20.11.2020
…
அழகியசிங்கர்
போன ஆண்டு ஜøன் மாதத்தில் ஏடிஎம் விஷயமாக நான் ஏமாந்து போனதை முகநூலில் குறிப்பிட்டிருந்தேன். நேற்று திரும்பவும் மேற்கு மாம்பலம் கிளை அலுவலகத்திற்குப் போக நேரிட்டது.
ஒரு செக் கிளியரிங்கில் தாமதமாகிவிட்டது. அதுவும் நவீன விருட்சம் இதழிற்காகச் சந்தாவாக ரூ150 ஐ ஒரு சந்தாதாரர் செக்.
வங்கிக் கிளைக்குப் போனவுடன் நான் ஏடிஎம்மில் ஏமாந்ததை ஞாபகம் வைத்திருந்த ஒரு பெண்மணி, சொன்ன செய்தியால் திகைத்துவிட்டேன்.
சார், இந்தக் கொரானா காலத்தில் பலர் லட்சக்கணக்கில் ஏமாந்து போகிறார்கள். இரண்டு நாட்களுக்குமுன் ஒரு வாடிக்கையாளர் 2 லட்சம் ஏமாந்து விட்டார். பாவமாக இருக்கிறது, என்றார்.
போனில் ஏமாற்றுபவர்கள் பேசும்போது ஹிந்தியும் தமிழும் கலந்து பேசுகிறார்களாம். மேலும் மானேஜர் பேசுகிறேன் என்கிறார்களாம். பெயர் கேட்டால் கேட்பவரைத் திட்டுகிறார்களாம். அங்கே இன்னும் சிலர் அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களைச் சொல்கிறார்கள்.
எனக்குத் திகைப்பாகப் போய்விட்டது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நான் கொடுத்த புகாருக்கு எந்தப் பதிலும் வரவில்லை கமிஷனர் அலுவலகத்திலிருந்து. அவசரம் அவசரமாக ஒரு ஞாபகமூட்டல் கடிதம் தாயரித்தேன்.
எதற்கும் அந்த அலுவலகத்திற்குப் போன் செய்யலாமென்று போன் செய்தேன். பொதுவாக கமிஷனர் அலுவலகத்திற்குப் போன் செய்தால், யாரும் எடுத்துச் சரியாகப் பதில் சொல்ல மாட்டார்கள். இப்போதும் அப்படித்தான் நடந்தது. பாங்க் பிராடு பிரிவு 2வது தளத்தில் இருக்கிறது. அங்குத் தொடர்பு கொண்டு போனில் கேட்டேன். போனில் தொடர்பு கொண்டவர் வேறு ஒரு எண்ணைத் தொடர்பு கொண்டு பேசச் சொன்னார். அங்குப் பேசினால் திரும்பவும் பழைய எண்ணிற்குப் பேசச் சொன்னார்கள்.
எனக்குத் தெரியும் இந்தப் பணம் கிடைக்கப் போவதில்லை என்று. அதனால் நான் மேலே தொடர்பு கொள்ளாமல் அலட்சியமாக ஒன்றரை வருடம் கழித்து விட்டேன்.
நேற்றைய சம்பவம் திரும்பவும் தொடர்பு கொள்ள வைத்தது. நான் திரும்பவும் அவர்களுக்கு இந்தச் சம்பவத்தை ஞாபகப்படுத்தி கடிதம் எழுதி விட்டேன்.
ஆனால் பலர் அந்நியாயமாக ஏமாந்து ஏமாந்து போகிறார்களே என்று தோன்றியது.இந்தக் கொரானா நேரத்தில் இப்படி ஏமாறுவது அதிகமாகி விட்டது.
இன்று மதியம் தூங்கி எழுந்தபோது ஒரு போன் வந்தது. பேசியவர் ஒரு பெண்மணி. கிரிடிட் கார்டு ஏடிஎம் கார்டைப் பற்றி விசாரித்தாள். அவள் பேசிக்கொண்டிருந்த இடத்திலிருந்து குழந்தைகள் சத்தம். உடனே போனை கட் செய்து விட்டேன். திரும்பவும் போன் செய்தாள். அதெல்லாம் வேண்டாம் என்று திரும்பவும் போனைத் துண்டித்தேன். ஆபத்து போனில் என்று தோன்றியது.