அழகியசிங்கர்
போன வாரம் மொழிபெயர்ப்புக் கவி அரங்கம் ஒன்றை நடத்தினேன். வாராவாரம் நான் கவி அரங்கம் நடத்துவது வழக்கம். கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டுமே என்று மொழிபெயர்ப்புக் கவிதை அரங்கத்தை நடத்தினேன்.
நானும் படிப்பதற்காக மொழிபெயர்ப்புக் கவிதைகளை எடுத்து வைத்துக்கொண்டேன். அப்போதுதான் ஒரு உண்மை தெரிந்தது. இந்த மொழிபெயர்ப்புக் கவிதைகள் எல்லாம் நமக்கு எப்போது தெரிய வந்தது. எல்லாம் சிறுபத்திரிகைகள் மூலம்தான் தெரிய வந்தது என்று எனக்குத் தோன்றியது.
முதலில் ‘எழுத்து’ என்ற பத்திரிகையை எடுத்து வைத்துக்கொள்வோம். மொழிபெயர்ப்புக் கவிதைகளை சி சு செல்லப்பா அவர் எழுத்து பத்திரிகையில் அறிமுகப் படுத்தியிருக்கிறார். அவர் மூலம்தான் இது தொடங்கியிருக்க வேண்டுமென்று தோன்றியது.
புதுக்கவிதை என்ற இலக்கிய வடிவம் எழுத்து பத்திரிகையில் ஆரம்பித்தபோது (மணிக்கொடியில் ஆரம்பித்த அந்த முயற்சி தோல்வி அடைந்து விட்டது) சுஜாதா மூலம் வணிகப் பத்திரிகைகளில் பரவத் தொடங்கின.
ஆனால் ஏனோ மொழிபெயர்ப்புக் கவிதைகள் வணிகப் பத்திரிகைகளைச் சீண்டவில்லை.
‘மாற்று இதயம்’ என்ற பெயரில் சி.சு செல்லப்பா ஒரு கவிதைத் தொகுதியை மே 1974ல் கொண்டு வந்தார். அதில் ‘வெளிக்குரல்கள்’ என்ற பெயரில் மொழிபெயர்ப்புக் கவிதைகளை அவர் வெளியிட்டுள்ளார்.
மொழிபெயர்ப்பு கவிதைகளை வெளியிடுவதற்குக் காரணத்தை சி.சு. செல்லப்பா கூறும் காரணத்தை நாம் தெரிந்து கொள்வது அவசியம்.
‘தமிழ் புதுக்கவிதை முயற்சிக்கு வெளிநாட்டு இலக்கியப் பாதிப்பு உண்டு. பாரதிக்கும் பிச்சமூர்த்திக்கும் சி மணிக்கும் பிரிட்டீஷ், அமெரிக்க, பிரஞ்சு கவிகளின் செல்வாக்கு இருப்பதைப் பார்க்கலாம். அந்த மொழி கவிதைகளை நாம் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். உருவ, உள்ளடக்க, உத்தி அம்சங்களில் அவை எவ்வளவு சாதனை காட்டி இருக்கின்றன என்பதை அறிந்துகொண்டால் தமிழ் புதுக்கவிதை படைப்பாளர்கள் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டும் காரியம் செய்யாமல், புதுக்கவிதை அடுத்தடுத்து உயர்ந்த கட்டங்களுக்குப் போக வழிவகை கையாள சாத்தியமாகும்.
சி சு செல்லப்பாவைப் புதுக்கவிதை எழுதுவதற்கும் நிறையா கவிதைகளை மொழிபெயர்த்து கைபழகிக் கொண்டதாகக் கூறுகிறார்.அவர் மொழிபெயர்ப்பு கவிதைகளில் ஒன்றிரண்டு பார்க்கலாம்.
வில்லியம் காரலஸ் வில்லியம் கவிதையான ‘சக்தி’ என்ற கவிதையைப் பார்ப்போம்.
ஆள் நீள
பருமன் மடிப்பு
பழுப்புத்தாள் ஒன்று
தெருவில்
காற்றில்
சுருண்டு சுருண்டு
மெதுவாக
உருள
கார் ஒன்று
அதன் மீதேறி
தரையோடு அரைத்தும்
மனிதன் போல்
இல்லாமல்
எழுந்து
மீண்டும்
காற்றில்
சுருண்டு சுருண்டு
முன்போல்உருண்டது
(இன்னும் வரும்)
(08.12.2020 தேதியிட்ட திண்ணை இணைய வார பத்திரிகையில் பிரசுரமான கட்டுரை)