க.பூரணச்சந்திரனின் கதையியல்



அழகியசிங்கர்


புத்தகக் காட்சியில் வாங்கிய புத்தகம் ‘கதையியல்’ என்ற க.பூரணச்சந்திரன் புத்தகம்.பல உபயோகமான தகவல்கள் இந்தப் புத்தகத்தில் கண்டெடுத்தேன்.
பொதுவாக ஒரு புத்தகம் குறிப்பாகக் கட்டுரைப் புத்தகம் ஆரம்பத்தில் இருப்பதுபோல் புத்தகத்தைப் படித்து முடிக்கு முன் இருப்பதில்லை.
க.பூரணச்சந்திரனின் புத்தகமும் விதிவிலக்கல்ல.இது என்ன காரணம் என்றால் ஆரம்பத்திலேயே பூரணச்சந்திரன் சொல்ல வேண்டிய தகவல்களை சொல்லி முடித்து விடுகிறார். பின்னால் ஏற்கனவே சொன்னதைச் சொல்கிறாரோ என்று என் மனதிற்குப் பட்டது.
இதோ இப் புத்தகத்திலிருந்து உபயோகமான கருத்துக்களை தங்கள் முன் சொல்ல விரும்புகிறேன்.200 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தில் 15 பகுதிகளாகப் பிரித்து எழுதியிருக்கிறார்.’வாழ்க்கை விளக்கமும் தப்பித்தலும்’ என்ற தலைப்பில் முதல் அத்தியாயத்தை எழுதியிருக்கிறார்.அதில் கவனிக்கவேண்டிய சில பகுதிகளை இங்குத் தருகிறேன்.
கதைகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம் என்கிறார்.
1. வெறும் இன்பத்திற்கான பொழுது போக்குவதற்கான இலக்கியம் ஒரு வகை.
2. வாழ்க்கையில் சற்றே வெளிச்சத்தையும் ஈடுபாட்டையும் ஆழ்நோக்குகளையும் நல்லுணர்வுகளையும் அளிக்கக்கூடிய இலக்கியம்.,
முதல் வகை இலக்கியத்தைத் தப்பிப்பு இலக்கியம் என்கிறார். இரண்டாவது வகையை வாழ்க்கை விளக்க இலக்கியம் என்கிறார்.
இப்படி இருவகை இலக்கியம் இருக்கிறது என்று சொல்லும்போதே இரண்டு வகை வாசகர்களும் இருக்கிறார்கள் என்பதும் பெறப்படும். முதிர்ச்சி குறைந்த வாசகர்கள் முதிர்ச்சி பெற்ற வாசகர்கள் என்று அவர்களுக்குப் பெயரிடலாம்.
முதிர்ச்சி குறைந்த வாசகர்கள் என்பதை ஒரு கீழான அல்லது வசைக் சொல்லாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை.
ஆனால் வயது முதிர்ந்த பிறகும் பல வாசகர்களுக்குத் தேவதை கதைகளுடைய மாற்றுகள்தான் தேவைப்படுகின்றன. அவை ருசிகரமாக இருக்கின்றன. இவர்களுக்கும் ஒரு கதாநாயகன் வந்து இருபத்தைந்து பேரோடு சண்டைபோட்டு இரண்டு மூன்று பெண்களுடன் காதல் செய்து களிப்போடு பூங்காக்களில் ஓடியாடி சில வில்லன்களை ஒழித்துக்கட்டி சபமாக வாழ்க்கை நடத்த வேண்டியிருக்கிறது. ஆகவே இந்த வகையான வாசகர்கள் வாழ்க்கையில் முன்னோக்கிச் செல்வதற்கு மாறாக, தங்கள் குழந்தைப் பருவத்திற்குப் பின்னோக்கிச் செல்கிறார்கள்.
முதிர்ச்சி இல்லாத வாசகர்களைப் பற்றி பட்டியிடுகிறார் ஆசிரியர்.
அவர்கள் ஒவ்வொரு கதையிலும் தங்கள் குறித்த சில தேவைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
அப்படி இல்லாமல் போனால் ஏமாற்றமடைகிறார்கள்.பல சமயங்களில் ஒரே மாதிரியான விஷயங்களைக் கதையில் எதிர்பார்க்கிறார்கள்.
உதாரணமாகச் சாகசக் கதைகள், விளையாட்டுக் கதைகள், காதல் கதைகள், குற்றக் கதைகள் எனப் பெயர்கள் கொண்ட ஒரே விதமான கதைகளைப் படிக்கிறார்கள். ஒரே ஃபார்முலாவில் அமைந்த கதைகள் அவர்களுக்கு இன்பமளிக்கின்றன.
தப்பிப்பு இலக்கியங்களின் பொதுப் பண்புகளை விவரித்துக் கொண்டு போகிறார் நூலாசிரியர்.நமது வாழ்க்கை அனுபவத்தை விரிவுபடுத்துவதற்கும், நமது ஞானத்தைப் பரவலாக்கிக் கொள்வதற்கும் இவை உதவுவதில்லை என்று கூறுகிறார்.
நுணுகிப் பார்க்கும் வாசகர்கள், தப்பிப்பை முன்னிறுத்தும் கதைகளை விட, வாழ்க்கையைக் காட்டும் இலக்கியங்களைத்தாம் விரும்புகிறார்கள். தப்பிப்பு இலக்கியத்தை அவர்கள் விரும்புவதில்லை, படிப்பதில்லை என்று கூற முடியாது. ஏனென்றால் தப்பிப்பு இலக்கியம் எல்லாமே மலிவானதாகவோ, மிகச் சாதாரணமானதாகவோ இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை.
இந்தப் புத்தகம் சில அறிவுரைகளையும் கூறுகிறது. நாம் வாசிக்கும் எந்தப் புத்தகத்தையும் எப்படி மிகச் சிறப்பாகப் பயன் படுத்திக் கொள்வது என்று அறிந்துகொள்ள வேண்டும். இந்தக் கருத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன்.
இதற்குக் கதைகள் மட்டுமல்ல, கதையில்லா வாசிப்பும் முக்கியம். புனைகதை, புனைகதையல்லாதவை என்னும் இரு துறைகளிலும் நல்ல வாசிப்பு இருப்பது அனுபவங்களை அளித்தும், அறிவை விசாலப்படுத்தியும் மனதைச் செழுமைப்படுத்தும்.ஒன்றை இலக்கியமாகப் பார்க்கப்பட வேண்டுமென்றால் மற்றப் படைப்புகளுடன் தொடர்புப் படுத்திப் பார்க்க வேண்டுமென்கிறார்.
கதையியல் என்ற புத்தகத்தில் முக்கியமாக 15 அத்தியாயங்கள் எழுதியிருக்கிறார். முதல் அத்தியாயம்தான் எனக்கு முக்கியமாகப் படுகிறது.
கதையியல் என்ற இப் புத்தகத்தின் விலை ரூ.180. அடையாளம் வெளியீடாக இப்புத்தகம் வந்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன