அஞ்சலட்டைக் கதைகள் 22

அழகியசிங்கர்

இது என் 22வது கதை. இந்தக் கதை வாசிக்கும்போது மூன்று நிமிடங்களுக்கு மேல் முடிந்து விட்டது.

எல்லாம் சரி

    இந்தப் பிரச்சினைக்கு எப்படித் தீர்வு என்று தெரியாமலிருந்தேன்.  சமீப காலத்தில் அவள் முகம் கொடுத்துப் பேசுவதில்லை.  ஏன்?

    நானும் அவளும் ஒரே கல்லூரியில் படித்தாலும் எனக்கு முன்னாலேயே அவளுக்கு வேலை கிடைத்து விட்டது.  அதன்பின்தான் எனக்கும் கிடைத்தது.  நானும் அவளும் கல்லூரி காலத்திலிருந்து ஒருவரை ஒருவர் விரும்புகிறோம்.  இருவரும் மேற்கு மாம்பலத்தில் பக்கத்துப் பக்கத்துத் தெருவிலே குடியிருக்கிறோம்.

    இரண்டுபேர் குடும்பமும் சாதாரண குடும்பம்.  வாடகை வீடுகளில்தான் வாசம். கடந்த சில மாதங்களாக அவள் என்னுடன் பழகும்போது அலட்சியம் காட்டுவதுபோல் தோன்றுகிறது.  இதை நேரிடையாக அவளிடம் போட்டு உடைத்து விடலாம்.  ஆனால் அதெல்லாம் சரி வராது. 

    நான் இந்த விஷயத்தில் அவளுடைய உரிமையை முக்கியமாகக் கருதுகிறேன்.  ஒருவர் யாருடன் பேச வேண்டும் யாருடன் பேசக் கூடாது என்பதெல்லாம் அவரவர் தீர்மானிக்க வேண்டிய விஷயங்கள்.

    இந்தத் தருணத்தில்தான் ஜே.கிருஷ்ணமூர்த்தி இந்தியா வந்து இரண்டு மூன்று மாதங்கள் வந்திருந்து தங்குவதாகச் செய்தி வந்தது.

    நான் உடனே அவர்களுடைய அலுவலகத்தில் தொடர்பு கொண்டு, கிருஷ்ணமூர்த்தியைச் சந்திப்பதற்கு வாய்ப்புத் தர வேண்டுமென்று கேட்டுக்கொண்டேன்.

    அவர்கள் ஒருநாள் வந்து சந்திக்கலாமென்று அனுமதி அளித்தார்கள்.  எனக்கு அவளுடைய பிரச்சினைதான் முக்கியமாகத் தோன்றியது.  இதற்கு எதுமாதிரியான தீர்வு என்று என்னையே கேட்டுக்கொண்டேன். அவரைப் பார்த்து இதைப் பற்றிப் பேச வேண்டுமென்று யோசித்தேன்.  கிருஷ்ணமூர்த்தியிடம் இதைப்பற்றியெல்லாம் பேசினால் சிரிக்கத்தான் சிரிப்பார்.

    நான் கேலிக்கு ஆளாவேன் என்றெல்லாம் தோன்றியது.  இந்தத் தருணத்தில் அவளைப் பார்த்து இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது.

    ஒரு முறை போன் செய்தபோது, அவள் சொன்னாள் :” வேலை கொஞ்சம் அதிகமாக இருக்கிறது.  பார்க்க முடிவில்லை,” என்று.

    அந்தப் பதில் எனக்குச் சற்று ஏமாற்றமாக இருந்தது.  அதை நினைத்துப் பல நாட்கள் நான் யோசனை செய்தபடி இருந்தேன்.  வீட்டில்
அம்மா கூடச் சொன்னாள் : நீ முன்பு மாதிரி கலகலப்பாக இல்லை என்று.

    கிருஷ்ணமூர்த்தியைச் சந்திக்க வேண்டிய நாள் வந்து விட்டது.  அன்று அலுவலகம் போகவில்லை.  சரியாக மதியம் 12 மணிக்கு அவரைச் சந்திக்க நேரம் கொடுத்திருந்தார்கள்.    

    அவர்கள் அலுவலகத்திற்குப் போய் நான் வந்து விட்டதை அறிவித்தேன். அவர்கள் சில நிமிடங்கள் காத்திருக்கும்படி சொன்னார்கள்.

    எப்போதுமே எனக்கு ஜே.கிருஷ்ணமூர்த்தி தங்கியிருக்குமிடம் பிடிக்கும்.  அடர்ந்த மரங்களும் செடிகளுக்கு நடுவில் அவர் தங்கியிருக்கும் வீடு இருக்கும்.  மரப்படிக்கட்டுகள் வழியாக மாடிக்குப் போனால் அவர் அறை இருக்கும். 

    அங்கு அவரைப் போய்ச் சந்தித்தேன்.  உட்காரச் சொன்னார். அவர் என்னையே உற்றுப் பார்த்தார்.  என்ன கேட்க வேண்டுமென்பதுபோல் அந்தப் பார்வை இருந்தது.  அவர் மௌனமாகவே இருந்தார். 

    ஒரு நிமிடம் நான் அவரைக் கூர்ந்து கவனித்தேன்.  என்னை அவர் தலையிலிருந்து கீழ் வரை தீர்க்கமாகப் பார்ப்பது போல் தோன்றியது.  உடனே என் மனம் அமைதியாகிவிட்டது. 

    கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தோம்.  பின் நீங்கள் போகலாமென்பதுபோல் தலை ஆட்டினார்.  ஒருக்ஷணம் உலகமே புரிய ஆரம்பித்தது.  வெளியே வந்து விட்டேன்.

    அதன் பின் நான் அவளைப் பார்க்கவே இல்லை.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன