(தொடர்ச்சி)
அழகியசிங்கர்
‘அளவு’ என்ற இன்னொரு கவிதையைப் பாருங்கள்.
அளவு
நீண்ட நாளாய் எதிர்பார்த்த
மழை பெய்தது – ஆனால்
எங்கள் வீட்டு சாய்ந்த
தென்னைமரங்களின்
முதுகு நனையவில்லை.
இந்தக் கவிதையில் கவிகுரலோன் மழை பெய்ததற்காக சந்தோஷப்படத் தோன்றவில்லை. ஏன் எனில் அவன் வீட்டு சாய்ந்த தென்னைமரங்களில் முதுகு நனையவில்லை. இந்தக் கவிதையில் பலர் தன்னைப் பற்றியே நினைத்துக்கொள்வார்கள் என்று சொல்லாமல் சொல்கிறாரா? இப்படிப் பல கேள்விகள் ஒரு கவிதையைப் படிக்கும்போது தோன்றுகிறது. கவிகுரலோன் ஒன்று நினைக்கிறார். வாசகன் இன்னொன்று நினைக்கிறான்.
சின்ன சின்ன வரிகளில் அதிகமாக நாரணோ ஜெயராமன் கவிதைகள் எழுதியிருக்கிறார். இதோ இன்னொரு கவிதை
சஞ்சாரம்
நாங்கள்
எங்கள் பிரச்சினைகளைப் பேசி
தீர்வு காணா நிலையில்””
எங்கள் நிழல்கள் பேசிக்கொண்டன”
எப்படித் தீர்வுகாண முடியும் பிரச்சனைகளால் ? அதற்காக நிழல்களை வம்பிககிழுக்கிறாரோ என்று தோன்றுகிறது.
பொதுவாக ஜெயராமன் கவிதைகளில் இயற்கையைப் பற்றி அவதானிப்பும், தத்துவப்போக்கும் எல்லா கவிதைகளிலும் பரவிக் கிடக்கின்றன.
ஜெயராமனின் புகழ்பெற்ற கவிதைகள் பல உண்டு. ‘லெவல் கிராஸிங்’ அதில் ஒள்று.
லெவல் கிராஸிங்
இந்த
என்ஜினும் ஓர் எல்லையில்
மூச்சடங்கிவிடும்.
அன்றாடக் காரியம் முடித்த
எந்திரத் திருப்தியுடன்.
பேப்பரில் முகம் மறைத்து
பயணம் செய்யும் மாந்தர்
உறங்கப் போவர்
மூட்டையைப் பத்திரமாய்ச் சேர்த்த
நிம்மதியுடன்.
வெறும் தண்டவாள அதிர்வுகள்
சத்தை, குப்பை குவியலில் கண்ணாடித்
துகள் –
என்னில் வாழ்வு ஒளி
இந்தக் கவிதையில் ஒரு ரயில் பயணம் நடைபெறுகிறது. பத்திரமாக என்ஜினும் ஒர் எல்லைக்குப் போய் மூச்சடங்கி விடுகிறது.வெறும் அதிர்வுகளைக் கொடுக்கும் தண்டவாளம். சக்கை, குப்பை குவியலில் கண்ணாடித் துகளைச் சேர்க்கிறது. கடைசியில் ஒரு வரி எழுதி கவிஞர் முடிக்கிறார். என்னில் வாழ்வு ஒளி என்று.
இதில்தான் எல்லாவற்றையும் சொல்லி முடிக்கிறார். எல்லா அவதிகளையும் தாண்டி வாழ்வு ஒளிமயமாக இருக்கிறது.
சில இடங்களில் இவர் கவிதைகளில் வெளிப்படும் வைர வரிகளை வியக்காமலிருக்க . முடியவில்லை.
‘உயிர்’ என்ற கவிதையில்
‘ஓட்டைக் கதவுக்கு கனத்த பூட்டுகள்’
‘தவம்’ என்ற கவிதையில்
‘இமைசொடுக்க விழி மலர்ந்த’
இன்னொரு வரி,
‘அரைத் துஞ்சலில் எருமை.’
‘வேலி மீறிய கிளை’ கவிதைத் தொகுப்பிற்குப் பின் கவிதைகள் எழுதுவதை விட்டு ஒதுங்கி விட்டார் ஜெயராமன். ஆனால் எனக்கு என்ன ஆச்சரியமென்றால் 2011ஆம் ஆண்டிலிருந்து 2018ஆம் ஆண்டு வரை அவர் கவிதைகள் எழுதிக்கொண்டு வந்திருக்கிறார். அக் கவிதைகளை அவர் யாரிடமும் குறிப்பிடவில்லை, எந்தப் பத்திரிகைக்கும் பிரசுரம் வேண்டி அனுப்பவில்லை. இந்தக் குறிப்பிட்ட காலத்தில் நாரோணா ஜெயராமனின் கவிதைகள் முற்றிலும் வேறுபட்டவை..
அவற்றையும் கொஞ்சம் பார்ப்போம்.
‘கடியாரப் பிரக்ஞை’ என்ற கவிதையை எடுத்துக்கொள்வோம்.
வயோதிகத்தில்
மூதாட்டிக்கு,
மணிக்கொரு முறை சிறுநீர்,
ஒவ்வொரு முறையும்
‘பெட்பேன்’ வைத்து
அகற்றுகையில்
மணி என்னவென முனகுகிறாள்
அவஸ்தை நீள
காலம் நீர்க்காமல்
அவஸ்தை மட்டும் நீண்டு கொண்டிருக்கிறது
ஆனால் காலம் அப்படியே நீர்க்காமலிருக்கிறது.
திரும்பவும் சின்ன சின்ன கவிதைகள். மிகக் குறைவான வரிகள் கொண்ட கவிதைகள்.
யூகபாரம் என்ற கவிதை.
விழுந்த நொடியில்
நீர் முத்தின்
ஜாலத்தைப் போல்
காலத்தை
கணங்கணமாய்
கைக்கொள்
ஆனந்தக் கூத்தாடு
சூட்சுமமாய் நொடி எதையும் தவற விடாதே என்று அழுத்தமாய் இந்தக் கவிதை கூக்குரலாய் ஒலிக்கிறது.
மரண சுதந்திரம் என்ற கவிதையைப் பார்ப்போம்.
உயிர் துறந்தாள்
அம்மா
92 வயதில்
உணர்ந்த துக்கமெல்லாம்
அயர்ச்சியெல்லாம்
அவள் பட்ட கஷ்டமோ?
இலேசானது மனசு,
எரியூட்டிய பின்,
ஆன்ம விடுதலையில்
அம்மாவிற்கு ஆன்ம விடுதலை அவள் மரணம் என்று முடிக்கிறார். ‘தோற்றுவாய்’ என்ற கவிதை ஒரு தத்துவ விசாரம்.
இதென்னப்பா?
மனிதர்கள் தாம் தோற்றுவித்த சிக்கலில்
வலிந்து கட்டி
மல்லுக்கட்டி
கூத்தடிக்கிறீர்கள்
பிரபஞ்ச வெளியில்
உன் இடமென்ன? என் இடமென்ன?
உன் காலமென்ன? என் காலமென்ன?
வியந்து, அரவணைத்து
வியாபிக்காமல்?
எங்கோ கொண்டு போய் விடுகிறது கவிதை. வியந்து, அரவணைத்துப் போகாமல் நாம் ஏன் மல்லுக்கட்ட வேண்டுமென்கிறார்.
தன் உள்க் குரலை அவர் பின்னாளில் எழுதிய கவிதைகளில் அழுத்தமாகத் தெரிவிக்கிறார். இக் கவிதைகளைப் படிக்கும்போது வெளிப்படைத் தன்மை அழுத்தமாகத் தென்படுகிறது.
ஒரு நல்ல கவிதைத் தொகுதியைப் படித்த திருப்தி எனக்கு.
(தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை திண்ணையில் 20 ஜூன் 2021 வெளிவந்தது)