இன்று ஒரு விசித்திரமான கூட்டம்..

01.03.2021


துளி – 175

அழகியசிங்கர்


நான் புத்தகக் காட்சியில் ஸ்டால் போடவில்லை என்றாலும், எனக்கான புத்தகங்கள் விற்காமல் இல்லை.  மிகக் குறைவாக அச்சிடுவதால் மிகக் குறைவாக விற்கின்றன.
அதைப்போல் என்னிடம் புத்தகம் வந்து சேராமலில்லை . எனக்கு வந்து சேர்ந்த புத்தகங்களைப் பற்றி நான் எழுதாமலில்லை.  அது ஒரு தொடர்கதை மாதிரி. 
பலவிதமாகப் புத்தகங்களைப் பற்றித் தெரிவித்து விடுவேன். மேலும் புத்தகங்கள் பற்றி எழுதும் கட்டுரைகளை என் புத்தகத்தில் சேர்த்து விடுவேன். சமீபத்தில் நான் தீவிரமாக இதில் ஈடுபடவில்லை.  ஆனால் ஓரளவுக்குப்’ படித்து எழுதி விடுகிறேன்

.
இன்று ஜீ.பி சத்யா என்ற என் நண்பர் வித்தியாசமாகப் புத்தக வெளியீட்டு விழா நடத்தினார்.
அவர் ‘தீபாவளிப் பெண்’ என்ற கட்டுரைத் தொகுப்பைக் கொண்டு வந்துள்ளார்.  முகங்கள் 2 என்ற தலைப்பில் கொண்டு வந்துள்ளார்.


புத்தக அறிமுகம் என்ற பெயரில் மேடை என்றில்லாமல் நண்பர்கள் சந்தித்து பரஸ்பரம் உரையாடி புத்தகத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வை இன்றைக்கு உண்டாக்கினார். 
மாம்பலத்தில், ஏரிக்கரைத் தெருவில் உள்ள தி சான்ட்விச் ஷாப் 2.0 கடையில். மிகக் குறைவான நபர்களே வந்திருந்தோம்.


முதலில் வந்திருந்தவர்களுக்கெல்லாம் தன்னுடைய புதியப் புத்தகத்தின் ஒரு பிரதியைக் கொடுத்தார்.  பின் சான்ட்விச்சும், ஒரு ஸ்காட்ச் டீயும் வாங்கிக்கொடுத்தார்.  போட்டோ எடுத்துக்கொண்டார். பின் புத்தகத்தைப் பற்றி யாரும் பேசவில்லை.  ஒரு நண்பர் எம்ஜிஆர் ரசிகர். ஹிந்திப்பாட்டும், சில எம்ஜிஆர் பாடல்களும் பாடினார். 

எல்லோரையும் சத்தியா அறிமுகப்படுத்தினார்.


இந்தச் சந்திப்பு வினோதமாக இருந்தது.  நான் வீட்டிற்கு வந்தவுடன் தீபாவளிப் பெண் என்ற இத் தொகுப்பில் ஒரு கட்டுரையை எடுத்துப் படித்துப்பார்த்தேன்.
அவருடைய வித்தியாசமான நிகழ்வுகள்தான் இந்தப் புத்தகம்.  இதில் உள்ள எல்லாவற்றையும் சத்தியா ஒரு சிறுகதையாக மாற்றி இருக்கலாம்.  ஏனோ அவர் அவ்வாறு செய்யவில்லை.  சத்யா நகுலனுடைய கதைகளைப் படிக்க வேண்டும்.  இத் தொகுப்பில் உள்ள எல்லாவற்றையும் கதைகளாக எழுதியிருப்பார் நகுலன்.


நோக்கியா 6030 என்ற கட்டுரையைப் படித்தேன்.  வாங்கி வந்த நோக்கியா 6030 எங்காவது தொலைந்து விடப் போகிறது என்று பதைப்புடன் படித்தேன்.  நல்லகாலம் தொலையவில்லை.
தன் அனுபவத்தை துல்லியமாக வர்ணித்துக் கொண்டு போகிறார்.  சறுக்கி விழாத நடை. இன்னும் பல கட்டுரைகளைப் படிக்க வேண்டும்..

அவருடைய கதை ஒன்று நவீன விருட்சம் இதழ் (115-116)ல் வர உள்ளது.  இவர் நடையில் ஒரு விசித்திரம் இருக்கிறது.  ஏதோ நடப்பதுபோல் ஒரு அவசரம் இருந்தாலும் ஒன்றுமே நடக்காததுபோல் முடிந்து விடுகிறது. 


தொடர்ந்து எழுத அவரை வாழ்த்துகிறேன்.          

அகல் மின்னிதழ் வெளியீடாக வந்திருக்கும் இந்தப் புத்தகத்தின் விலை : ரூ.140. முகவரியும் தொலைப்பேசி எண்ணும் இப்புத்தகத்தில் குறிப்பிடப்படவில்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன