24.11.2020
அழகியசிங்கர்
ஜெயராமன் பாகவதர் என் வீட்டில்தான் குடியிருந்தார். என் புதல்வனின் திருமணத்தின்போது ஜெயராமன் பாகவதரின் ராதா கல்யாணம் நடந்தது. சிறப்பாக இருந்தது.
அதற்கு முன் வரை எனக்கு ராதா கல்யாணம் என்றால் எப்படி நடத்துவார் என்பது தெரியாது. அன்று பார்க்கும்போது என்னால் மிகவும் ரசிக்க முடிந்தது.
ஜெயராமன் பாகவதர் மறக்க முடியாத ஒருவராக மாறிவிட்டார். அவரை நான் எப்போதும் கோவை ஜெயராமன் என்றுதான் குறிப்பிடுவேன். அவர் விருட்சம் வாசகர். ஆன்மிகத்தில் அவர் அதிகமாக ஈடுபட்டதால் அவர் இலக்கியம் பக்கம் திரும்ப முடியவில்லை.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு போஸ்டல் காலனியில் என் இல்லத்திற்கு அவரே குடி வருவாரென்று எதிர்பார்க்கவில்லை.
அவர் வசித்த இடத்தில் உள்ளே நுழையும்போது ஞானானந்த சுவாமிகள் படம் பெரிதாக மாட்டப்பட்டிருக்கும். 3 ஆண்டுகள் தங்கியிருந்தார். ஒருநாள் திடீரென்று அவர் போன் செய்து வீட்டை காலி செய்வதாகக் கூறினார். எனக்குத் திகைப்பாக இருந்தது.
என் பெண் பிரசவம்போது இந்த இடம் போதாது என்றார். மேலும் வீட்டிலுள்ள தண்ணீர் மஞ்சள் நிறமாக இருக்கிறது என்றார். ஆனால் அவர் குடிபோன இன்னொரு இடம் இதை விட மோசம். 2வது மாடி.
அவர்காலி செய்து போனவுடன் என் வீட்டை நூல்நிலையமாக மாற்றி விட்டேன்.
ஆனால் சில மாதங்களுக்கு முன் போன் செய்து, ‘உங்கள் வீட்டிற்கே மறுபடியும் வந்து விடுகிறேன்,’ என்றார.
என்னால் அது முடியாது என்றும் தெரியும். ஏற்கனவே புத்தகங்களைக் குடி வைத்திருக்கும் நான் அவற்றை அப்புறப்படுத்த முடியாது என்று தெரியும். நானும் அதை விரும்பவில்லை.
ஒவ்வொரு முறை என்னுடன் போனில் பேசும்போது நட்புடன் விசாரிப்பார்.
நேற்று காலை அவர் இறந்து விட்டார் என்ற செய்தியை அறிந்தபோது வருத்தமாக இருந்தது. போஸ்டல் காலனியில் உள்ள அடுக்ககத்தின் உள்ள ஒரு வீட்டு உரிமையாளர்தான் இந்தச் செய்தியை முதலில் சொன்னார். உடனே என் நண்பர் வைத்தியநாதன் வாட்ஸ்அப்பில் இந்தச் செய்தியை வெளியிட்டிருந்தார்.
அவர் வீட்டிற்குப் போன் செய்தேன். யாரும் போனை எடுத்துப் பேசவில்லை.
ஜெயராமன் பாகவதர் இனி இல்லை என்பதை நம்புவது சற்றுக் கடினமாகத்தான் இருக்கும்.