அழகியசிங்கர்
மாலை 6 மணி. ஸ்வர்ணகுமாரி தனியாக இருக்கிறாள். ஹேமசந்திரனைச் சந்திக்கத் தயாராக இருக்கிறாள். அவர்கள் இருவருக்கும் நடக்கும் உரையாடலைப் பாரதியார் எழுதியிருக்கிறார்.ஹேமசந்திரனைப் பார்த்து அவனை மணக்க தனக்குச் சம்மதமில்லை என்கிறாள். அப்பாவின் பலவந்தத்தின் பேரில் விவாகம் செய்து கொள்வதாகக் கூறுகிறாள்.அவளைத்தானே விவாகம் செய்து கொள்ளப் போகிறோமென்று தப்பாக நடந்துகொள்ளப் போகிறான்.
கொடி மாடத்திற்குப் பின்னே புதரில் பதுங்கி நின்ற மனோரஞ்சனன் கையும் தடியுமாக வந்து ஹேமசந்திரனை பிடித்து வெளியே தள்ளி நையப் புடைத்தான். இந்தக் கலவரத்திலே தந்தையாகிய ஸ÷ர்யபாபுவும் வந்து விட்டான்.
இந்தச் சம்பவத்தைப் படிக்கும்போது தமிழ் சினிமாவில் வில்லன் கதாநாயகியைக் கற்பழிக்கும்போது எங்கிருந்தோ கதாநாயகன் தோன்றி கதாநாயகியைக் காப்பாற்றி விடுவான். அது மாதிரி தோன்றுகிறது.
நம் குடும்பத்திற்குப் பெரிய பாதகம் இழக்க இருந்த பாதகனுக்கா நாம் பெண்ணை கொடுக்க இருந்தேன் என்று சூரியகாந்த பாபு நினைத்தார்.அவள் அப்பா மனோரஞ்சனனிடம் ஒன்றே ஒன்று சொல்கிறார்.
அவன் ஹிந்து மார்க்கத்தினின்றும் நீங்கிப் பிரமஸமாஜத்தில் சேர்ந்து கொள்ளும் பட்சத்தில், அவனுக்கு தன் பெண்ணைக் கொடுப்பதாகச் சொல்கிறார்.அவனுக்கோ தாயினிடத்து அன்பு ஒரு புறமும், அவனது ஸ்வர்ண குமாரியின் மீது மையல் மற்றொரு புறமாக இருக்கிறது. ஸவர்ணகுமாரியம் பிடிவாதமாக அவனைத் தவிர வேற யாரையும் விவாகம் செய்யாமலிருக்கத் தீர்மானித்தாய்.இப்படியே ஒன்றரை வருடம் ஆகிவிட்டது.
இப்படியிருக்க 1906ஆம் வருஷம் கல்கத்தாவிலே காளி பூஜை திருவிழா நடந்து கொண்டிருந்த (நவராத்திரி) காலத்திலே, ஸ்வர்ண குமாரி தனது வீட்டு மாடியிலே ஒரு பஞ்சணை மீது சாய்ந்து கொண்டு ஸந்தியா என்னும் தினசரி பத்திரிகை படித்துக் கொண்டிருந்தாள். அதில் திடீரென அவளது கண்களுக்குப் ஒரு குறிப்பு பட்டது.மனோரஞ்சித பானர்ஜி பிரம ஸமாஜத்தில் சேர்ந்து விட்டாரென்று.
அவள் ஆனந்த பரவசத்திலே ஆழ்ந்து விட்டாள். பத்திரிகையிலே வேறு ஒரு இடத்தில் அவன் பெயர் தட்டுப்பட்டது. அதில் லோகமான்ய பால கங்காதர திலகருக்கு விரோதமாக சில வாலிபர்கள் மனோரஞ்சன் பானர்ஜியின் கீழ் கூட்டம் கூடியது என்று.இதைக் கண்டவுடனேயே ஸ்வர்ணகுமாரிக்கு மனம் பதைத்து விட்டது.
குழந்தை முதல் பால கங்காதர திலகரைத் தெய்வம் போலக் கருதி வந்தாள். மனோரஞசனனிடமிருந்த அன்பைக் காட்டிலும் சுதேசத்தின் மீதுள்ள் அன்பு பதினாயிர மடங்கு வன்மையுடையது. பாலகங்கதர திலகருக்கு விரோதமாக இருப்பவர்களைப் பக்கத்தில் சேர்க்க மாட்டார்.
பொதுவாக நான் படித்த இரண்டாவது பாரதி கதைகளில் அவர் தேசத்தை ஒரு பகுதியாகக் கதையில் கொண்டு வருகிறார். தேச அபிமானம்தான் கதையில் முக்கிய பங்கு வகிக்கிறது. இன்று கதை எழுதுபவர்கள் இதுமாதிரியான தேசத்தில் நடக்கிற விஷயங்களை இணைப்பார்களா என்று தெரியவில்லை.
அப்படியே இணைத்தாலும் அவற்றைப் படிப்பதற்கு ஏதுவாக இருக்குமா என்பது தெரியவில்லை.தன் கண்போன்று இருந்த ஆசை மகன் ஹிந்து மதத்தை விட்டு விலகிப் போய் விட்டான் என்பதை அறிந்தவுடன் மனோரஞ்சனனுடைய அம்மா இறந்து விட்டாள். அந்த அளவிற்குத் தீவிர ஹிந்து வெறியாளராக அம்மா பாத்திரத்தை உருவாக்கியிருக்கிறார் பாரதி.
அம்மா இறந்து போன செய்தியைக் கேட்டு அலறிக்கொண்டு சாந்த்பூருக்கு வருகிறான் மனோரஞ்சனன். தாயின் கிரியைகளையெல்லாம் ஹிந்து ஆசாரங்களின்படி ஒரு பந்துவின் மூலம் நிறைவேற்றுகிறான். ஸ்வர்ண குமாரியைப் பார்க்கச் செல்கிறான்.
அவள் அவனுக்கு ஒருகடிதத்தை எழுதிவிட்டு காசிக்கு அவள் அத்தை வீட்டிற்குப் போய்விட்டாள். ஒரு வருடம் என்னைப் பார்க்க வராதே என்று எழுதியிருக்கிறாள்.ஸ்வஜனத் துரோகிகளின் கூட்டத்தில் சேர்ந்து விட்டதால் அவன் சவகாசமே வேண்டாமென்று ஒதுக்கி விடுகிறாள். அவன் திருந்தியபிறகுதான் பார்க்க விரும்புவதாகக் கடிதத்தில் குறிப்பிடுகிறாள். அதுவரை அங்கே அவன் வந்து பாராதிருக்கும்படி பிரார்த்தனை செய்து கொள்கிறாள்.கடைசியில் பாரதியார் இப்படி முடிக்கிறார்.
இப்போது மனோரஞ்சனன் பூனாவிலே திலகரிடம் தேச பக்திப் பாடங்கள் படித்து வருகிறான் என்று.இந்தக் கதையைப் பற்றிப் பின்வருமாறு முடிவுக்கு வருகிறேன்.-
இந்தக் கதை 1906 ஆம் ஆண்டில் எழுதியிருக்கலாமென்று தோன்றுகிறது.-
கதை வெகு சுலபமாகப் புரியும்படி எழுதப்பட்டிருக்கிறது.- அந்தக் காலத்தில் ஜாதி அபிமானம் மரணம் வரை சென்று விடுகிறது.-
கதாலுடன் தேசப்பக்தியை இணைக்கிறார் கதாசிரியர்.- பெரும்பாலும் பிராமண குடும்பச் சூழ்நிலையை மையப்படுத்தி எழுதப்பட்டிருக்கிறது.-
கதையில் சமஸ்கிருதச் சொற்கள் அதிகமாகக் காணப்படுகிறது.இன்னும் அதிகமாகப் பாரதியார் கதைகளைப் படிக்கலாமென்று நினைக்கிறேன்.
நேற்றும் இன்றும் இரு பகுதிகளாக வெளிவந்த கட்டுரை.
(தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை திண்ணையில் 13 டிசம்பர் 2020 அன்று வெளியான கட்டுரை)