பேரறிஞர் அண்ணா சமாதியைப் பார்க்கச் சென்றேன்



அழகியசிங்கர்

    பேரறிஞர் அண்ணா மரணம் அடைந்தபோது நான் பள்ளியில் படிக்கும் சிறுவன்.

    அப்போது அண்ணா சமாதியைப் பார்க்கப் போவது மாணவர்களிடம் பெரிய ஆர்வம் இருந்தது.  நானும் என் கூட பள்ளிக்கூட நண்பர்களும் சேர்ந்து அண்ணா சமாதியைப் பார்க்கச் சென்றோம்.

    நான் சென்னை தங்கச்சாலையிலிருந்து நடந்தே அங்குச் சென்றேன். மாணவர்களுடன் சேர்ந்துகொண்டு.  அண்ணா சமாதியைப் பார்த்தபிறகு, அங்குள்ள கடற்கரையில் விளையாடப் போனோம். மாணவர்கள் ஒருவருக்கொருவர் நீரை ஒருவர் மீது ஒருவர் வாரி அடித்தபடி விளையாடினோம்.

    என் சட்டை முழுவதும் நனைந்து விட்டது.  நான் சட்டையைக் கழட்டிப் பிழிய நினைத்தேன்.  ஒரு குறும்புக்கார மாணவன் என் சட்டையைப் பிடுங்கி பந்து விளையாடுவதுபோல் மற்ற மாணவர்களுடன் சேர்ந்து விளையாடினான்.  கடைசியில் என் சட்டை கடலில் போய் விட்டது. 

    நான் திரும்பும்போது சட்டை இல்லாமல் வீடு திரும்பிக்கொண்டிருந்தேன்.  குறிப்பாகச் சட்டை இல்லாமல் இருப்பதைப் பார்த்து என்அம்மா என்னை திட்டுவாளோ என்று திகைத்தபடியே வந்து கொண்டிருந்தேன். 

    நடந்து வரும் வழியில் ஒரு போலீஸ்காரரைப் பார்த்தேன். அவர் என்னைப் பக்கத்தில் வரும்படி கூப்பிட்டார்.  நான் நடுங்கி விட்டேன்.  போலீஸ்காரர் ஏன் கூப்பிடுகிறாரென்று.;

    கிட்டே சென்றபிறகு, “ஏன் இவ்வளவு ஒல்லியா இருக்கே?”என்று கேட்டார்.

    நான் அதற்கு என்ன பதில் சொல்வது.  மௌனமாக இருந்தேன்.

    “முட்டையெல்லாம் சாப்பிடு,” என்று அறிவுரை கூறி அனுப்பினார்.

    அன்று வழக்கம்போல் வீட்டில் திட்டு விழுந்தது. அதன் பிறகு நான் இன்னொரு முறை அண்ணா சமாதியைப் பார்க்கப்  போகவில்லை.  

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன