ஒரு கதை ஒரு கருத்து

அழகியசிங்கர்

ஸ்டெல்லா புரூஸ்ஸின் ஐ லவ் எவ்ரிதிங் அண்டர் த ஸன்

மார்ச் ஒன்றாம் தேதி ஸ்டெல்லா புரூஸ் தற்கொலை செய்துகொண்ட தேதி.

18.05.1995ஆம் ஆண்டு ஸ்டெல்லா புரூஸ் ஒரு புத்தகம் கொடுத்தார். அது ஒரு சிறுகதைத் தொகுப்பு. அப்புத்தகத்தின் தலைப்பின் பெயர் கற்பனைச் சங்கிலிகள். 10 கதைகள் கொண்ட தொகுப்பு நூல். நான் உண்மையிலேயே இந்தப் புத்தகத்தை மறந்து விட்டேன்.

இது ரொம்ப மோசமான விஷயம் என்று எனக்குத் தோன்றுகிறது. 95ல் கொடுத்த புத்தகத்தை ஏன் படிக்காமல் விட்டேன்? இது மாதிரி பல புத்தகங்களை நான் படிக்காமல் வைத்திருக்கிறேன். யாராவது கொடுக்கிற புத்தகம் மட்டுமல்ல, நான் வாங்குகிற புத்தகங்களையும் நான் மறந்து விடுகிறேன்.

இந்தப் புத்தகத்தின் முதுகில் எலி கடித்து சற்று வீனாகிவிட்டது. சரி, இந்தக் கதையைப் பார்ப்போம். இந்தக் கதை எப்போது வந்தது என்று தெரியாது. இதுதான் ஞானரதத்தில் வந்த ஸ்டெல்லா புரூஸின் முதல் கதை என்று நினைக்கிறேன். ஜே.கிருஷ்ணமூர்த்தியின் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது.

ஸ்டெல்லா புரூஸ் ஆரம்பத்தில் கிருஷ்ணமூர்த்தியின் தத்துவத்தில் நம்பிக்கை உள்ளவர். என்ன அவருக்கு அந்தத் தத்துவம் பயன்படவில்லை. ‘அப்பாவிற்கு மட்டும்’ என்று கடிதத்தை எழுதிவிட்டு ஓடிப்போனான் என்று ஆரம்பிக்கிறது கதை.

‘வாழ்க்கையில் எனக்குச் சந்தோஷமில்லை என்னைத் தேட வேண்டாம்’ என்று எழுதிவிட்டு ஓடிவிடுகிறான்.அவன் மனைவி சந்திரவதனின் முகத்தில் எப்போதும் பிரபை கொண்டிருக்கும் பிரகாசம். அண்ணன் ஓடிப்போனதால் எதுவும் அணைந்துவிடவில்லை. அவள் எப்போதும்போல் இருக்கிறாள். இந்தக் கதை கல்யாணமாகாத தம்பி மூலம் சொல்லப்படுகிறது.

அண்ணா ஓடிப் போனான் என்றதும் அப்பா நொறுங்கிப் போய்விட்டார். துண்டால் முகத்தை மூடியபடி அழுதார். ‘இந்தப் பொண்ணு என்னடா பண்ணும்?’ என்கிறார் அப்பா.

அப்பாவிற்கு அண்ணியைப் பற்றித் தெரியாது என்கிறார் கதைசொல்லி . தம்பி ராஜாப்பா அண்ணியிடம் பேசுகிறான். அண்ணி சந்திரவதனி ரொம்ப சாதாரண நிகழ்ச்சி மாதிரி அதைக் குறிப்பிடுகிறாள்.

‘எது எப்படி நடந்தாலும் அதை அதை அப்படி அப்படியே ஒத்துக் கொள்கிறவதானே’ என்கிறாள். இன்னொன்றும் சொல்கிறாள் இப்பத்தான அவர் ஓடியிருக்கார்னு நெனைச்சுடாதே. மனசுக்குள் அவர் ஓட ஆரம்பிச்சு ரொம்ப நாளாயிடுத்து என்கிறாள். இந்தக் கதையே தம்பி ராஜாப்பாவிற்கும் அண்ணிக்கும் நடக்கிற உரையாடல்தான்.

அப்படி உரையாடலில்தான கிருஷ்ணமூர்த்தியின்உரையாடல் வெளிப்படுகிறது. உண்மையில் ராஜாப்பா அண்ணியை வழிபடுகிறான். கதையில் சந்திரவதனிக்கும் அவள் கணவனுக்கும் விவாதம் ஏற்படுகிறது. ‘இன் ட்ரூ ùஸன்ஸ் – ஆல் மீனிங்ஸ் – ஆல் மீனிங்ஸ் ஆர் மீனிங்லெஸ் – அதான் நான் சொல்றது. உங்களோட ‘ஸன்ஸ்படி எல்லாத்துக்குமே அர்த்தம் இருக்கு..அது ஒரு பெரிய விஷயமில்லை. அருமையான அர்த்தமோ, ஆபாசமான அர்த்தமோ எல்லாம் ஒண்ணுதான்..இந்த அர்த்தமெல்லாம் என்னாச்சு..ஒரு ஐடியாவிற்கு அனதர் ஒன் ஐடியா..அவ்வளவுதானே? ஒரு ஐடியா என்கிறது ஒரு கற்பனை . ஒரு வார்த்தைங்கறது – வெறும் ஸிம்பல். அப்புறம் என்னத்துக்கு. ஒவ்வொண்ணுக்கும் ஒரு அர்த்தம் சொல்லிண்டு வாழ்க்கையே அர்த்தமில்லாமே ஆக்கிண்டு…?

அவள் பேசப் பேச அவள் கணவன் அதை ஏத்துக்கலை. அவள் மீது அவனுக்கு வெறுப்புதான் வருகிறது. சந்திரவதனி கல்யாணம் ஆகி அவர்கள் வீட்டுக்கு வந்த மறுநாள் – சரியாக விடியக் கூட இல்லை. சூரிய உதயம் பார்க்க அவள் கணவனைக் கடற்கரைக்கு அழைத்தாள். அவன் அதை மறுத்து விடுகிறான். அவன் தம்பி ராஜாப்பாவைக் கூப்பிடுகிறாள்.

அவன் தயங்குகிறான். உடனே அவள், ‘எனக்காக வரவேண்டாம். உனக்கே தோணினா வா.’.என்கிறாள். இதுதான் அவள். தாட்சண்ணியமே இல்லாமல் அவள் இப்படிப் பேசுவது பலரின் மனநிலையைக் காயப்படுத்தி விடுகிறது. அன்றுதான் ராஜாப்பாவிற்கு புதிய ஊற்றுக் கண் திறந்தது. கல்யாணம் ஆகாத ராஜாப்பா ஒரு பெண் எதுமாதிரி தன் மனைவியாக வர வேண்டுமென்று நினைக்கிறான். அண்ணியைப் போல் ஒருத்திதான் தனக்கு மனைவியாக வரவேண்டுமென்று உறுதியாக நம்புகிறான். அண்ணா ஓடிப்போய் இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன.

ராஜாப்பாவின் அப்பா அண்ணிக்காவது ஒரு பேச்சுத் துணைக்காக நீ கல்யாணம் செய்துகொள் என்கிறார்.

ராஜாப்பா இதைப் பற்றி அண்ணியிடம் பேசுகிறான். உடனே அண்ணி, ஆண் – பெண் அப்படிங்கற பேதமே எனக்குக் கிடையாது…என்கிறாள். ராஜாப்பா நினைக்கிறாப்போல ‘என் மன வெளியில் ஒரு வீர்யமான காற்று வீசியது’ என்கிறார் கதாசிரியர்.

பிடிச்சவா பிடிக்காதவான்னு எனக்குள்ளே பிரிவே கெடையது.. என்று அவள் சொன்னதும், அவனுக்குள் சில புதிய ஜன்னல்கள் திறந்து கொண்டன என்கிறார் கதாசிரியர். அண்ணியை ஆராதிக்க ஆரம்பித்து விட்டான் ராஜாப்பா அண்ணி மீது அவனுக்குக் காதல் மலர்ந்து விட்டது. அவளைப் போன்ற பெண்தான் தனக்கு மனைவியாக வரவேண்டுமென்று நினைக்கிறான்.

பீச்சில் இருக்கும்போது அண்ணியின் கையைப் பிடித்துக்கொண்டு, ஸôரி, அண்ணி, இன்னும் என்னாலே என்னையே ஏமாத்த முடியலை. வெளியில சொல்லாமே இருக்க முடியலை. என்னை மன்னிச்சிடு..இந்த உலகத்ல் நான் காதலிக்கிற ஒரே பெண் நீதான் அண்ணி..ஐ லவ் யூ என்கிறான்.

இதைச் சொன்னபிறகு அண்ணியின் முகத்தைப் பார்க்கிறான். எந்தச் சலனமுமின்றி இயல்பான பிரகாசத்தின் மந்தகாசம் கொண்டிருந்தது.. ‘பெண் பத்தின ஐடியல்லோட மொத்த உருவமா நான் இருக்கிறதாலேதான் என்னை மட்டும் நீ லவ் பண்றே’ என்கிறாள் சந்திரவதனி. இன்னும் சொல்கிறாள். ‘ லவ் பண்றது என்பது உன்னையே லவ் பண்றதுங்கறது. உன்னையே லவ் பண்றதுதானே தவிர வேற ஒண்ணுமில்லை.

இந்தக் கதை முழுவதும் ஆங்கிலமும் தமிழிலும் கலந்து எழுதியிருக்கிறார் கதாசிரியர். கிருஷ்ணமூர்த்தியின் தத்துவத்தையும் விடவில்லை. லவ்பற்றி சொல்லும்போது இன்னும் சொல்கிறார். ‘உன்னை மட்டும் லவ் பண்ணவில்லை. இந்தக் கடலை லவ் பண்றேன். அந்தச் சூரியனை லவ் பண்றேன். மிதந்து போகிற மேகத்தை. பறந்து திரியற பறவையை ஆடி அசையற பூவை இப்படிப் பேதமே இல்லாமே எல்லாரையும் எல்லாத்தையும் நான் லவ் பண்றேன்..ராஜப்பா…ஐ லவ் எவ்ரிதிங் அண்டர்த ஸன்’ என்கிறாள். சந்திரவதனி;.

அன்று கடற்கரையில் பேசிவிட்டு வீடு திரும்பும்போது வீடு முழுவதும் விளக்கு வெளிச்சத்தில் மிதந்து கொண்டிருந்தது. அவனுடைய அண்ணா வீட்டிற்கு வந்திருக்கிறான். ராஜாப்பாவும் அண்ணியும் வருகிறோமா என்பதைப் பார்ப்பதற்காக அண்ணா திண்ணையில் வந்து அப்பாவுடன் நின்று கொண்டிருந்தான் என்று கதை முடிகிறது.

இந்த இடத்தில் பெரிய சந்தேகமே வருகிறது. ராஜாப்பாவும் அண்ணியும் வருவதை அண்ணன் எப்படி ஏற்றுக்கொள்வான்? அண்ணியுடன் பழகும்போது அவள் ஒரு பெண் என்று தோன்றுகிறது. அவள் கையைப் பிடிக்கும்போது அவளிடம் தனக்கு செக்ஸ் உணர்வு இருப்பதுபோல்தான் ராஜாப்பாவிற்குத் வெளிப்படுகிறது. என்னதான் ஜே.கிருஷ்ணமூர்த்தி தத்துவம் பேசினாலும் செக்ஸ் என்கிற அடிப்படை உணர்வு போகாது என்று நிச்சயமாக நம்பலாம்.( தமிழின் முதல் இணைய பத்திரிகை திண்ணையில் 07.03.21ல் வெளிவந்தது)

20You, Sundar Gopalakrishnan, Suresh Subramani and 17 others6 CommentsLikeCommentShare

Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன