அழகியசிங்கர்
14வது கூட்டமாக வர வெள்ளிக்கிழமை விருட்சம் கவியரங்கம் கூட்டம் நடத்தப் போகிறேன். இக்கூட்டத்தை எழுத்தாளர் நகுலனுக்குச் சமர்ப்பிக்கப் போகிறோம். பெங்களூர் கிருஷ்ணசாமி நகுலனை நினைவு கூர்ந்து நகுலனின் கவிதைகள் சிலவற்றைப் படிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
கவியரங்கக் கூட்டத்தை ஒவ்வொரு விதமாய் நடத்த விருப்பம். எப்போதுமே கவிதை என்பது உயிருள்ளதாக இருக்க வேண்டும். வாசிப்பதும் உயிர்ப்புடன் இருக்க வேண்டும்.
கிட்டத்தட்ட 66 கவிஞர்கள் கவிதைகள் வாசித்துள்ளார்கள். ஒவ்வொரு முறையும் இதை மாற்றி மாற்றி எதாவது செய்ய வேண்டுமென்று நினைக்கிறேன்.
நம்முடைய பெரும்பாலான கவி அரங்கத்தில் டாபிக் கொடுத்து கவிதை எழுதச் சொல்கிறார்கள். அல்லது ஒரு மணி நேரம் முன்னதாக கவிதைத் தயாரித்து வாசிக்கச் சொல்வார்கள்.
இதெல்லாம் கவிதைகளாக வருவதை விட வீர வசனமாகத்தான் எனக்குப் படுகிறது.
தலைப்பில்லாமல் கவிதை எழுதுவதில் ஒரு குழப்பம் ஏற்படாமலிருப்பதில்லை. அந்தக் கவிதையைக் குறிப்பிட வேண்டுமென்றால் எப்படிக் குறிப்பிடுவது?
இந்த முறை கவிதையை வாசிக்க ஒரு அளவுகோல் வைத்திருக்கிறேன். அதாவது பத்து வரிகளில் கவிதை எழுதிக் கொண்டு வரவேண்டும். 9 வரிகளோ 11 வரிகளோ இருக்கக் கூடாது. முன்பே கவிதை எழுதியிருந்தாலும் அதையும் படிக்கலாம். புதிதாக எழுதி வாசிக்கலாம்.
நேரிடையாக சூம் கூட்டத்தில் வந்திருந்து கவிதை வாசிக்கப் பெயர் கொடுக்கலாம். ஒருவர் ஒரு கவிதைதான் வாசிக்க வேண்டும்.
கூட்டம் ஒன்றரை மணி நேரத்தில் முடித்து விடலாமென்று நினைக்கிறேன். உதாரணமாக என்னுடைய பத்து வரி கவிதையை இங்கு தர நினைக்கிறேன்.
புகை மண்டலம்
இத்தனை நாட்கள்
ஏதோவொன்று
ஏதோவொன்று
ஏதோவொன்று
ஏதோவொன்று
ஏதோவொன்று
ஏதோவொன்று
ஏதோவொன்று
ஏதோவொன்று
சொல்லாமலே……..