்லை.  அவன் அக்கா ராஜஸ்தானுக்கு ஒரு திருமணத்திற்குப் போகவேண்டுமென்று போகிறாள்.  அப்பாவைத் தனியாக விட்டுவிட்டு.  அசோகராஜாவை வீட்டிற்கு வந்திருந்து பார்த்துக்கொள்ள சொல்கிறாள்.  அவன் மறுத்து விடுகிறான். அந்தத் தருணத்தில் அப்பா இறந்து விடுகிறார்.  இருத்தலியல் கொள்கைப் படி பாசம் என்று எதுவும் கிடையாது போலிருக்கிறது.  
ஜெகன் : இந்த நாவலின் அடுத்த கட்டம். கோபால் பற்றியது.  ஏற்கனவே கோபால் திருமணமானவன்.  அவன் லதாவைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறான்.  அவனைத் திருமணம் செய்து கொண்ட பெண் கோபாலை மிரட்டுகிறாள்.  அவனை அவளுடன் வந்து இருக்கச் சொல்கிறாள்.  அவன் முடியாது என்கிறான்.  தன் உடல் மீது தீ வைத்துக்கொள்கிறாள்.  உடனே கோபாலையும் கட்டிப்பிடிக்கிறாள்.  தீக்காயத்தால் அவள் இறந்து விடுகிறாள்.  அவன் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்ந்து பிழைத்து விடுகிறான். கோபால் எப்போதுமே அசோகராஜாவை எரிச்சலுடன் பார்க்கிறான். தீக்காயங்களுடன் மருத்துவமனைக்கு வந்தபோதும் அப்படித்தான் பார்க்கிறான்.  
மோகினி : தொடர்ந்து பல பிரச்சினைகளில் சிக்கிக் கொள்கிறாள் லதா.
அழகியசிங்கர் : இந்த நாவல் முழுவதும் லதா – அசோகராஜா பற்றித்தான்.  அடிக்கடி லதா அசோகராஜாவைப் பார்க்க வருகிறாள். அவளுடைய துன்பத்தையெல்லாம் அவனிடம் சொல்கிறாள்.
மோகினி : நிறைய உபகதைகள்.  இசை ஆசிரியர் செல்வம் வீட்டில் கருக்கலைப்பு செய்துவிட்டுத் தங்குகிறாள் லதா. அங்கு இசை ஆசிரியர் செல்வம் பற்றி செய்தி வருகிறது.
ஜெகன் : முன்பே சொன்னதுபோல் இந்த நாவல் எய்ட்ஸ் பற்றிப் பேசுகிறது.
அழகியசிங்கர் : ஆமாம். சிவலிங்கம் என்ற கதாபாத்திரம்.  பல பெண்களுடன் அவருக்குத் தொடர்பு உண்டு.  அவருக்கு எய்ட்ஸ் நோய் வந்துவிட்டது.  அவர் மனைவிக்கு அது பரவியிருக்கும் என்று நம்புகிறார்.
மோகினி : லதாவிற்கு அசோகராஜா மீது வெறியான காதல்.  அதுதான் அவளை கோபாலை நாடவிடாமல் தடுத்துவிட்டது.  கண்ணகி அவள் கணவனைக் கொன்றது.  அசோகராஜனின் பால்ய கால நக்ஸலைட் நண்பன் அய்யாவு போலீசரால்  என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப் படுகிறார்  முதலில் சிவலிங்கம் மனைவி இறந்து போகிறாள்.  பின் அந்த அதிர்ச்சியில் அவர் இறந்து விடுகிறார்.  அடுக்கடுக்காக மரணங்கள். எத்தனையோ நிகழ்ச்சிகள் இந்த நாவலில் 

ஜெகன் :  இந்த நாவலைப் பற்றி கடைசியாக என்ன சொல்ல வருகிறீர்கள்?
அழகியசிங்கர் : இந்த நாவல் ஒரே மரண ஓலமாகஒலிக்கிறது . லதா அசோகராஜாவிடம் அளவற்ற அன்பு வைத்திருக்கிறாள்.  அவனும் அவளிடம்.  அந்த அன்பு கடைசிவரை வரம்பு மீறவில்லை என்பது ஆசிரியமாக இருக்கிறது.  கோபாலுக்கு அசோகராஜாவின் மீது ஒரே சந்தேகம். லதாவை கோபால் சீரழித்தும்  அவன் அவளை விட முடியாமல் இருக்கிறான்.  பலரிடம் அவன் தொடர்பு வைத்திருந்தாலும் அவன் லதாவை விட முடியவில்லை.  அவனால் அவளிடம் உள்ள தாபத்தைத் தணிக்க முடியவில்லை இதற்குக் காரணம் அசோகராஜாவும் அவளும் பழகிய விதம்.  
இந்தக் கதையின் இறுதிப் பகுதியில் கோபாலைத் தள்ளிவிட அவன் இறந்துவிடுகிறான்.  இது தற்செயலாக நடந்த நிகழ்ச்சிதான்.  கோபால்தான் மூர்க்கமாக அவனைத் தாக்குகிறான். கோபாலைத் தடுத்துத் தள்ளிவிடுவதால் தடுமாறி தலையில் அடிப்பட்டு இறந்து விடுகிறான்.  இந்த இடத்தில் நாவல் ஆல்பெர் கம்யூவின் நாவலான அந்நியனை ஞாபகமூட்டுகிறது.  காரணமில்லாமல் ஏற்படுகிற கொலையில் அதில் வரும் கதாபாத்திரம் ஜெயிலுக்குப் போகிறது.  இங்கு போலீஸ் ஸ்டேஷன் போகிறான் அசோகராஜா.  இறுதியில் வன்முறையில் முடிந்து விடுகிற இந்த நாவல், முதலிலிருந்து கடைசிவரை துயரத்தைத்தான் வெளிப்படுத்துகிறது.  (குவிகம் ஏப்ரல் 2021 மாத மின் இதழில் வெளிவந்த கட்டுரை)