துளிகள் – 164
.
அழகியசிங்கர்
கல்கி நடத்தும் சிறுகதைப் போட்டியை நான் எப்போதும் மதிப்பேன். நான் மூன்று முறை அந்தப் போட்டியில் கலந்து கொண்டிருக்கிறேன். ஒரே ஒரு முறை ஆறுதல் பரிசு வாங்கியிருக்கிறேன்.
பல ஆண்டுகளுக்குமுன் நடந்த போட்டி அது. என் பெயர் குழப்பத்தால் அந்தப் போட்டிக்கான பரிசுத் தொகையான ரூ.75 என் நண்பர் எஸ்.சந்திரமௌலி க்குப் போய்விட்டது. அழகியசிங்கர் என்ற புனைபெயராக இருந்தாலும் என் இயற்பெயர் எஸ்.சந்திரமௌலி. .
ஏதோ பணம் அனுப்ப மறந்து விட்டார்கள் போலிருக்கிறது என்று நான் கூச்சப்பட்டு பரிசுத் தொகையைக் கேட்காமலிருந்தேன். பின் ஒரு நாள் தயக்கத்துடன் கேட்டேன். கல்கி அலுவலகத்தில் அதுதான் கொடுத்தாகி விட்டதே என்றார்கள்.
அப்போதுதான் தெரிந்தது நபார்டில் பணிபுரிந்து கொண்டிருந்த எஸ்.சந்திரமௌலிக்கு அந்தத் தொகைப் போயிற்று என்று.
இந்தப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுப் பெறுவதென்பது நடக்காத காரியம். அதனால்தான் நான் எப்போதும் ஒன்று சொல்வேன்.
சமீபத்தில் கூட நான் வழக்கம் போல் மூன்றாவது முறையாக ஒவ்வொரு ஆண்டும் போட்டி நடத்தும் ஒரு வாரப்பத்திரிகைக்கு சிறுகதையை அனுப்பியிருந்தேன்.வாரப்பத்திரிகை ஒரு பிரபல எழுத்தாளருடன் சேர்ந்து நடத்தும் போட்டி அது. . அதேபோல் பாரதிக்கு ஒருவாரம் விழா நடத்திய ஒரு அமைப்பு கூட சிறுகதைக்கான போட்டி நடத்தியது. அதிலும் கலந்து கொண்டேன். என் வசம் இப்போது இரண்டு கதைகள் சேர்ந்து விட்டன. முடிவைக் குறித்து எனக்கு அக்கறை இல்லை.
ஒரு காலத்தில் கணையாழி தி ஜானகிராமன் பெயரில் நடந்த குறுநாவல் போட்டியில் ஒவ்வொரு ஆண்டும் பரிசுப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டு என் குறுநாவல் பிரசுரமாகும்.12 மாதங்களும் ஒவ்வொரு எழுத்தாளரின் குறுநாவல்களைப் பிரசுரம் செய்தார்கள். பரிசுத் தொகை கணையாழி பத்தாண்டு இலவசமாக அனுப்புவதாகக் கூறினார்கள். ஆனால் ஓராண்டுகூட முழுசாக கணையாழி கிடைக்கவில்லை. இது 1988ஆம் ஆண்டில் நடந்தது. இதுமாதிரி 6 ஆண்டுகள் என் குறுநாவல்கள் பிரசுரமாயிற்று.
சமீபத்தில் கல்கி ஆசிரியர் ரமணன் என்னை போனில் அழைத்து இறுதிச் சுற்றில் உள்ள கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டி – 2020 கதைகளைத் தேர்ந்தெடுக்கும்படி கேட்டுக்கொண்டார். என்னுடன் எழுத்தாளரும் மொழி பெயர்ப்பாளருமான பத்மஜா நாராயணனையும் கேட்டுக்கொண்டார்.
மொத்தம் 26 கதைகள். கதைகள் எனக்குக் கிடைத்தவுடன் நான் படிக்கத் தொடங்கிவிட்டேன். நாலைந்து நாட்களில் எல்லாக் கதைகளையும் படித்துவிட்டேன். ஒவ்வொரு கதையாய் படித்து ஒரு மதிப்பெண் போட்டேன்.
சுருக்கமாக ஒவ்வொரு கதையைப் பற்றிக் குறிப்புகள் எழுதிக்கொண்டேன். இது சி சு செல்லப்பா மெத்தட். அவர் பி எஸ் ராமையாவின் கதைகளை அப்படித்தான் அலசி இருப்பார்.
26 கதைகளில் 13 கதைகள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். பெரும்பாலான கதைகள் சிறப்பாக எழுதப்பட்டிருந்தன. ஒரு சில கதைகள் தவிர எல்லாக் கதைகளையும் என்னால் விட முடியவில்லை. அவ்வளவு தரமாக இருந்தன கதைகள் எல்லாம். தொடர்ந்து பல ஆண்டுகளாக நடத்தும் கல்கி பத்திரிகையைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
எனக்கு வாய்ப்பளித்த கல்கி ஆசிரியருக்கு என் நன்றி. கூடவே அமிர்தம் சூர்யாவிற்கும்.