அழகியசிங்கர்
இன்று மொட்டை மாடியில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது நண்பர் கிருஷ்ணமூர்த்தியிடமிருந்து (கசடதபற ஆசிரியர்) போன் வந்தது. காலை 7.30 மணிக்கு சா. கந்தசாமி இறந்து விட்டதாகத் தகவல் கூறினார்.
இந்த மாதம் சில தினங்களுக்கு முன்னால்தான் கந்தசாமி 80வயதை முடித்திருந்தார். அப்போது அவர் மருத்துவ மனையில் தீவிர கண்காணிப்பிலிருந்தார். “
அவருடைய பிறந்தநாள் பற்றி முகநூலில் எழுதலாமா என்று சந்தியா நடராஜனைக் கேட்டேன். அவர் வேண்டாம் என்று சொன்னார். அவர் சொன்னது நியாயமாகப் பட்டது. அவர் மருத்துவமனையிலிருந்து மீண்டு வரட்டும் என்று காத்திருந்தோம்.
இன்று மரணமடைந்து விட்டார். என் முக்கியமான எழுத்தாளர் வரிசையில் அவரும் ஒருவர். பல ஆண்டுகளாக நான் அவரிடம் நட்புடன் பழகி வருகிறேன். உற்சாகி. தோன்றுவதைச் செய்து முடித்து விட வேண்டுமென்று நினைப்பவர்.
அவருடன் பழகினால் முதுமையே தெரியாது. நான் எழுதிய புத்தகங்களைப் படிக்கக் கொடுத்தால் உடனே படித்து விட்டு அடுத்தநாள் போன் செய்து தன் அபிப்பிராயத்தைச் சொல்லி விடுவார். அந்த அளவிற்குப் புத்தகம் படிப்பதில் தீவிரமானவர்.
பெரும்பாலும் இலக்கியக் கூட்டங்களில்தான் அவரைப் பார்த்திருக்கிறேன். நான் நடத்திக்கொண்டு வந்த மூகாம்பிகைக் கூட்டத்திலும் உற்சாகமாகக் கலந்துகொண்டு உரையாற்றியிருக்கிறார். இதை இங்கு திரும்பவும் ஒளிபரப்ப நினைக்கிறேன்.
அவருடைய பிறந்ததினத்தை ஒட்டி அவருடைய அவருக்குப் பிடித்த சிறுகதைகளைத் தொகுத்து ஒரு புத்தகமாகத் தயாரித்து விட்டேன். ந. கிருஷ்ணமூர்த்தியின் முன்னுரையுடன். ஆனால் அதற்குள் அவர் மரணம் முந்திக்கொண்டது.
ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டிலுள்ள அவருடைய இரண்டாவது புதல்வன் வீட்டிற்குச் செல்வர். திரும்பி வரும்போது ஒருபுத்தகம் எழுதிக்கொண்டு வருவார்.
நான் அமெரிக்கா செல்லும்போது அவரிடம் சொல்லிக்கொண்டு போனேன். “பொழுதை வீணடிக்காதைய்ய…நிறையா புத்தகங்கள் படி…உன் பயணத்தைப் பற்றி எழுது,” என்றார்.
ஒரு முறை சாகித்திய அக்காதெமியின் தேனாம்பேட்டை அலுவலகத்தில் அவரைச் சந்தித்தபோது அவர் ரவீந்திரநாத் தாகூரின் ‘சிதைந்த கூடு’ என்ற புத்தகத்தை வாங்கச் சொன்னார். அதில் சிதைந்த கூடு குறுநாவலைப் படிக்கும்படிச் சொன்னார்.
அதன்பின் ஒவ்வொரு முறையும் அவரைச் சந்திக்கும்போது சிதைந்த கூடு படித்தியா? என்று கேட்பார். படிக்கவில்லை என்று சொன்னால் லேசாகக் கோபித்துக்கொள்வார். பிறகு கேட்பதையே விட்டு விட்டார். இதோ இன்னும் இரண்டு மூன்று பக்கங்கள்தான் அந்தக் கதையைப் படித்துமுடிக்க இருக்கின்றன. படித்து முடித்தவுடன் அவரிடம் சொல்லலாமென்றிருந்தேன்.
எழுதுவதையும் படிப்பதையும் தொடர்ந்து செய்து கொண்டே இருந்தான். அசோகமித்திரன் கூட டைப் அடித்துப் படைப்புகளை அனுப்புவார். கந்தசாமி கையாலேயே எழுதுவார். ‘இந்திய இலக்கியச் சிற்பிகள்’ என்ற வரிசையில் அசோகமித்திரன் பற்றி ஒரு புத்தகம் அவர் வெளிநாடு போவதற்கு முன் முடித்து விட்டுப் போயிருந்தார். அது தான் அவருடைய கடைசியாக எழுதிய புத்தகம் என்று நினைக்கிறேன். அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.