அழகியசிங்கர்
சமீபத்தில் நகுலனைப் பற்றி பேச்சு வந்தது. நகுலன் சிறுகதை, கவிதை, நாவல், கட்டுரை என்று எழுதியிருக்கிறார். மிகக் குறைவான வாசகர்களுக்காகவே அவர் எழுதியிருக்கிறார்.
1987ஆம் ஆண்டு வெளிவந்த ‘சுருதி’ என்ற புத்தகத்தின் பிரதி ஒன்று கிடைத்தது. இத் தொகுதியில் கடைசியில் இக் கவிதைத் தொகுதி பற்றி நகுலன் இவ்வாறு எழுதியிருக்கிறார்.
‘சமீபத்தில் எனக்கு நேர்ந்த ஒரு அனுபவம் காரணமாகக் கவிதை, கதை, நாவல் இவைகளை எழுதுவது முக்கியமன்றி, அவைகளைப் பிரசுரிக்க வேண்டிய அவசியமில்லை என்று முடிவுக்கு வந்தேன்’ என்று எழுதியிருக்கிறார்.
அவருக்கு என்ன அனுபவம் கிடைத்தது அவர் அப்படி நினைத்தார் என்று தெளிவாகக் குறிப்பிடவில்லை.
36 கவிதைகள் கொண்ட தொகுப்பை தாரணி பதிப்பகத்தின் ஸ்தாபகர் நகுலன் கவிதைகளைப் பிரசுர்த்துள்ளார்.
இன்னொன்றையும் குறிப்பிடுகிறார் நகுலன். ‘ எனக்கு வரும் கடிதங்களிலிருந்து என் கவிதைகளுக்குத் தரமான வாசகர்கள் இருக்கிறார்கள் என்பது மாத்திரமில்லை (இவர்களை எனக்கு முன்பின் தெரியாது), இவர்களில் சிலர் நல்ல கவிஞர்கள் என்பதையும் – பரவலாக அவர்கள் தெரியப்படவில்லை என்பது வேறு விஷயம் – நான் உணர்ந்தேன்.’
இரண்டாவது இந்தத் தொகுதியில் அட்டையில் நகுலன் கவிதைகளைப் பற்றி இப்படிக் குறிப்பிடப்படுகிறது. ‘நவீன கவிதையின் முன்னோடிகளில் ஒருவர் நகுலன்; எழுத் தொடங்கிய நாளிலிருந்து இன்று வரையிலும் ஒரு சீரான தரத்துடன் எழுதி வருகிறவர். வார்த்தைகளுக்குள் சுலபமாக அடைபடாத விஷயங்களையும் தனது கவிதையில் கொண்டுவந்து விடுவது நகுலனின் தனித்துவம். இது உள்ளபடியே இவருடைய மகத்தான படைப்பாளுமையைக் காட்டுகிறது.’
இனிமேல் நகுலன் கவிதைகளுக்குள் போகலாம்.
முதலில் நகுலன் கவிதைகளைப் படிக்கும்போது இன்னும் எழுதியிருக்கக் கூடாதா என்று தோன்றுகிறது.
உன் உலகத்தில் இருப்பது
தான் குதூகலமாக இருக்கிறது
சுசீலாவின்
கடிதத்திலிருந்து என்று எழுதியிருக்கிறார். மிகச் சாதாரண வார்த்தைகளில் ஆழமான கருத்தை முன் வைக்கிறார். இதுதான் நகுலன். இந்த வரிகள் கவிதையைப் படித்தபின் நம் மனத்திற்குள் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கும்.
பெரும்பாலான நகுலன் கவிதைகள் தன் வயமான கவிதைகள். தன்னை உதாரணமாக எடுத்துக்கொண்டு கவிதை இயற்றுகிறார். உதாரணமாக ‘நான்‘ என்ற கவிதையைப் பார்ப்போம்.
வழக்கம்போல்
என் அறையில்
நான் என்னுடன்
இருந்தேன்
கதவு தட்டுகிற மாதிரி
கேட்டது
“யார்?”
என்று கேட்டேன்
“நான்தான்
சுசீலா
கதவைத் திற”
என்றாள்
எந்த சமயத்தில்
எந்தக் கதவு
திறக்கும் என்று
யார்தான்
சொல்ல முடியும்
இதுவும் ஒரு அந்தரங்கமான கவிதை. கவிகுரலோன் சுசீலா வரவை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறான். ஆனால் அவர் எதிர்பார்த்த தருணத்தில் யாரும் கதவைத் தட்டவில்லை. எதிர்பாராதத் தருணத்தில் கதவைத் தட்டுகிறாள். எப்போது கதவு திறக்குமென்று யார்தான் சொல்ல முடியும். கதவைத் திறக்க எப்போதும் காத்திருக்க வேண்டும். கதவைத் தட்டாமலே போய்விடலாம்.
நகுலனின் கவிதையைப் படிப்பவர்க்கு நகுலன் போல் குழப்புவார்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்று நினைப்பார்கள்.
ஆனால் உண்மையில் நகுலன் கவிதை மூலம் வேறு தரிசனத்தை வெளிப்படுத்துகிறார். தனிமை என்ற இந்தக் கவிதையைப் பார்ப்போம்.
தனிமை
நண்பர்கள்
வருகிறார்கள்
வந்த பின்
போகிறார்கள்
தனிமையில்
தள்ளப்பட்ட நான்
அவர்கள்
வந்ததா”
அல்லது
சென்றதா
உண்மையில் உண்மை
என்ற உள் போதத்தில்
என்னிடமிருந்தே
நான்
வந்துகொண்டும்
போய்க்கொண்டிருக்கிறேன்
நகுலனின் இந்தச் சிறப்பான கவிதையில் ஒரு உள் சுழற்சியை உருவாக்குகிறார். மனித மனம் ஒரு நிகழ்ச்சி முடிந்தாலும் அந்த நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக எதையோ நினைத்துக்கொண்டிருக்கிறது. நண்பர்கள் வந்தபோது நேரம் தெரியவில்லை. அவர்கள் போனபின்தான் அதுவும் தனிமையில் விடப்பட்டபோதுதான் தெரிகிறது.
அவர்கள் போனபின்னும் நண்பர்கள் இருப்பதாகவே தோன்றுகிறது.
இன்னொரு கவிதை.
இவைகள்
ஒரு பறவையின் நீலச் சிறகு
உன் உள் நோக்கிய பார்வை
நான் வீட்டைப் பூட்டிச்
சென்று வீடு திரும்பியதும்
வீட்டின் கதவிற்கு
முன் தளத்தில்
தபால்காரன்
விட்டெறிந்த
சிதறிக்கிடக்கும் கடிதங்கள்
என் வருகைக்காகக்
காத்துப் பதுங்கி
முகம் பதித்து
கண்கள் நட்டுக்
காத்திருக்கும்
அந்த மஞ்சள் நிறப்
பூனை.
கவிதையின் ஆரம்பத்தில் ஒரு பறவையின் நீலச் சிறகு கண்ணில் படுகிறது. உடனே உன் உள் நோக்கிய பார்வை என்கிறார். அதாவது அந்த நீல நிறச் சிறகு எப்படி வந்தது என்று யோசித்திருப்பார்போலிருக்குது
ஆனால் வீட்டைப் பூட்டிக்கொண்டு போய் விடுகிறார். திரும்பவும் வருகிறார். முன் தளத்தில் தபால்காரன் விட்டெறிந்த சிதறிக்கிடக்கும் கடிதங்கள். இங்கே அவர் வருகைக்காகக் காத்துப் பதுங்கி முகம் பதித்து கண்கள் நட்டுக் காத்திருக்கும் அந்த மஞ்சள் நிறப் பூனை.
இப்போது இந்த மஞ்சள் நிறப்பூனையையும் ஒரு பறவையின் நீலச் சிறகுடன் ஒப்பிடலாம். பூனையின் வன்முறை நீலநிறச் சிறகாகப் பதிவாகிறது. உள் நோக்கிய பார்வையில் தென்படுகிறது. இந்தக் கவிதை வேற எதுவும் சொல்லாமல் விடப்பட்டு விடுகிறது.
நகுலன் இறக்கும் போது கொரோனா இல்லை. அற்புதமான நேரம். கொரனாவால் நாம் பாதிக்கப்பட்டு வீட்டை விட்டு வெளியே வராமல் தவித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நகுலன் கவிதை என்னைச் சித்திக்க வைக்கிறது. கவிதையைப் படிக்கும்போது இப்படிச் சிந்திக்க வைக்கும்போது அற்புதமான அனுபவத்தைக் கொடுக்கிறது. உள் என்ற கவிதையைப் பார்ப்போம்.
உள்
வீட்டிற்குள்
இருந்தோம்
வெளியில்
நல்ல மழை
ஒரு சொரூப நிலை
என்கிறார். இந்தக் கொரானா காலத்தில் நாம் நம்மைப் பார்க்க வேண்டிய நிலை. எங்கும் போகாமல் நாம் நம்மை உற்றுப் பார்க்கவேண்டிய நிலை. ஒரு சொரூப நிலைதான்.
மிகச் சிறிய வரிகள் கொண்ட கவிதைகளை எழுதியிருக்கும் நகுலன் ஒவ்வொரு கவிதையையும் படித்த பின் நம்மை யோசிக்க வைக்கிறார். நம்மையே நம்மை உற்றுப் பார்க்க வைக்கிறார். வாசகர்கள் தங்களை தானே உற்றுப் பார்க்க வைக்கிறார் நகுலன்
.( திண்ணை மின் வார இதழில் 14.03.2021 ல் பிரசுரமான கட்டுரை).
15Siragu Ravichandran, Suresh Subramani and 13 others3 Comments1 ShareLikeCommentShare