இந்திரா பார்த்தசாரதியின் சூசைம்மாவும் அத்வைதமும்

 
அழகியசிங்கர்


இந்திரா பார்த்தசாரதியின் இந்தக் கதையைப் படித்துவிட்டு விழுந்து விழுந்து சிரித்தேன். கதையின் எள்ளல் சுவை சிரிப்பை வரவழைத்தது.


இந்திரா பாரத்தசாரதயின் சிறுகதைகள் தொகுதி 1 என்ற புத்தகத்திலிருந்து இக் கதையைப் படித்தேன். கிழக்கு பதிப்பகம் முதல் பதிப்பாக 2010ல் வெளியிட்டிருந்தது.


இப்போது இந்தப் புத்தகம் விற்பனைக்கு இருக்குமா என்று தெரியாது. இத் தொகுப்பில் ஒரு பெரிய குறையைக் கண்டு பிடித்தேன்.


‘சூசைம்மாவும் அத்வைதமும்’ என்ற சிறுகதை எப்போது எழுதப் பட்டது என்ற குறிப்பு இல்லை. அல்லது பத்திரிகையில் பிரசுரம் செய்திருந்தால் எந்தப் பத்திரிகையில் வந்திருக்கிறது என்பதும் தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரையில் இது பெரிய குறையாக எனக்குத் தோன்றுகிறது. சரி, இனிமேல் கதைக்குப் போகலாம்.


இக் கதையில் தலைப்பிலேயே இந்திரா பார்த்தசாரதியின் நையாண்டித்தனம் ஆரம்பித்து விட்டது. இக் கதை ஒரு விதத்தில் இன்றைய நிலையை வெளிப்படுத்துகிறது.


சூசையம்மா நர்ஸ் சூபரின்டெண்டன்ட ஆக அந்த மருத்துவமனையில் பணி புரிகிறாள். கிறித்துவ மதத்தைச் சார்ந்தவள். அவளுக்கும் அத்வைதிற்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. கிண்டலுக்காகக் கதாசிரியர் இந்தக் கதையின் தலைப்பை அப்படி வடிவமைத்திருக்கிறாரா?இந்தக் கதை அன்னம்மா என்ற நர்ஸ் மூலம் ஆரம்பமாகிறது.


அன்னம்மா மணியைப் பார்க்கிறாள். மணி 5.15. ஆஸ்பத்திரிக்கு வெளியே ஸ்கூட்டரில் மாத்யூ என்பவன் அன்னம்மாவிற்காகக் காத்துக்கொண்டிருக்கிறான். ஐந்து நிமிடம் காத்திருந்தாலும் அவனுக்குக் கோபம் வந்து விடுகிறது. அவனுடைய சினம் வெளிப்படையாகக் காட்டாத சினம்.கதை தலைப்பே கிண்டலாக வைக்கப் பட்டிருந்தாலும், அன்னம்மாவிற்காகக் காத்திருக்கும் அவள் காதலன் பெயர் மாத்யூ. கிறித்துவ மதத்தைச் சார்ந்தவன்.நர்ஸ் உடையைக் களைந்து புடவையைக் கட்டிக்கொள்ள அவள் ஜெனரல் வார்டை ஒட்டியிருந்த அறைக்குள் சென்றாள்.


மூன்று நிமிஷம் நாற்பது வினாடிகளில் அறையைவிட்டு வெளியே அலறிக்கொண்டு ஓடிவந்தாள். கதாசிரியர் துல்லியமாக நேரம் சொல்லி விவரிக்கிறார்.அறையில் உள்ளே எலி ஒன்று செத்துக் கிடக்கிறது என்று அன்னம்மா கூறுகிறாள். அந்தச் செய்தியைக் கேட்டவுடன் எல்லோரும் திகைப்படைகிறார்கள்.தோராயமாக இந்தக் கதையை 1996ல் இந்திரா பார்த்தசாரதி எழுதியிருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. அப்போதுதான் சூரத்திலிருந்து பிளேக் என்ற நோய் பரவுகிறது என்ற அச்சம் மக்களிடம் பரவி இருந்தது. பிளேக் நோயின் முக்கியமான அம்சம். எலி செத்து விடுவது.


. ‘செத்த எலி,’ என்றாள் அன்னம்மா, அங்கு அனைவரும் மின்சாரத்தால் தாக்குண்டவர்கள் போல் ஆளுக்கொரு திக்காய் ஓடத் தொடங்கினார் என்று விவரிக்கிறார் கதாசிரியர்.
அதன்பின் எலியை வைத்து கூத்துதான் இந்தக் கதை முழுவதும்.
முகமூடி அணிந்துகொண்டு வந்த ஆஸ்பத்திரி உதவியாளன் எல்லோருக்கும் முகமூடிகளை விநியோகம் செய்தான்.
அன்னம்மாவைப் பார்க்க வந்த மாத்யு, “மணி 5.30 ஆகப்போகிறது,” என்கிறான்.


“தெரியும். அந்த ரூம்மில டிரஸ் மாத்திக்கப் போனேன். செத்த எலியைப் பார்த்தேன்,” என்கிறாள்.இன்னொரு நர்ஸ், “அங்க என் டிரஸ் இருக்கிறது,” என்றாள்.


அன்னம்மா, “நல்லகாலம் நான் டிரெஸ் மாத்திண்டுட்டேன்,” என்கிறாள்.


உடனே மாத்யு, “முழுக்க மாத்திக்கலே. ப்ளவுஸ் எங்கே?” என்றான்.
அப்பொழுதுதான் அன்னம்மா தன்னைப் பார்த்துக் கொண்டாள். இப்படியே ப்ளேக் என்ற நோய் காரணம் காட்டி கிண்டல் தொனியில் கதையை நகர்த்திச் செல்கிறார் கதாசிரியர். கொரானா குறித்துக்கூட இன்னொரு கதையை எழுதச் சொல்லலாம் இந்திரா பார்த்தசாரதியை.


இந்த இடத்தில் உதவியாளன் முகமூடியை வழங்குகிறான். மாத்யு வாங்கிக்கொள்ள மறுத்ததுடன், வெளியே செல்ல லிஃப்டுக்குள் புகுந்து கொண்டான்.சூசைம்மாளும் முகமூடியை வாங்கிக்கொள்ள வில்லை. ஆனால் அவள் அன்னம்மாவைப் பார்த்து ஒன்று சொல்கிறாள்.


“பாத்தியாஉன் சினேகிதனை, ஓடிப்போறான். இவனையா கட்டிக்கப் போறே?” என்று கேள்வியை எழுப்புகிறாள்.
சூசைம்மாளுக்கு தைரியம் ஜாஸ்தி. செத்துப் போனஎலியைப் பற்றி சிறிதும் கவலைப்படவில்லை. அதனால்தான் இ.பா. ‘சூசைம்மாளும் அத்வைதமும்’ என்ற பெயரைக் கதைக்கு வைத்திருக்கிறாரென்று தோன்றுகிறது.


சூசைம்மாவை முகமூடியைப் போட்டுக்கொள்ளும்படி அங்கிருக்கும் டாக்டரும் மற்றவர்களும் போட்டுக்கொள்கிறார்கள். ஆனால் சூசைம்மா மாஸ்க்கை போட்டுக்கொள்ள மறுக்கிறாள்.இந்தஇடத்திற்கு மெடிக்கல் சூப்ரின்டெண்டன்ட் அவசரமாக வருகிறார். கதாசிரியர் அவரை இப்படி வர்ணிக்கிறார்.
அவருக்கு ஐம்பது வயதிருக்கும். மீசை நரைத்திருந்தது .தலை மயிர், சாய உதவியில் அசாதாரண கறுப்புடன் பட்டொளி வீசியது என்கிறார் கிண்டலுடன்.


யாருக்கு ப்ளேக்? என்று கேள்வி கேட்கிறான் மெ.சூவுடன் கூட வந்த டாக்டர்.


சூசைம்மாள் கிண்டலாக பதில் சொல்கிறாள். “யாருக்குமில்லை இதுவரைக்கும். நீங்க செய்ற அமர்க்களத்திலே எல்லாருக்கும் வந்துடலாம்,” என்கிறாள்.


இப்படியே இந்தக் கதை நகைச்சுவை உணர்வுடன் போய்க்கொண்டிருக்கிறது.


மெ.சூ அடிமேல் அடி எடுத்து அன்னம்மா குறிப்பிட்ட அறையை நோக்கிச் சென்றார்.


“எங்கே எலி?” என்று அவர் கேட்கும்போது அன்னம்மா அவரருகில் வந்தாள். மெ.சூ வெருட்டென்று நகர்ந்து கொண்டார்.
அவர் கண்ணில் எலி தென்படவில்லை.


“உனக்கு நிச்சயமாகத் தெரியுமா அது செத்தஎலிதானா” என்று
“மல்லாக்கக் கிடந்தது,” என்கிறாள் அன்னம்மா.
“நாத்தம் வந்ததா?”
“எனக்குத் தெரியலை அப்ப,” என்கிறாள் அன்னம்மா
. “இப்பவும் நாத்தமில்லே” என்கிறாள் சூசைம்மா.
எலி செத்துக் கிடந்ததா என்பதுபோல் சூசைம்மா சந்தேகப்படுவதுபோல் தோன்றுகிறது.மெ.சூ சிரிக்கும்போது எல்லோரும் சிரித்தாக வேண்டுமென்பது அந்த ஆஸ்பத்திரி நியதிகளிலொன்று. அவர் ஜோக் அடிக்க எல்லோலரும் சிரிக்கிறார்கள். சூசைம்மாவைத் தவிர.
சூசைம்மாவிற்கு அவரைப் பிடிக்கவே பிடிக்காது. அரசியல்வாதிகளின் தயவில் உயர்ந்த பதவிக்கு வந்து விட்டான் என்று நினைக்கிறாள்.. சர்ஜன் என்று பெயர். சலூனில் கூட வேலைக்கு வைத்துக்கொள்ள மாட்டார்கள் என்று ஜோக் அடிக்கிறார் கதாசிரியர்.இப்போது பாத்ரூமில் செத்த எலியை எடுத்துக்கொண்டு சுடுகாட்டிற்குப் போக வேண்டுமென்று தீர்மானம் ஆகிறது. சூசைம்மா எடுத்துக்கொண்டு போகத் துணிகிறாள்.
“எலிப்பிரேதத்தை எப்படிக்கொண்டு போய் அடக்கம் செய்றது?” என்ற கேள்வியை எழுப்புகிறாள் சூசைம்மா.
“அடக்கம் செய்யக்கூடாது. எரிக்கணும். துணியோடு எடுத்து ஒரு அட்டைப் பெட்டியில் போட்டு எரிக்கணும்” என்கிறார் மெ.சூ.
ஹெர்ஸ் வண்டியில் எடுத்துச் செல்வதாகத் தீர்மானம் ஆகிறது. செத்த எலியை அந்த அறையிலிருந்து எடுத்துக் கொண்டு போக யாரும் துணியவில்லை. சூசையம்மா அட்டைப் பெட்டியை எடுத்துக் கொண்டு அந்த அறைக்குள் நுழைந்தாள்.
அட்டைப்பெட்டியுடன் எடுத்து வந்தவுடன் ஸீல் வைக்கிறார்கள்.
இங்கு செம்ம கிண்டலாக ஒரு உரையாடல் நடக்கிறது.
“பிராமணாள் இங்கே யாருமில்லையா? என்று கேட்டாள் சூசைம்மா.
“எதுக்கு?” என்றார் மெ.சூ. அவர் பிராமணர்.
“மந்திரம் சொல்ல,” என்கிறாள்.
அங்கிருந்தவர்கள் கஷ்டப்பட்டுச் சிரிப்பை அடக்கிக் கொண்டார்கள். சுடுகாட்டிற்குச் செத்த எலியை எரிப்பதற்கு சூசையம்மா எடுத்துக் கொண்டு போகிறாள். சவப்பெட்டி ஊர்வலம் தொடங்கியது. அட்டைப் பெட்டியை ஹெர்ஸ்ஸில் வைத்துவிட்டு டிரைவர் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள் சூசைம்மா.
சுடுகாட்டில் தகராறு. எரிக்க அனுமதி மறுக்கிறார்கள். எரிக்க டெத் சர்டிஃபிகேட் வேணும் என்கிறான்.
“செத்த எலிககா டெத் சர்டிஃபிகேட் என்று கேட்க, உடனே இடத்தைக் காலி செய்யச் சொல்கிறான். இந்த இடத்தில் கதையின் நையாண்டித்தன ரசிக்கும்படியாக உள்ளது.
அங்கிருந்து வண்டியை எடுத்துக்கொண்டு எங்கே போவது என்று தெரியவில்லை. டிரைவர் ஆத்திலே தூக்கிப் போடலாம் என்கிறான்.
சுடுகாட்டிலேயே எரிக்கப் பயப்படறாங்க, ஆத்தில போடலாம்னு சொல்றீங்க என்று சூசைம்மாள் டிரைவரைப் பார்த்துக் கேட்கிறாள்.
சூசைம்மா அவள் வீட்டிற்கு எடுத்துக் கொண்டு போகிறாள். செத்த எலியை அவள் வீட்டுக் கொல்லைப்புறத்திலே எரிச்சிடுவதாகச் சொல்கிறாள்.
சூசைம்மா ஒண்டிக் கட்டை. திருமணம் செய்து கொள்ளவில்லை. அட்டைப் பெட்டியை எடுத்துக்கொண்டு கொல்லைப்புறம் சென்றாள். இருட்டு வந்ததும்.
உரிய மரியாதையோடு எரிக்க ஆசை. உள்ளே போய் பைபிளை எடுத்து வந்தாள்.
அட்டைப் பெட்டியில் இருக்கும் செத்த எலியைப் பார்க்க வேண்டுமென்று தோன்றியது. எலியைச் சுற்றிவைத்திருந்த துணியைப் பிரிக்கத் தொடங்கியவள், எழுந்து உள்ளே சென்றாள்.
முகமூடியை அணிந்து கொண்டு துணியைப் பிரித்தாள். பிரித்தாள். பிரித்துக்கொண்டே இருந்தாள். அவளால் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
சிரித்துக்கொண்டே இருந்தாள். நிஜமும் நிழலும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்று அவளுக்குப் பட்டது. நாணயம் எது என்பதுதான் அவளுக்குப்பிடிபடவில்லை என்று முடிகிறது கதை.
துணியை அவிழ்க்கும்போது அதில் செத்த எலி இல்லையா? ஏன் சூசைம்மாள் சிரிக்கிறாள்? ஒரு வரியில் இந்தக் கதையைப் படித்தவுடன் என்ன சொல்வது? ஒன்றுமில்லாத ஒரு விஷயத்திற்குப் பெரிதாக கலவரப்படுவது மனித இயற்கை. இப்போதைய கொரானா சூழ்நிலைக்கும் இந்தக் கதை பொருந்துகிறது.
நகைச்சுவை உணர்வுடன் கடைசிவரை அதைச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். இ.பாவிற்குப் பாராட்டுகள்.
(25.10.2020 திண்ணை முதல் இணைய வாரப் பத்திரிகையில் பிரசுரமான கட்டுரை)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன