22.12.2020
துளிகள் – 162
அழகியசிங்கர்
2017ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி அப்பா இறந்து விட்டார். அவருடைய திதி இன்று.
சாதாரண மனிதர். சாதாரண ஆசைகள் கொண்டவர்.
ஒரு மரக் கட்டிலில் மெல்லிசான போர்வையைப் போர்த்திக்கொண்டு தூங்குவார்.,
பெரும்பாலும் தூங்கிக்கொண்டிருப்பார். அவர் பொழுதுபோக்கு டிவி பார்ப்பது.
எப்போதும் நான் அப்பாவுக்கு கிலி ஏற்படுத்தி விடுவேன். எல்லாம் புத்தகங்கள்தான்.
அப்பா கட்டிலுக்கு எதிரில் நான் வைத்திருக்கும் புத்தகங்களைப் பார்க்கும்போது அவருக்குக் கோபம் வந்துவிடும். கோபத்தில் ஒன்றும் பேச மாட்டார்.
புத்தகம் வாங்கி இப்படிச் சேர்ப்பது பிடிக்காது.
இப்போது உயிரோடு இருந்தால் அவருக்கு ரத்தக் கொதிப்பு வந்து விடும். நான் சேர்த்து வைத்திருக்கும் புத்தகங்களைப் பார்த்தால்
ஏனென்றால் வழக்கமாக அவர் படுக்கும் கட்டில் முழுவதும் புத்தகங்களைச் சேர்த்து வைத்திருக்கிறேன். புத்தகங்கள் சேர்ந்து சேர்ந்து மலை மாதிரி குவிந்து கிடக்கிறது.
அப்பா ஒரு ஹோமியோபதி மருத்துவர். எல்லோருக்கும் மருந்து இலவசமாகக் கொடுத்து விடுவார்.
அசோகமித்திரன் போன் செய்யும்போது அப்பா போனை எடுத்து ஹோமியோபதி மருந்துகளைப் பற்றி ஒரு குட்டிப் பிரசங்கம் செய்வார்.
என் நண்பர்கள் வந்தால் அவரும் பேச உட்கார்ந்து விடுவார். எனக்குச் சங்கடமாக இருக்கும். நடுவில் நான் நடத்திக்கொண்டிருக்கும் விருட்சம் பத்திரிகையைப் பற்றியும் வெளியிடும் புத்தகங்கள் பற்றியும் ஒரு குட்டு குட்டாமல் இருக்க மாட்டார். நண்பர்கள் சிரிப்பார்கள்.
நண்பர்களுக்கு டீ போட்டுக் கொண்டு வருவார்.அவருக்கு டிபன் பண்ணுவது, டீ போட்டுக் கொடுப்பதென்றால் ரொம்பவும் பிடிக்கும்.” என் அலுவலக மாற்றலுக்காகத் தமிழில் என் வங்கியின் எம்டிக்கே கடிதம் எழுதிப் போட்டு விட்டார்.. இதை என்னிடம் கூடச் சொல்லவில்லை..
ஒருநாள் நோட்புக்கில் எம்டிக்கு எழுதி இருந்ததைப் பார்த்து விட்டேன். படித்தவுடன் எனக்கு வெட்கமாக இருந்தது.
அப்பாவை சோனி கேமரா மூலம் காணொளி எடுத்திருந்தேன். அதை இப்போது பார்த்தேன். அப்பா திரும்பவும் வந்து விட்டாரென்று தோன்றியது. நான் எப்போதும் என் உறவினர்களிடம் சொல்வேன். குடும்பம் ஆல்பம் ஒன்றை நாம் தயாரித்து வைத்திருக்க வேண்டுமென்று. அது காணொளியா ஆடியோவா இருந்தால் சரி என்று.
அப்பா ஜனவரி மாதம் 5ஆம் தேதி 2017ல் இறந்து போனார். ஆறாம் தேதி புத்தகக் கண்காட்சி ஆரம்பம். என் நண்பர்கள் புத்தகக் காட்சியைப் பார்த்துக் கொண்டார்கள்.
என் கதைகளில் முக்கியமான கதாபாத்திரம் என் அப்பாதான். இப்போது வந்துள்ள DAD’S FAVOURITE NEWSPAPER என்ற புத்தகத்தைப் பார்க்க அப்பா இல்லை.