07.05.2021துளி – 207
அழகியசிங்கர்
டாக்டர் பாஸ்கரனின் பிறந்தநாள் இன்று என்பதை ராமகிருஷ்ணன் மூலமாக முகநூலில் தெரிந்துகொண்டேன்.
முதலில் அவரை வாழ்த்தி விடுகிறேன். நீங்கள் நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன்.
இந்த முறை மூன்று புத்தகங்கள் டாக்டர் பாஸ்கரன் எனக்குக் கொடுத்துள்ளார். அந்தப் புத்தகங்கள் முறையே கிணற்றுக்குள் காவிரி, படித்தேன் ரசித்தேன், சிறுவாணி சிறுகதைகள்.
என்னிடம் இந்த ஆண்டு சேர்ந்துள்ள புத்தகங்கள் குறைந்தது 30வது இருக்கும். இவற்றையெல்லாம் படித்துவிட்டு விமர்சனம் செய்ய வேண்டுமென்று வைத்துக்கொண்டிருக்கிறேன். எப்போது ஆரம்பிக்கப் போகிறேன் என்பது தெரியாது.
ஆனால் கொஞ்சப்பக்கங்களையாவது படித்துவிட்டு எதாவது எழுதலாமென்று நினைக்கிறேன்.
முயற்சி செய்கிறேன்.
படித்தேன் ரசித்தேன் என்ற கட்டுரைப் புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டேன்.
இன்று பலரும் டாக்டர் பாஸ்கரன் எழுதியதைப் போல் புத்தகங்களைப் படித்து புத்தகங்களைப் பற்றி எழுதியிருக்கிறார்கள். நானும் இந்த முயற்சியில் பல ஆண்டுகளாகச் செய்து வருகிறேன். நீங்களும் படிக்கலாம் படிக்கலாம் என்ற பெயரில் 2 தொகுதிகள் கொண்டு வந்திருக்கிறேன். 3வது தொகுதி தயார் நிலையில் உள்ளது. அதன்பின் வாசிப்போம் வாசிப்போம் என்ற பெயரில் ஒரு புத்தகம் வாசிப்பனுபவத்தை வைத்து எழுதியது. அதையும் கொண்டு வந்து விட்டேன்.
புத்தகங்களைப்பற்றிச் சொல்வது மூலம் நம் அறிவை வளர்த்துக் கொள்கிறோம்.
முகநூலில் பலர் இதுமாதிரி புத்தகங்களைப் பற்றி எழுதிக்கொண்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட ஒருவருக்கு ஒருவர் போட்டிப் போட்டுக்கொண்டு எழுதுவார்கள் என்று தோன்றுகிறது.
இப்படிப் புத்தகங்களைப் பற்றி எழுதுவது நல்ல ஆரோக்கியமான முயற்சி. யார் எழுதினாலும் அது தொடர வேண்டும்.
சமீபத்தில் அ.கார்த்திகேயன் என்ற நண்பர் விருட்சம் வெளியீடாக வந்துள்ள பல நூல்களை வாங்கி ஒவ்வொன்றாக முகநூலில் தெரியப்படுத்துகிறார்.
‘படித்தேன் ரசித்தேன்’ என்ற டாக்டர் புத்தகம் 50 புத்தகங்கள் பற்றியது. இந்த 50 புத்தகங்களையும் அவர் படித்து ரசித்ததை சிறப்பான முறையில் அறிமுகப் படுத்தியிருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துகள்.
இன்னும் எத்தனையோ புத்தகங்களை அவர் அறிமுகப்படுத்தி கட்டுரைகள் எழுத வேண்டும். தொடர்ந்து இதுமாதிரி புத்தகங்களையும் கொண்டு வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.வேறு யாரும் கண்டுகொள்ளாத புத்தகங்களை அவர் எடுத்து எழுத வேண்டும்.
21 கதைகள் கொண்ட ‘கிணற்றுக்குள் காவிரி’ என்ற பாஸ்கரின் சிறுகதைத் தொகுப்பு பவித்ரா பதிப்பகம் மூலம் சிறுவாணி வாசகர் மையம் மூலம் வந்துள்ளது. எல்லாப் பத்திரிகைகளிலும் இப்புத்தகத்திற்கான விமர்சனம் வந்துள்ளன. அதுதான் இந்தப் புத்தகத்தின் சிறப்பு.
இத் தொகுப்புள்ள சில கதைகள் விருட்சம் இதழில் வெளிவந்திருக்கின்றன.
ஒவ்வொரு கதைக்கும் பின்னால், மௌனமாய் நிற்கும் மனிதர்களையோ, நிகழ்ச்சிகளையோ, உணர்வுகளையோ என்னால் மறக்க முடியாது – மறுக்கவும் முடியாது என்று குறிப்பிடுகிறார் பாஸ்கரன். உண்மைதான்.
சிறுவாணி சிறுகதைகள் 2020 என்ற புத்தகம் சிறுவாணி வாசகர் மையம் – ரா.கி ரங்கராஜன் நினைவு சிறுகதைப் போட்டி 2020 என்ற பெயரில் 15 கதைகளை எடுத்துப் புத்தகமாகக் கொண்டு வந்துள்ளார்கள்., பாராட்டப்பட வேண்டிய விஷயம். ஜெ.பாஸ்கரன் அலுப்பில்லாமல் இம்மாதிரியான போட்டிகளில் கலந்து கொண்டிருப்பார். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் போட்டியில் நம் கதைகள் தேர்ந்தெடுக்கப்படுகிறதோ இல்லையோ எழுதுபவர்களை உற்சாகப்படுத்துகிற விஷயமாகத்தான் எனக்குப் படுகிறது.
இத் தொகுப்பில் பஜ கோவிந்தம் என்ற பாஸ்கரின் கதைத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊக்கப் பரிசு கிடைத்துள்ளது.
டாக்டரின் இந்த மூன்று புத்தகங்களை முழுவதுமாகப் படித்துவிட்டு என் கருத்துக்களைப் பின்னால் தெரிவிக்கிறேன்.
டாக்டர் ஜெ. பாஸ்கரனுக்கு என் பிறந்த தின வாழ்த்துகள்.