துளி – 201
அழகியசிங்கர்
ஒவ்வொரு முறையும் கவிதை வாசிக்கும் கூட்டம் நடத்தும்போது ஒரு கவிதைப் புத்தகம் அறிமுகப் படுத்துவேன். எத்தனைப் பேர்கள் கேட்டு ரசிக்கிறார்கள் என்பது தெரியாது. கவிதைப் புத்தகம் வாங்குவதற்கு ஒரு தூண்டுதலாக இருக்க வேண்டுமென்பதற்காகத்தான் அப்படிக் கூறுவேன்.
54வது முறையாகக் கவிதை வாசிக்கும் கூட்டம் 05.06.2021 அன்று நடந்தது. அக் கூட்டத்தில் ஞானக்கூத்தன் கவிதைகள் என்ற புத்தகத்தை அறிமுகப்படுத்தினேன். காலச்சுவடு பதிப்பகம் கொண்டு வந்த புத்தகம். ரூ895. 823 பக்கங்கள் கொண்ட 682 கவிதைகள். ஆரம்பத்திலிருந்து அவர் மரணம் அடையும் வரை எழுதிய எல்லாக் கவிதைகளையும் தொகுக்கப்பட்டிருக்கிறது.
நான் படித்த கவிதை ‘பக்திக்கு மெச்சினாள்’ என்ற கவிதை. அது சற்று நீளம். ஆனால் அக் கவிதை அச்சாகியிருந்த எதிர் பக்கத்தில் ஒரு நான்கு வரிக் கவிதை இருக்கிறது. அதையும் படிக்க வேண்டுமென்று நினைத்தேன். படிக்கவில்லை. அக் கவிதையின் தலைப்பு ‘சிரிப்பு’. அதை இங்கு தருகிறேன்.
சிரிப்பு
எத்தனை நேரம்தான்
நீடிக்கும் சொல்லுங்கள் ஒரு
விற்பனைப் பெண்ணின்
சிரிப்பு