வரிகள்

அழகியசிங்கர்

    எழுதிய வரிகளில்
    இரண்டாவது வரி
    தாளிலிருந்து தப்பி
    குதித்து ஓடிவிட்டது
    அதைப் பிடிக்க முடியவில்லை
    மிரண்டு விட்டதாகச் சொன்னார்கள்
    ஆறாவது வரியோ
      டி       து      டி     த்
    கு  த்  கு  து
    கவிதை எழுதும்
    கவிஞரைப் பார்க்கச் சென்றுவிட்டது
    எட்டாவது வரி
    தற்கொலை செய்துகொண்ட
    கவிஞன் பேரைச் சொல்லி
    தற்கொலை செய்துகொண்டது
    சில வரிகள்
    புத்தி குழம்பிப்போய் சோர்ந்து வீழ்ந்தன
    தற்செயலாய்
    விபத்தில் சிக்கிய வரிகள்
    ஆபத்தாய் மருத்துவமனையில் படுத்துக்
                       கிடந்தன
    இன்னும் சில வரிகளுக்குக்
    கிழடுத் தட்டிப்போய்விட்டன
    மிஞ்சிய வரிகள்
    தானே இடம் மாற்றிக்கொண்டன
    எல்லா வரிகளும்
    கவிதை செத்துவிட்டதாய் ஓலமிட்டன.

                                          ((1993ல் எழுதிய கவிதை)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன