ஹைகூ 100…

14.06.2021
துளி – 203

அழகியசிங்கர்

55வது கவிதை நேசிக்கும் கூட்டம் 12.06.2021 அன்று நடைபெற்றது.   வழக்கம்போல் கவிதைப் புத்தகம் ஒன்றை அறிமுகப்படுத்தும் வழக்கம். 


பலருடைய கவிதைப் புத்தகங்களை நான் அறிமுகப்படுத்தி இருக்கிறேன். 
இப்படி அறிமுகப்படுத்துவதால் கவிதைப் புத்தகம் கடகடவென்று விற்குமென்றோ விற்காது என்றோ நான் நினைப்பதில்லை.

ஒரு முறை நான் வெளியிட்ட காசியபனின், ‘முடியாத யாத்திரை’ என்ற கவிதை நூலை இலவசமாகக் கொடுக்கிறேன்’  என்றேன்.  இலவசமாகக் கொடுக்கிறேன் என்று சொல்லிய பிறகு கூட ஒரே ஒருவரைத் தவிர யாரும் அதைக் கண்டுகொள்ளவில்லை

.
        இதை எப்படி எடுத்துக்கொள்வது என்று தெரியவில்லை.


55வது கவிதை நேசிக்கும் நிகழ்வில் நான் அறிமுகப்படுத்திய கவிதை நூல். ஹைகூ 100 என்ற புத்தகம். எழுதியது தங்கம் மூர்த்தி.  
102 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தின் விலை ரூ.80.  மேன்மை வெளியீடாக வந்துள்ளது.


அப் புத்தகத்தில் உள்ள சில கவிதைகளைக் கவி அரங்கத்தில் வாசித்தேன்.
எனக்கு ஹைகூ பற்றி ஒன்றும் தெரியாது.  ஆனால் 3 வரிகளில் ஒரு கவிதை எழுதுவது பெரிய சவால் என்று தோன்றியது.”


ஹைகூ கவிதைகளில் கவிதைக்கு எந்தத் தலைப்பும் இல்லை. 3 வரிகளில் கடைசி வரியை மாற்றி எழுத வேண்டும்.
தங்கம் மூர்த்தி புத்தகத்தில் உள்ள சில கவிதைகளை இங்குத் தருகிறேன்.


கண்ணில்லாதவர்

கையேந்துகிறபோது

நாமெல்லாம் குருடர்கள்                                                               

*****


முதலில் பூத்த ரோஜா

கோவிலுக்கா கூந்தலுக்கா

பூமியின் மடியில் பூ                                                               

*****             

விழிகளில் ஊதி 

தூசி எடுத்தாய்

தூசி வெளியேற

உள்ளே நீ.                                                             

 *******
ஹைகூ கவிதைகளை எளிதாக வாசித்துக்கொண்டே போகலாம்.  ஆனால் எதையும் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியாது போல் தோன்றுகிறது.  

இதைப் படித்து விட்டு நான் ஒரு ஹைகூ முயற்சி செய்யட்டுமா?


கற்பனையில்

வாழ்ந்து வருகின்றேன்

நிஜம் கண்ணெதிரில்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன