அழகியசிங்கர்
இன்று கடைகளுக்குச் சென்று அவசியமான பொருட்களை வாங்கிக்கொண்டேன். கொரோனா உலவும் தெருக்கள் வழியாகத்தான் போக வேண்டியிருந்தது. போஸ்டல் காலனி முதல் தெருவில் நுழைந்து என் நூல்நிலையம் இருக்கும் வீட்டிற்குள் நுழைந்து மொட்டை மாடியில் மாவிலைகள் பறித்துக் கொண்டு வந்தேன்.
உள்ளே நூல் நிலையத்திற்குள் சென்று புத்தகங்கள் பத்திரமாக உள்ளதா என்று பார்த்துக்கொண்டேன். ஒரு கையடக்கப் பதிப்பாகத் திருவாசகத் தெளிவுரை ஒன்றை எடுத்துக்கொண்டு வந்தேன். கழக வெளியீடு. சித்தாந்த பண்டிதர் ப இராமநாதப்பிள்ளை உரை ஆற்றியது.
‘அவனரு ளாளே அவன்தாள் வணங்கி’ என்ற வரி உடனே படித்த ஒரு பக்கத்தில் என்னைப் பிடித்துக்கொண்டது. அப்புறம் ஒரு பழைய இதழ் ‘அட்சரம்’ கண்ணில் பட்டது. படிக்கலாமென்று எடுத்து வைத்துக்கொண்டேன். ஐந்தாவது இதழ் 2003 செப்டம்பர் மாதம் அச்சடிக்கப்பட்ட இதழ்.எஸ்.ராமகிருஷ்ணன் ஆசிரியர் பொறுப்பில் வெளிவந்த இதழ். சிறப்பாக உள்ளது.
இரண்டு புத்தகங்களையும் பையில் போட்டுக்கொண்டேன்.
வீட்டிற்கு வந்து விட்டேன். முகநூலைப் படிக்கும்போது எஸ்.ராமகிருஷ்ணன் பிறந்த நாள் இன்று என்று தெரிந்தது.என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர் அட்சரம் பத்திரிகை எடுத்துக்கொண்டு வந்தது தற்செயலான விஷயம். ஆயிரத்தோரு இரவுகளின் சிறப்பிதழ்.