கவிதையும் ரசனையும் – சுகந்தி சுப்ரமணியன் படைப்புகள் – 2

அழகியசிங்கர்

(தொடர்ச்சி …)


இயல்பாகவே படைப்பாளிகள் பலர் அதீத மன இயல்புடையவர்கள்.
இன்னும் பல படைப்பாளிகள் சந்று மனநிலை தெளிவாக இல்லாதவர்கள்.
என் இலக்கிய நண்பர் ஒருவர் இரண்டு புத்தகங்களை நீங்கள் படிக்காதீர்கள் என்று கூறியிருக்கிறார். ஒரு புத்தகம் எம்.வி.வெங்கட்ராம் எழுதிய ‘காதுகள்’ என்ற நாவல். இன்னொரு புத்தகம் கோபி கிருஷ்ணனின் ‘உள்ளேயிருந்து சில குரல்கள்’
சாதாரண மனநிலை உள்ள மனிதர்கள் இதுமாதிரி புத்தகங்களைப் படிக்கும்போது மனம் கலங்கித்தான் போவார்கள்.


இப் புத்தகங்கள் முழுக்க முழுக்க மனநிலை பிறழ்ந்தவர்கள் எழுதிய புத்தகங்கள். அவர்களுடைய பிரச்சினைகளை நாவல்கள் மூலம் கொண்டு வந்துள்ளார்கள்.
சுகந்தி சுப்பிரமணியன் ஒரு கவிதை.


மாறும் ஒரு பூங்காவனம்.


நேரம் தகவாமல் உணவு

வீட்டுக்குள், வெளியே என

விதவிதமாய் உடைகள்

டப்பாக்களில் நிறைந்து வழியும்

மளிகைச் சாமான்

வீடு நிறையப் புத்தகம்

மேஜை நிறைய பேப்பர்கள்

சுவர் முழுக்க சித்திரங்கள்

மாலையானால் டி.வி

காலையும் மதியமும் சமையல்

ஆனாலும் என்ன

இது போதுமா வாழ்க்கைக்கு

மனசைக் காணோமே

என் மனதை நான் தொலைத்தபின்

பிறர் மனசை அறிய மறந்தபின்

நான் உணரும் தவிப்பில்

ஏகப்பட்ட கோடிகள் நஷ்டமானது.


இவ்வளவு வசதிகள் இருந்தும் ஏன் நிம்மதியாக இருக்க முடியவில்லை. ஏனென்றால் மனசை தொலைத்து விடுகிறார். இது ஒரு மனப்பிறழ்வுக் கவிதை.


ஆத்மாநாமின் ஒரு கவிதையைப் பார்ப்போம்.


விடுதலை என்ற கவிதையைப் பற்றிச் சொல்கிறேன்.


கண்ணாடிச் சிறைக்குள்

கண்ணாடிச் சிறை

அக்கண்ணாடிச் சிறைக்குள் நான்
அக்கண்ணாடிச் சிறையைத் திறந்து

வெளி வர முயல்கிறேன்


திறக்கும் வழியே இல்லை

எரிச்சலுற்று

உடைத்து வர

நினைக்கிறேன்

உள்மனப் போருக்குப் பின்

முயற்சியை விடுத்து

சும்மா இருக்க முடிவெடுக்கிறேன்


கண்மூடித் திறக்குமுன்

கண்ணாடிச் சிறையைக் காணோம்

எங்கும் முன்பிருந்த அதே ஒளி


மனப்பிறழ்வு உள்ள ஒருவர் சிறப்பாக

கவிதை எழுதுபவராக இருக்கலாம். சிறப்பாக ஓவியம் தீட்டுபவராக இருக்கலாம். சிறப்பாக இசை நிகழ்ச்சியை நடத்துபவராக இருக்கலாம். சிறப்பாக விளையாடுபவராக இருக்கலாம்.

ஆனால் இவர்களுடைய அடிப்படைப் பிரச்சினை நான். அதைச் சரி செய்ய முடியாது அவர்களால். அவர்கள் படைப்புகளில் தெரியாமல் அது வெளிப்பட்டுவிடும். ஆத்மாநாம் கவிதையாக இருந்தாலும் சரி, சுகந்தி சுப்பிரமணியின் கவிதையாக இருந்தாலும் சரி, மனம் ஒரு பிரச்சினையாகப் போகிறது.


சுகந்தி, என் மனதை நான் தொலைத்தபின்…என்று எழுதுகிறார்.

ஆத்மாநாம், உள்மனப் போருக்குப் பின் முயற்சியை விடுத்து சும்மா இருக்க முடிவெடுக்கிறேன்.என்கிறார். ஆனால் என்ன எல்லோரும் ஏற்றுக் கொள்கிற மாதிரி புதிய கவிதைகளை எழுதியிருக்கிறார் ஆத்மாநாம்.


இந்தப் புத்தகத்தில் சுகந்தி சுப்ரமணியனின் ‘போட்டோ’ என்ற கதை சிறப்பாகப் படுகிறது. எல்லோரும் கவனிக்க வேண்டிய கதை.


இதில் கடைசியாக சேர்த்திருக்கும் டைரிக் குறிப்புகள், படிக்க வித்தியாசமாக இருக்கிறது.
கோபிகிருஷ்ணனின் ‘உள்ளேயிருந்து சில குரல்கள்’ மாதிரி இந்த டைரி குறிப்புகளை ஒரு நாவலாக மாற்றி இருக்கலாம். வித்தியாசமாக இருந்திருக்கும்.


இதில் இரண்டை மட்டும் இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்.


எனக்குத் தோசை சுடத் தெரியலே, மறந்து போச்சு. நேத்து தோசை சுடத் தெரியிலேன்னு ஓன்னு அழுதேன். சத்தம் போட்டு அழுதேன். பெரிசா அழுகை.
****

வீட்டைச் சுத்தம் பண்ணிச் சமையல் பாத்திரம் கழுவி வச்சேன். நாலு மாத்திரை கெடச்சுது. இது கூலியா? சம்பளமா? லஞ்சமா? ****

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன