அஞ்சலட்டைக் கதைகள் 21

21.07.2020

அழகியசிங்கர்

இது என் 21வது கதை. இந்தக் கதை வாசிக்கும்போது இரண்டரை நிமிடங்களுக்குள் முடிந்து விடுகிறது.

ஏன் இப்படி? 

அந்த இடம் அமைதியாக இருந்தது.  கேட்டிலிருந்து  ஆசிரமத்தைப் பார்க்கும்போது அமைதி என்றால் அப்படியொரு அமைதி.  அங்கு எல்லோரும் சந்திக்கும் பெரிய கூடத்தில் ஒருவர் நுழைந்து பார்த்தால் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அமர்ந்திருப்பது தெரியும்.  எல்லோரும் மெதுவாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதனால் அங்கு அமைதி கெடுவதுபோல் தோன்றுகிறது.
ஜீவன் முக்தர் மெதுவாக நடந்து வருகிறார்.  வயது அதிகமாக இருப்பதால் அவருடைய தள்ளாட்டம் தெரிகிறது. அவர் உள்ளே நுழைந்தவுடன், எல்லோரும் பேசுவதை நிறுத்தி விடுகிறார்கள்.  அவர் மெதுவாக அவருக்குப் போடப்பட்டுள்ள மேடையில் அமர்ந்து கொள்கிறார்.  எல்லோரும் எழுந்து நின்று நமஸ்காரம் செய்கிறார்கள்.
கூட்டம் முழுவதையும் ஒரு நிமிடம் நோட்டம் விடுகிறார். பின் கண்ணை மூடி தியானம் செய்கிறார்.  கூட்டம் அவரையே பார்த்துக் கொண்டிருக்கிறது.
சில நிமிடங்களில் கூடத்தின் வாசலில் சலசலப்பு கேட்கிறது. ஒரு பெண் தலைவிரி கோலமாய் உள்ளே நுழைகிறாள்.  அவள் கையில் ஒரு குழந்தை இருக்கிறது.  அவள் அழுதபடியே வருகிறாள்.   நேராக ஜீவன் முக்தர் முன் போய் நிற்கிறாள்.  எல்லோரும் அவளைத் தடுக்க முயல்கிறார்கள்.  கண்ணை மூடிக்கொண்டிருந்த ஜீவன் முக்தர், சலசலப்பைக் கேட்டு கண்ணைத் திறந்து பார்த்து, அவள் என்ன சொல்ல விரும்புகிறாள் என்று நினைக்கிறார்.
அவள் நேரிடையாக ஜீவன் முக்தர் முன் குழந்தையை அவர் பார்வையில் பட வைக்கிறாள்.  
“சாமீ, என் உயிருக்குயிரான குழந்தை.  இப்போ செத்துப் போச்சு.. நீங்கதான் எப்படியாவது உயிர் கொடுக்க வேண்டும்,” என்கிறாள்.
ஜீவன் முக்தர் திகைக்கிறார்.  என்ன சொல்வதென்று அவருக்குத் தெரியவில்லை.  அங்கிருக்கும் கூட்டம்  குழந்தையைத் தூக்கிக்கொண்டு போகச் சொல்கிறார்கள்.
ஜீவன் முக்தர் எல்லோரையும் அமைதிப் படுத்துகிறார்.  அந்தப் பெண்மணியைப் பார்த்து, “குழந்தையைப் பக்கத்து அறையில் வைத்துவிட்டு மாலை வரும்வரை காத்துக் கொண்டிரு.” என்கிறார்
அந்தப் பெண்மணியும் பக்கத்து அறைக்கு எடுத்துக்கொண்டு போய்  குழந்தையை ஒரு கட்டிலில் வைக்கிறாள். குழந்தைக்கு எப்படியாவது உயிர் வந்து விடவேண்டுமென்று கலக்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
நேரம் ஆக ஆக அவளுடைய புலம்பல் கொஞ்சம் கொஞ்சமாக அடங்குகிறது.  
மாலை நேரம் வருகிறது.  குழந்தையை எடுத்துக் கொண்டு செல்லலாம் என்ற எண்ணத்தில் ஜீவன் முக்தர் முன் வந்து நிற்கிறாள். 
“உனக்குப் புரிந்திருக்குமென்று நினைக்கிறேன்.  என்னிடம் எந்தச் சக்தியும் இல்லை.  இறந்த குழந்தை இறந்ததுதான். கடவுள் வந்தாலும் பிழைக்க வைக்க முடியாது.  நீ பேசாமல் குழந்தையை எடுத்துக்கொண்டு போ,” என்கிறார்.
அவள் ஒன்றும் சொல்லாமல் குழந்தையை எடுத்துக்கொண்டு போகிறாள். இப்போது அவள் அழவில்லை.

“அஞ்சலட்டைக் கதைகள் 21” இல் ஒரு கருத்து உள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன