07.06.2021
ஜூன் 1981ல் வெளிவந்த ‘ழ’ என்ற சிற்றேடு
அழகியசிங்கர்
ழ என்ற பத்திரிகை 1978ஆம் ஆண்டிலிருந்து விட்டு விட்டு 1988 வரை வந்து நின்றுவிட்ட பத்திரிகை. ஆரம்பத்தில் ஆத்மாநாம் ஆசிரியர் பொறுப்பிலிருந்த பத்திரிகை. பின் ஆத்மாநாமிற்குப் பிறகு ஞானக்கூத்தன் பொறுப்பாசிரியராக இருந்து பத்திரிகையை நடத்தியிருக்கிறார்.
நான் இப்போது பேசப்போவது ஆத்மாநாம் கொண்டு வந்த ழவின் 17வது இதழ். தற்செயலாக நான் புத்தகக் குவிலைத் துழாவிக்கொண்டிருந்தபோது இந்த இதழ் தற்செயலாகக் கிடைத்தது.
ழ என்றால் மிக எளிமையான தோற்றம்தான் என்னைக் கவரும்.
மொத்தமே 16 பக்கங்கள்தான் இதழ் இருக்கும். அட்டைப் படம் என்று தனியாக இருக்காது. பல நண்பர்களின் கூட்டு முயற்சியால் நடந்த இதழ் இது.
அரசாங்கத்தில் பணிபுரிபவர்கள், கல்லூரியில் பேராசிரியராக இருப்பவர்கள் என்று பலர் முயற்சியில் ழ பத்திரிகை நடந்து கொண்டிருந்தது.
16பக்க இதழாக இருந்தாலும் ஒவ்வொரு இதழும் மணிமணி யாக இருக்கும்.
இதழ் மீது நமக்கு அலாதியான பக்தியும் மரியாதையும் ஏற்படாமலிருக்க முடியாது. ஒரு புரட்டு புரட்டினால் ழ இதழைப் படித்து முடித்து விடலாம்.
ஆனால் நிதானமாக ஒவ்வொரு பக்கமாகப் பார்க்கலாம்.
ழ இதழில் முக்போவியமாக எஸ்.முரளிதரனின் ஓவியம் வெளிவந்திருக்கிறது. தனியாக இந்த ஓவியத்தை அச்சடிக்கவில்லை. பத்திரிகையின் ஒரு பகுதியாகவே அச்சடிக்கப்பட்டிருக்கிறது.
இதழ் ஜ÷ன் 1981ல் வந்திருக்கிறது. 40 ஆண்டுகளுக்கு முன்னால் வந்திருந்த இதழ் இது. அப்போது இதன் விலை ரூ.0.75 பைசா. ஓராண்டுச் சந்தா ரூ.9.
ழ ஏட்டில் எப்போதாவது தான் தலையங்கம் வரும். இந்த இதழில் வெளிவந்திருக்கிறது.
இதோ தருகிறேன் :
‘அனுபவத்தில் பார்க்கும்போது இன்றைய கவிதைகளுக்கு இளைஞர்களிடையே நல்லவிதமான வரவேற்பும் எதிர் விளைவுகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஒரு நல்ல கவிதையை இனங்கண்டு கொள்ளும் கூர்மைப்படுத்தப்பட்ட உணர்வை இளைஞர்களிடத்தில் எளிதாகவே பார்க்க முடிகிறது. இருந்தும் துரதிர்ஷ்டவசமாக எல்லாத் தயாரான இளைஞர்களுக்கும் கவிதைகள் போய்ச் சேருவதில்லை. அப்படியே போய்ச் சேர்ந்தாலும் தொடர்ந்து கவிதைகளுடன் பரிச்சயத்திற்கான வாய்ப்பு கைவரப் பெறாமல் போகிறது. இரண்டு வழிகளின் மூலமாக இதைச் செய்ய முடியும் என்று எண்ணத் தோன்றுகிறது. ஒன்று கவிதைகளை வெளியிடும் பத்திரிகைகள் கவிதை ஒரு உன்னதமான கலை வெளிப்பாடு என்பதை உணர்ந்துகொண்டு அதற்கான சரியான அந்தஸ்தைத் தரவேண்டும். இரண்டு கவியரங்கங்களில் கவிஞர்களை அவர்களின் கவிதைகளை வாசிக்கச் சொல்லவேண்டுமே தவிர தலைப்புகள் கொடுத்து வாசிக்கச் சொல்லக் கூடாது. இவற்றையே உண்மையான கவிதைகளை இளைஞர்களுக்குக் கொடுக்கக் கூடும்.
அவ்வளவுதான் தலையங்கம். அதன் பின் 16 பக்கங்களிலும் கவிதைகள். கவிதைகள். கவிதைகள்.
கவிதையில் ‘புதிய பார்வைகள்’ என்ற தலைப்பில் ஆனந்த் கட்டுரை. இது முக்கியமான கட்டுரை.
ஒரு இடத்தில் இப்படி எழுதுகிறார் :
‘அன்றாட வாழ்வின் பிரக்ஞை வட்டத்தினுள் கவிதை நிகழ்வதில்லை. கவிஞனின் மனத்தில் கவிதை நிகழும் கணத்தில் அவன் அன்றாட வாழ்வின் கதி முற்றிலுமாக நின்று போகிறது. அக் கணத்தில் கவிஞனின் மனவெளி புதியதொரு பரிமாணத்தில் இயங்குகிறது. கவிதை நிகழ்ந்த பின்னர் கவிஞன் மொழியின் சாத்தியக் கூற்றில் ஒரு ஒழுங்கில் தன் அனுபவத்தை அமைக்கிறான்.’. இந்த இதழில் ஒரு காதல் கவிதை என்ற பெயரில் க.நா.சுப்ரமண்யம் எழுதி உள்ளார். 2 பக்ககங்களுக்கு.
வானம் என்ற தலைப்பில் ஆர்.ராஜகோபாலன் கவிதை வந்திருக்கிறது.
வானம்
ரொம்ப நாளைக்காகப்புறம்
கடற்கரை மணலில்
தனியாக உட்கார்ந்திருந்தேன்
சரியாக இருள் கூடாததால்
வானம் வெறுமையாய்க் கிடந்தது.
என்னைச் சுற்றிலும் மணலில்
கும்பல் கும்பலாய் மக்கள்
வழக்கம்போல்
உல்லாசமாய் ஓடியாடி
கொண்டே குழந்தைகள்.
மற்றபேர் மகிழ்ச்சியாகவும்
சோகமாகவும் தங்களை
உயர்த்திக்கொள்ள உரத்த
குரலெடுத்துப் பேசிக் கொண்டும்.
இப்போதைக்கு எந்தவித
உணர்வும் எனக்கில்லை
ஆனால் மறுபடியும் இங்கு
வரும்போது இவர்களில்
ஒருவராக மாறக்கூடும்
மல்லாந்து படுத்தேன்
எண்ணற்ற நட்சத்திரங்கள்
வானம் முழுவதிலும்
இது ஒரு உள்முகத் தேடல் கவிதை. கடற்கரையில் கூட்டத்தைப் பார்க்கிறார். ஆனால் கூட்டத்துடன் ஒன்ற முடியவில்லை. மல்லாந்து படுத்தேன் எண்ணற்ற நட்சத்திரங்கள் வானம் முழுவதும்.
காளி-தாஸ் அது வேறு உலகம் என்ற தலைப்பில் கவிதை எழுதி உள்ளார். 15 வரிகள்தான் இந்தக் கவிதை. ஒரு பக்கம் முழுவதும் கவிதைக்கான இடம் தந்துள்ளது ழ என்ற சிற்றேடு.
தேவதச்சனின் இரண்டு கவிதைகள். ஒரு கவிதை ‘என்றோ விட்ட அம்பு’, இரண்டாவது கவிதை ஒரு ‘கூழாங்கல்.’
ஐந்து வரிகள்தான் கவிதை.
மனம்
நீராய் ஓட
கீழே,
சூரியனைப் பார்த்துக்கொண்டு
ஒரு கூழாங்கல்
அவ்வளவுதான் கவிதை. சிலை ஒன்றின் சமீப வெற்றிடம் என்ற பிரம்மராஜன் கவிதை. வழக்கம்போல் பிரம்மராஜன் கவிதை ஒரு முறைக்கு இரு முறையாகப் படித்தாலும் புரியாது.
பிரதீபனின் ஒரு கவிதை ஆரம்பிக்கும்போதே கபந்தத்தின் ஓலம் ஒன்று என்று ஆரம்பிக்கிறது.
சுயம் என்கிற தமிழன்பன் கவிதையைப் பார்க்கலாம்.
என்
கூடை நிரம்ப
சொற்கள். .
இறைத்துக் கொண்டே
நடந்தேன்…
ஒவ்வொன்றும்
ஒவ்வொரு ரோஜா …ஆனது
கூடையை
தூக்கி எறிந்தேன்
குப்பென்று இலைகள்..
பின்
என்னை
தூக்கி எறிந்தேன்
முள் முள்ளாய்
முளைத்தது.
இது இன்னொரு உள்முகத் தேடல் கவிதை வகையைச் சேர்ந்தது. படித்தவுடன் இக் கவிதை புரிந்தவிடும். ஆனால் கவிஞன் எங்கோ பயணம் செல்கிறான். கவிதை மூலம் அழைக்கிறான்.
‘உள்ளும் புறமும்’ என்ற ஞானக்கூத்தன் கவிதை. கவிதையின் புதிய பார்வைகள் என்ற தலைப்பின் கீழ் ஆனந்த் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். இரண்டு மூன்று பக்கங்கள் வரை.
கார்ல் சாண்ட்பர்க்கின் வேலி என்கிற பெயரில் ஒரு கவிதை. தமிழில் பரவாசி.
அதேபோல் கேத்லின் ரெய்ன் தன்மை என்ற கவிதை. தமிழில் கன்னி என்பவர் மொழிபெயர்த்துள்ளார்.
இந்த இதழின் 16வது பக்கம் ழ வெளியீடுகளின் விளம்பரங்கள். அவ்வளவுதான் ஒரு இதழ் ஒன்றைப் படித்தாகிவிட்டது.