துளிகள் 153 – தில்லையாடி ராஜா எழுதிய கடிதம்

 15.11.2020

அழகியசிங்கர்

தில்லையாடி ராஜா என்பவர் கடலூரிலிருந்து ஒரு கடிதம் எழுதியிருந்தார்.  எனக்கு ஆச்சரியம்.  என் புத்தகம் பற்றி எழுதியிருந்தார்.  அந்தக் கடிதத்தை ஜனவரி 5ல் எழுதியிருந்தார்.  என் புத்தகம் பற்றித்தான் அந்தக் கடிதம்.  எனக்கு ஆச்சரியம்.  
பொதுவாக இன்றைய சூழ்நிலை எல்லோருக்கும் தெரிந்த ஒரு சில எழுத்தாளர்களைப் பற்றித்தான் எல்லோரும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.  விதிவிலக்காக தில்லையாடி ராஜா என் புத்தகத்தைப் படித்துவிட்டு எழுதியிருக்கிறார்..
வாசிப்போம் வாசிப்போம் தொகுதி 1 என்ற புத்தகம்தான் அது.  அந்தப் புத்தகத்தில் 27 புத்தகங்களை நான் படித்த அனுபவத்தைப் பற்றி எழுதியிருப்பேன்.  தில்லையாடி ராஜா அந்தப் புத்தகத்தைக் குறித்துத்தான் எழுதியிருக்கிறார்.
பச்சை இங்கில் அவர் கையெழுத்து புரியும்படி அற்புதமாக எழுதப் பட்டிருக்கிறது.
அவருடைய கடிதத்தை இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்.

வணக்கம்.
அழகியசிங்கர் எழுதிய ‘வாசிப்போம் வாசிப்போம் தொகுப்பு 1’  வாசித்தேன். 
இருபத்தேழு நாட்கள் வாசிப்பனுபவம், பல்வேறு நூல்களைப் பற்றிய கட்டுரைகள். 
நகுலன், கு.ப.ரா, பாரதி, நவகாளி – சாவி எழுதிய நூல் இன்னும் பலபல…

இவற்றில் சில நூல்கள் வாசித்திருக்கிறேன்.  பல நூல்கள் வாசிக்க வேண்டியவை என அழகியசிங்கர் கோடிட்டுக் காட்டுகிறார். இந்த நூலின் பணியே இதுதான்.   
இன்ன நூல்கள் வாசித்தேன்,  இத்தனை  பக்கங்கள் வாசித்தேன், ஞாயிறு நாட்களில் வாசிக்க நேரம் கிடைப்பதில்லை, வீட்டின் தேவைக்கு காபி பொடி வாங்கிக் கொடுத்துவிட்டு வாசிக்க வேண்டும்…வாசித்தவற்றை இது புரிகிறது, இது புரியவில்லை, முழுமையாக வாசித்து விட்டு பிறகு எழுதுகிறேன்…
நூலாசிரியர் வாசகனுடன் நேருக்கு நேர் பேசுவதாக அமைகிறது…எந்தப் போலித்தனமோ, பம்மாத்தோ இல்லை..
நல்ல நூலை வாசித்த நிறைவு.  என்ன..? எல்லா நூல்களையும் போல எழுத்துப் பிழை பெரிய அளவில் இல்லை என்றாலும் சிறிய அளவில் காணப்படத்தான் செய்கிறது.   அத்துடன் முடிகிறது கடிதம்.  எனக்கு என்ன ஆச்சரியம் என்றால் ஒருவர் புத்தகம் படிப்பதோடல்லாமல் அதைப்பற்றி எழுதவும் (பச்சை இங்கில் கையெழுத்து நேரத்தியாக)  எழுதியிருக்கிறாரே என்றுதோன்றியது.  அதோடு அல்லாமல் கவர் எடுத்து ஸ்டாம்பு ஒட்டி அனுப்பவும் செய்திருக்கிறாரே என்று தோன்றியது. இதெல்லாம் ஒருவர் செய்கிறார் என்றால் பெரிய விஷயமாக எனக்குப் படுகிறது.  

இந்தக் கடிதத்தை நான் பத்திரமாக வைத்திருக்கிறேன்.



மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன