அழகியசிங்கர்
தமிழில் புதிய கவிதையை வகைமையைச் சமீபத்தில் அறிமுகப் படுத்தி உள்ளேன். அந்தக் கவிதை வகைமையின் பெயர் என்பா.
இது வெண்பாவிலிருந்து உருவான கவிதை வகைமை. என்பாவிற்கு முக்கிய இலக்கிய விதிகளை இங்குக் குறிப்பிட விரும்புகிறேன். முதலில் 4 வரிகளில் வெண்பாவைப் போல் கவிதை இயற்றப் பட வேண்டும். ஒவ்வொரு வரியிலும் நான்கு சொற்கள் வெண்பாவைப் போல. கடைசி வரி நாலாவது வரி மூன்று சொற்கள். இதில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது ஒவ்வொரு வரியும் சுதந்திரமானது.
ஒன்றை ஒன்று தொடர்பில்லாதது. வரியில் வெண்பா மாதிர் எதுகை மோனை என்று எதுவும் இருக்கக் கூடாது. இந்தக் கவிதையை ஞாபகம் வைத்துக்கொள்ள முடியாது.
ஆனால் இக் கவிதை உருவாக்கத்திலுள்ள சுதந்திரம் உற்சாகமாக இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம். இதில் முக்கியமாகக் கவிதை எழுதுபவர்கள் வெகு சுலபமாகக் கவிதை எழுதி விடுவார்கள். அத்துடன் இல்லாமல் கவிதையை எழுதத் தெரியாதவர்கள் கூட இங்குக் கவிதை எழுதி விட முடியும். இதோ நான் சில உதாரணங்களைக் குறிப்பிட விரும்புகிறேன்.
நான் எழுதிய கவிதைகள் :
1) வந்தனா வேறு வழியில்லாமல் காதலித்தாள்
வானத்தில் சில பறவைகள் ஏனோ
தூக்கத்தில் கனவு கண்டேன் நான்
என்னவென்று சொல்வது இப்போது
2) வானத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தேன்
தெருவில் மனிதர்கள் நடமாடிக் கொண்டிருந்தார்கள்
மஞ்சள் நிறப்பூக்கள் கண் சிமிட்டின
எல்லோரும் நலமுடன் வாழ்க”””
3) கடைக்குஅவசரமாய் போனான் கோபால்”
பஸ் ஸ்டாப்பில் நின்றாள் சீதா
பாயசம் அமைதியாய்ச் சாப்பிட்டான் கண்ணன்
நிற்காமல் ஓடுகிறது ரயில்.
இதைத் தொடர்ந்து என்பாவை இன்னும் சிலரும் எழுதத் துவங்கி உள்ளார்கள். என் கவிதையைப் படித்துவிட்டு, வசந்ததீபன் எழுதிய என்பா கவிதையை இங்குத் தருகிறேன்.
என்பு போர்த்திய தோல் உடம்பு
பிச்சைக்காரன் கலயம் ஏந்தி செல்கிறான்
கண்ணீர் மழையில் அவள் நனைந்தாள்
நதி போகிறது நிதானமாக
– வசந்ததீபன்
கவிஞர் கு.மா.பா திருநாவுக்கரசு எழுதிய என்பா கவிதை
கண்ணைக் கட்டி காட்டில் விட்டார்
பொய்யைச் சொல்லி பிழைக்க முடியுமா
நடனம் ஆட மோகினி வந்தாள்
முகிலில் மறைந்த நிலா.
– கவிஞர் கு.மா.பா திருநாவுக்கரசு
மதுவந்தி என்பவர் எழுதிய என்பா கவிதை
வளரும் பாதை நடக்க நடக்க
உன்னுள் அமிழ்ந்து, என்னை இறை
செவி ததும்பிக் கசியும் இசை
பிம்பம் விழும் ஓசை
- மதுவந்தி
சிறகு ரவி என்பவர் எழுதிய என்பா கவிதை
நெய் தீபம் ஏந்தி வந்தாள்
சுடர் மிகு அறிவால் அற்பாயுசு
ஆனையின் அம்பாரியில் அம்பானி பாகன்
சிதிலே உறவு வலை –
சிறகு ரவி
உமா பாலு என்பவர் எழுதிய என்பா கவிதை
நெருப்பு விழிகள் பாதம் நோக்க
செருப்பு அதுவாய் பற்றி எரிய
வேகுமுன் கால்கள் விருட்டென விலக
காலம் சகலத்துக்கும் சாட்சி
– உமா பாலு
பூ.சுப்ரமணியன் எழுதிய என்பா கவிதை
அவன் அதிகாலை எழுந்து சென்றான்
அவள் வேலைக்கு அவசரமாகச் சென்றாள்
பிள்ளைகள் பள்ளிக்கு நடந்து சென்றார்கள்
அந்த வீடு அமைதியானது
– பூ.சுப்ரமணியன்
செ.புனித ஜோதி எழுதிய என்பா கவிதை
மேகம் முத்தமிடச் சத்தம்போடும் மழை
கண்களுக்குள் ஒளிந்து கொள்ளும் மின்னல்
ஒற்றைக் கவிவரிகளுக்குள் சிரிக்கும் வானவில்
சன்னலில் எட்டிப்பார்க்கும் நிலா
– செ.புனித ஜோதி
வே.கல்யாணகுமார் என்பவர் எழுதிய என்பா கவிதை.
இமைகள் கண்கள் இனிதாகக் காக்கிறது
தாய்தன் மகளுக்கு மடிதந்து தாலாட்டுகிறாள்
தவறாமலே இரவுபகல் சுற்றிவரும் பூமிப்பந்து
நிற்காமல் ஓடலாம் வா
– வே.கல்யாணகுமார்
என்பாவைப் புரிந்து கொண்டு ஆறிமுகப் படுத்திய இரண்டு மூன்று நாட்களுக்குள் பலர் கவிதைகள் எழுத ஆரம்பித்து விட்டார்கள். தற்செயலாக நான் கண்டுபிடித்தது ஒரு வெற்றியான முயற்சி என்று தோன்றுகிறது.
வெற்று அர்த்தத்தில் கோஷம்போடும் வெண்பாவின் காலம் இனி இல்லை என்று தோன்றுகிறது. என்பா என்ற வகைமை முற்றிலும் சுதந்திரமான முயற்சி என்று தோன்றுகிறது. இதை வாசகர்களும், தமிழ் அறிஞர்களும் ஏற்பார்கள் என்று நினைக்கிறேன். இந்த என்பா அமைப்பு வகைமையைத் தற்செயலாகக் கண்டுபிடித்ததை நினைத்து சந்தோஷம் அடைகிறேன்.
(தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை திண்ணையில் 5 செப்டம்பர் 2021 பிரசுரமானது)