அழகியசிங்கர்
சுஜாதா
ஒரு கதையில் இரண்டு கதைகள்
இரண்டாம் கதை சென்னையில் நடக்கும் கதை. ராதா கோடம்பாக்கம் ரயில் நிலையத்தில் முதல் வகுப்பு பெட்டியில் வந்து ஏறுகிறாள். அவளைத் துரத்திக்கொண்டு வரும் ராமசாமி அம்பு போல், மான் போல் ஓடிவந்து ஏறிக் கொள்கிறான்.
ராதாவைத் தவிர அவன் மட்டும்தான் டைம் புரட்டிக்கொண்டிருந்தாள்.
“ஹலோ ராதா” என்கிறான் ராமசாமி.
அவள் அவனைப் பார்த்தாள். “ஹலோ” என்றாள். உடனே பத்திரிகையில் ஆழ்ந்தாள்.
“ராதா என் கடிதம் கிடைத்ததா?” என்று பேச்சுக் கொடுத்தான்.
“கிடைத்தது. ஸ்டுபிட் லெட்டர்.”
“ஏன் ராதா?”
“அந்த மாதிரி கடிதம் எழுதுவதே அநாகரிகம். முட்டாள்தனம்.”
“நீ கூட எனக்குக் கடிதம் எழுதுகிறாயே ராதா?”
“அது ஒன்றரை வருடத்துக்கு முன். அப்பொழுது நான் முட்டாளாக இருந்திருக்கிறேன்.”
இப்படி அவர்களுக்குள் இந்தப் பேச்சுப் போய்க் கொண்டிருக்கிறது.
இந்தக் கதை இப்படி உரையாடல் மூலம் போய்க் கொண்டிருக்கிறது. ராதா அவனை வெறுத்து ஒதுக்குகிறாள்.
சுஜாதா இப்படி எழுதுவதில் தன் கை வண்ணத்தைக் காட்டுகிறார்.
ஒரு இடத்தில் ராதா இப்படிக் குறிப்பிடுகிறாள். “உங்கள் உலகம் வேறு உலகம். சோழ பரம்பரை. அவர்கள் பேரன்கள், பேத்திகள், சிற்பங்கள், திருப்பளாய்த்துறைச் செப்பேடுகள், நாணயங்கள், அரசர்கள், அவர்களுக்குப் பின் வந்த அரசர்.”
“அவர்கள் எல்லாம் மனிதத் தன்மை நிறைந்தவர்கள் ராதா.”
“அவர்கள் எல்லாம் இறந்து போனவர்கள்”
“இல்லை ராதா. அவர்கள் நம் சரித்திரத்தில் இன்னும் இருக்கிறார்கள்.”
“நீங்கள் இந்தக் காலத்து மனிதர் இல்லை. இது கம்ப்யூட்டர் யுகம். கல்வெட்டு யுகமல்ல. பழமை, பண்பாடு, ஆராய்ச்சி இதெல்லாம் உங்கள் பி.எச்.டிக்குத் தேவை. அவைகளைப் பிறர் மேல் ஏன் திணிக்கிறீர்கள்? என்னைத் தனியா விடுங்கள். இரண்டு பேரும் சந்தோஷமாக இருக்கலாம்.”
இந்த இடத்தில் திடீரென்று ஒரு நிகழ்ச்சியைக் கொண்டு வருகிறார். ரயில் நின்றது. ஓர் ஆசாமி ஏறினார். ராதாவை முறைத்துப் பார்த்துவிட்டு மாற்றோர் ஓரத்தில் உட்கார்ந்தார். மாலைப் பத்திரிகை ஒன்றைப் பிரித்தார். அதன் முன்பக்கத்தில் கொட்டை எழுத்தில் ராதாவுக்கு இன்று விடுதலை என்று அடித்திருந்தது.
ராதா அதைப் பார்த்துச் சிரித்துக்கொண்டார். ஏன் இதை இங்கு சுஜாதா கொண்டு வருகிறார். இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்.எதிரில் வந்த நபர் யார்? இதெல்லாம் கதையில் புரியவில்லை.
ராதா ராமசாமியைத் திட்டி தீர்த்துவிடுகிறாள். “நீ ஒரு போர்” என்கிறாள்.
வண்டி நின்றது. ராமசாமிக்குக் காதுவரை, மூளை வரை ஓர் உஷ்ணம் ஏறியது. சரேல் என்று விலகி இறங்கிவிட்டான்.
அது என்ன ஸ்டேஷன்? எதுவாக இருந்தால் என்ன? ரயில் வேகம் பிடித்து அடுத்தடுத்த ஜன்னல் சதுரங்கள் ஒன்றி மறைந்தன.
இந்த இடத்தில் ராமசாமி மூலம் முதல் கதையை இணைக்கிறார் சுஜாதா. ஒரே இருட்டாக இருக்கிறது. ராமசாமி மூலை திரும்பினான்.
எதிரே தீப்பந்தமா தெரிகிறது… தீப்பந்தங்களா? அவை அவனை அணுகின. ஒரு பல்லக்குத் தெரிந்தது. ஆடி ஆடி அசைந்து அசைந்து அவனை நோக்கி வந்தது. இதோ, மிக அருகில் வந்து விட்டது.
“இளவரசி” என்றான்.
மறுபடி வந்து விட்…திரைச்சீலை விலகியது. மேகலா அவனைப் பார்த்தாள். அதே முகம். அதே ஆசை முகம்.
“நீங்கள் யார்?”
“இளவரசி..என் பெயர் இராமசாமி. இரண்டாவது கதையில் நிராகரிக்கப்பட்டவன்”. இளவரசி அவனைப் பார்த்து முறுவலித்தாள். “நீங்கள் கலைப்பாக இருக்கிறீர்கள். என்னுடன் வாருங்கள். ஏறுங்கள்..பல்லக்கில்.”
அவனைப் பிடித்துத் தூக்கி அவர்கள் ஏற்ற, பல்லக்கில் அவள் எதிரே உட்கார்ந்து அவளைப் பார்த்துக்கொண்டே இருக்க, பல்லக்கு ஆடி ஆடிச் சென்றது. அசைந்து அசைந்து…
ஹைஹோ…ஹைஹோ…ஹைஹோ… என்று கிண்டலாக முடிக்கிறார்.
அட்டகாசமாக முடித்துவிட்டார் கதையை. நான் இப்போதெல்லாம் புத்தகம் படிக்கும்போது, முழுப் புத்தகம் படிக்க முடிவதில்லை. பாதிப் புத்தகம்தான் படிக்க முடிகிறது. அல்லது கால் புத்தகம்தான் படிக்க முடிகிறது. ஆனால் சுஜாதாவின் விஞ்ஞானச் சிறுகதைகளை முழுவதும் படிக்கும்படி தூண்டுகிறார். நான் அவருடைய எல்லாக் கதைகளும் படிக்காலமலி ருக்கப் போவதில்லை.
‘புதுக்கவிதைகளில் சிலவற்றில் சைஃபி கூறுகளையும் பார்க்கிறேன். குறிப்பாக மீராவின் ‘எனக்கும் உனக்கும் ஒரே ஊர் வாசுதேவநல்லுர்’ என்பது தமிழில் முதல் சைன்ஸ்ஃபிக்ஷன் கவிதை. ஞானக்கூத்தனின் மோசிகீரன் கவிதையும் அஃதே. விருட்சம், ழ கவிதைத் தொகுப்புகளில் ஒரு சில சைன்ஸ்பிக்ஷன் கவிதைகளைச் சிங்கப்பூர் தொலைகாட்சியில் படித்துக் காட்டியிருக்கிறேன். என்கிறார் சுஜாதா ‘