துளி – 200
..
அழகியசிங்கர்
ஒவ்வொரு வாரம் சனிக்கிழமை கவிதை வாசிக்கும் நிகழ்ச்சி நடத்துகிறேன். அந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கும்முன் விருட்சம் இதழிலிருந்து ஒரு கவிதை வாசிக்கிறேன். பின் ஒரு கவிதைப் புத்தகத்தை அறிமுகப்படுத்துகிறேன்.
29.05.2021 அன்று நடந்த 53வது கவிதை நேசிக்கும் கூட்டத்தில் நான் நாரணோ ஜெயராமன் கவிதைகளை அறிமுகப்படுத்தினேன்.
டிஸ்கவரி புக் பேலஸ் இக் கவிதைத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறது. 200 பக்கங்கள் கொண்ட இப்புத்தகத்தின் விலை ரூ.150.
ஜெயராமன் வெகு காலம் கவிதைகள் எழுதாமலிருந்தார்.எல்லாவற்றிலும் அவர் ஒரு பற்றற்ற நிலையிலிருந்தார். ஆனால் 2011 லிருந்து 2018 வரை கவிதைகள் எழுதி உள்ளார். பின் காலகட்டத்தில் அவர் எழுதிய கவிதைகள் எல்லாம் மரணத்தைச் சுற்றிச் சுற்றி வருவதாக நினைக்கிறேன். எல்லாக் கவிதைகளையும் சேர்த்துப் புத்தகமாக வந்திருக்கின்றன.
அதில் நான் ரசித்த கவிதையை உங்களுடன் பகிர்கிறேன்.
வெட்டவெளி வேட்கை
நினைக்கக் கூடாதென்றிருக்கிறேன்
முன்னும் பின்னும்
புரள்வது ஒழிய
பேசக்கூடாதென்றிருக்கிறேன்
புண்படாமல் இருக்க
மற்றும்
புண்படுத்தாமல் இருக்க
இதெல்லாம் நின்றால்
சித்திப்பது எது,
நம்மால் பெயரிடப்படாத
நமக்கு யாரும் கற்பிக்காத
ஒன்று?
( பிப்ரவரி 02, 2015)