அழகியசிங்கர்
சொல்வனம் என்ற மின் இதழில் பிரபு எழுதியிருக்கிற கதையின் பெயர் பிரிவு. இது வங்கியில் பணி ஓய்வு பெறுகிற ஒரு பெண் ஊழியரைப் பற்றிய கதை.
பெண் ஊழியர் பத்மா ஓய்வு பெறும் நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட நூறு பேர்கள் கலந்து கொள்கிறார்கள்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம் பத்மாவின் புகழ் பாடுகிறார்கள். அதைக் கேட்கும்போது தன்னுடைய கதைதானா என்று அவளுக்குத் தோன்றுகிறது.
மேலாளர் பேசும்போது, பதமா மேடம் இன்று ஓய்வு பெறுகிறார். நான் அவரைவிட வயதில் சிறியவன். அவர் எப்போதும் வங்கி திறப்பதற்கு அரை மணி நேரம் முன்பே வந்து விடுவார். அலுவலகம் முடிந்தபின்னும் அவருடைய அடுத்தநாள் பணிகளை ஒருங்கமைப்பார்.. கலையில் எந்த மனநிலையில் வந்தாரோ அந்த மனநிலையில் முடியும் வரை இருப்பார். கிளையின் பணியை எளிதாக்கினார் என்றார்.
இந்திய அணியின் பந்து வீச்சாளர் அந்த வங்கிக் கிளையில் ஒரு வாடிக்கையாளர். அவரது தாயார் நிகழ்ச்சியில் பத்மாவைப் புகழ்ந்து பேசுகிறார்.
நிகழ்ச்சி தொடங்கி பத்து நிமிடம் கழித்து தாரணி வந்திருந்தாள். அவள் நுழையும் போதே இருவரும் பார்த்துக் கொண்டார்கள். தாரணி நடுவயதில் இருக்கிறாள்.
தாரணி ஒரு வாடிக்கையாளர். நந்தினியின் முயற்சியில் காரணிக்குக் கடன் கிடைக்கிறது. அவள் இவ்வளவு தூரம் பொருளாதார முன்னேற்றம் அடையக் காரணம் பத்மாதான்.
கதை தாரணியைப் பற்றிப் பேசும்போது பின் பக்கமாகச் சுழலுகிறது. தாரணி லோன் வாங்க மானேஜரைப் பார்க்க வருகிறாள்.
லோன் விஷயமாக மேனேஜரைப் பார்க்க வேண்டுமென்றால் மாலை மூணு மணிக்கு வர சொல்கிறாள் பத்மா. திரும்பவும் மூன்று மணிக்கு வரும்போது மேனேஜர் அலுவல் விஷயமாகப் போய்விடுகிறார்.
தாரணியை அடுத்த நாள் வரும்படி பதமா கூறுகிறாள்.
பதமா ஓய்வு பெறும் நாளில் தாரணி 300 கிலோமீட்டர் தூரத்திலிருந்து பத்மாவைப் பார்க்க வந்திருக்கிறாள். “
தாரணியைப் பேசக் கூப்பிடுகிறார்கள். தாரணி பேசுகிறாள். “ஒரு பெரிய அரசமரத்தோட நிழலைப் பார்க்கிறோம் அதுக்கடியில் ஒரு தண்ணீர்ப் பந்தல் இருக்கு. ஒரு பானை நிறைய தண்ணீரும் அதோடா மூடிமேல ஒரு பிளாஸ்டிக் டம்ளரும் இருக்கு. நாம் அந்த நிழலல் நிக்கறோம். ரெண்டு டம்ளர் மூணு டம்ளர் தண்ணீர் குடிக்கிறோம். அப்ப தீரர்து நம்ம தாகம் மட்டும் இல்ல. நம்மோட துக்கமும்தான். இந்த மரத்ததை நட்டவருக்கு இந்த நாள்ல இந்த நிமிஷத்துல நாம் வரப்போறோம்னு தெரியாது. அன்னைக்கு காலைல அந்த பானையில் தண்ணீர் நிரப்பினவருக்கும் நம்மள தெரியாது. எத்தனையோ வருஷத்துக்கு முன்னாடி நடப்பட்ட மரமும் ஒரு டம்ளர் தண்ணீரும் நம்ம துக்கத்தை இல்லாமல் ஆக்கி நம்பிக்கை தருது. அந்த மரத்து நிழலும் ஒரு டம்ளர் தண்ணீரும் போன்றவர் பதமா மேடம்.”
சாதாரண ஒரு நிகழ்ச்சிதான் இங்குக் கதையாக மாறி உள்ளது.
அந்த நிகழ்ச்சியில் உள்ளடங்கிய எத்தனையோ உணர்வலைகள் இங்குக் கதையாகப் பின்னப்பட்டுள்ளன.
இந்தக் கதையின் கூறுகளைப் பார்ப்போம்.
பத்மா என்பவர் வங்கியில் ஒரு சாதாரண காசாளர் பணியில் சேர்ந்ததிலிருந்து பதவி மூப்பு வரும் வரை கதை விவரிக்கப்படுகிறது.
பெரிய பதவியை வகிக்காவிட்டாலும், அவருடைய பணியில் அவர் நேர்மையாக இருந்திருக்கிறார்
தாரணி என்பவருக்கு வங்கியிலிருந்து லோன் வாங்க உதவியிருக்கிறார் அதற்கு நன்றிக்கடனாக பத்மாவின் நட்புக்காக தாரணி 300 கிலோமீட்டர் தூரத்திலிருந்து கார் ஓட்டிக்கொண்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்திருக்கிறார்.
இந்தக் கதையை இப்படி எழுதியிருக்கிறார் கதாசிரியர். ஒரு இயல்பான நிகழ்ச்சியை விவரிக்குமுன் எல்லாவற்றையும் கதைகளாக மாற்றி உள்ளார். கதைக்குள் கிளைக்கதைகள் வருகின்றன. மேலும் பணிமூப்பு என்ற நிகழ்வை ஒரு கதையாகக் கட்டமைக்கிறார்.
ஒரு நாகலிங்க மரம் நின்று கொண்டிருக்கும். தன்னைச் சுற்றி தான் உருவாக்கிய மலர்களை அலங்காரமாய் செய்து கொண்டு மெல்லிய மணம் காற்றில் பரவ விண் நோக்கி மெல்ல அசைந்தவாறு வளரும். பத்மா அதன் நிழலில் நின்று கை கூப்பி வணங்கினாள். சிறு குழந்தையாயிருந்த போது அப்பா மடியில் உட்கார வைத்து கதை சொன்னது. ‘’பத்மாக்கண்ணு! ஆதுரசாலைல அடிப்பட்டு சிகிச்சை எடுத்துக்கற சீடன் குருகிட்ட கேக்கறான். ‘’குருநாதா! எல்லாமே பிரம்மத்தோட ரூபம்னு நீங்க சொன்னீங்க. அப்ப மதம் பிடிச்ச யானையும் பிரம்மம் தானே.’’ குருநாதர், ‘’நான் சொன்னது முழு உண்மை குழந்தை. நீ அதில பாதியை மட்டும் புரிஞ்சுகிட்ட. முழுசா புரிஞ்சுகிட்டிருந்தா ’விலகிப் போ! விலகிப் போ!’ன்னு சொன்ன யானைப் பாகனையும் நீ பிரம்ம சொரூபமா பாத்திருப்ப.’’ அப்பா எத்தனை கதைகள் எனக்கு சொன்னீர்கள். இப்போது நீங்கள் எங்கே? நீங்கள் சொன்ன புத்தர் கதை. ‘’அம்மா! சாவே நிகழாத ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒரு பிடி கடுகு கொண்டு வா அம்மா. உன் மகனை நான் உயிர்ப்பிக்கிறேன்.’’ ராமர் கதை. ‘’தன்னையே தமர்க்கு நல்கும் தனிப்பெரும் பதம்’’. நீ ராமான்னு அவன் பேரைச் சொன்னா போதும். ’’எங்கேடா இருக்கிறான் ஸ்ரீஹரி?’’ பிரகலாதன் சொல்கிறான். ‘’அப்பா! அவன் எங்கும் இருப்பான். துரும்பிலும் இருப்பான். தூணிலும் இருப்பான்.’’ கீதைல கிருஷ்ணன் சொல்றான்: ‘’சேவா பரம் தர்ம’’. அப்பா நீங்கள் ஒரு குரலாக என் மனதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறீர்கள்.
கதைக்குள் கதையாக இதைக் கொண்டு போகிறார். ஆனால் சாதாரண நிகழ்ச்சிதான் இந்தக் கதை. ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய கதை. கதை சொல்லும்படி பேரன் வற்புறுத்தலுடன் கதை முடிவடைகிறது.