தாவோ தே ஜிங் 3 (சாரமும் விசாரமும் : மொழி பெயர்ப்பு சந்தியா நடராஜன்)


அழகியசிங்கர்

திரும்பவும் சந்திக்கிறார்கள்.  தாவோ தே ஜிங் குறித்து உரை நிகழ்த்துகிறார்கள்.  

ஜெகன் : இதைக் கல்லூரியில் பாடப் புத்தகமாக வைத்து பாடம் நடத்தினால் ஓரளவு புரியும்.


மோகினி : இந்தப் புத்தகத்தின் பெயர் தாவோ தே ஜிங்.  அதில் தே என்பதற்குத் தனி விளக்கம் கொடுக்கப் பட்டிருக்கிறது.  தே என்பது ஒழுக்கம் அல்லது நற்பண்புகள் என்று பொருள் கொள்ளப்படும் என்கிறார். இருப்பினும் தே சற்று வித்தியாசமானது.  சுயமாக உருவாகும். தன்னளவில் உறுதி காட்டும்.  இனிய பண்பு அது என்கிறார்.   54வது பாடல் இப்படி மொழிபெயர்க்கப் பட்டுள்ளது.  அந்தப் பாடலின்  ஒரு பகுதியைச் சொல்ல விரும்புகிறேன்.
தே (ஒழுக்கம்) உனது வாழ்வில் நிலைபெறட்டும். நீ உண்மையானவன் ஆவாய் தே உனது குடும்பத்தில் நிலை பெறட்டும் உனது குடும்பம் செழிக்கும் தே உனது நாட்டில் நிலைபெறட்டும் உனது நாடு வலம் கொழிக்கும் தே பிரபஞ்சத்தில் நிலை பெறட்டும் பிரபஞ்சம் இசையமைக்கும் எனவே உன்னைப் போல் பிறரைக் காண்.. இப்படிப் போகிறது இந்த பாடலின் மொழிபெயர்ப்புஇங்கு தே என்று குறிப்பிடுவதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்.


அழகியசிங்கர் : நான் ஒரு இடத்தில் இந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டு  திகைத்து விட்டேன்.


ஜெகன் : எந்த இடம்?


அழகிய சிங்கர்:   இன்றைய எழுத்தாளர்கள் நிலையைப் பற்றி அதில் குறிப்பிடுகிறார்.  நூலாசிரியர் 56வது பாடலுக்கு விளக்கம் தருகிறார்.  அதை இங்கு உங்களிடம் வாசிக்க விரும்புகிறேன்.
தாவோவில் நிலை பெற்று விட்டால், எவற்றாலும் கவரப்பட்டவர்களாக இருக்க மாட்டார்கள் (எழுத்தாளர்கள் என்று நான் சேர்த்திருக்கிறேன்). தன்னை அங்கீகரிக்கவில்லை என்று புலம்பவும் மாட்டார்கள்.  தன் மீது விழும் வெளிச்சத்தில் மகிழ்வதில்லை.  இப்படி சொல்லிக் கொண்டே போகிறார்.  இறுதியில் நமது காலத்தின் மிகப் பெரிய நோய் அங்கீகாரத்திற்கும் அடையாளத்திற்கும் ஏங்கித் தவித்து மன இறுக்கத்தில் அவதியுறுவதுதான்.
நேர் பேச்சில் இந்த நூலாசிரியருடன் நான் பேசிக்கொண்டிருக்கும் போது இதை அடிக்கடி சொல்வார்.  அப்போது தாவோவே  இவரிடம் புகுந்துகொண்டு நேரில் சொல்வது போல் இருக்கும்.  இதை  உணர வேண்டுமென்று எனக்குத் தோன்றுகிறது.


ஜெகன் : அறுபதாவது பாடலைப் பாடும்போது  ஒரு விரிந்த பரந்த நாட்டை ஆள்வது என்பது ஒரு சின்னமீனை வறுத்துச் சமைப்பது போல என்கிறார்.  கொஞ்சம் அதிக சூடேறினால் சின்ன மீன் கருகி விடும். 


லாவோ ட்சு என்ன சொல்கிறார் என்றால் சின்ன மீனை இதமாக வறுத்துச் சமைப்பது போல ஒரு பரந்த நாட்டைப் பராமரிக்க வேண்டும் என்று.
மோகினி : 49வது பாடலுக்கும் விளக்கம் அளித்திருக்கிறார் ஆசிரியர்.  அதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்.


தாவோ தே ஜிங் நூலில் தாவோ என்பதற்கு வழி என்று பொருள்.  தே எனில் ஒழுக்கம்.  ஒழுக்கம் என்பது தன்னலமின்மை என்பதைக் குறிக்கும். இந்த இடத்தில் பாரதியாரிடமிருந்து உதாரணத்தைக் கொடுக்கிறார்.  தன் செயல் எண்ணித் தவிப்பது தீர வேண்டும் என்று பராசக்தியிடம் பாரதி வைத்த பிரார்த்தனையை முன் வைக்கிறார்.
தன்னிலமின்மை என்பது செயலின் போக்கில் இயற்கையாக இயல்பாக அமைவது அதுவே தே என்கிறார்.  
தாவோயிசத்தில் ஆழ்ந்த ஞானிகளுக்குக் கெட்டவர்களும் நல்லவர்களே.  ஞானிகள் பேதமற்றவர்கள். 
தனக்காக அன்றிப் பிறர்க்காக வாழும் வாழ்க்கையைத் தனது தவமாக அல்ல, இயல்பாகக் கொள்கின்றன தாவோவில் இசைவு கொண்ட உயிர்கள். பிறருக்காக வாழும் வாழ்க்கையை முன்மொழிகிறது தாவோ. 


இந்த இடத்தில் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் இது சாத்தியம் என்கிறார். 


அழகியசிங்கர்: 80வது பாடலை எடுத்துக் கொள்ளுங்கள்.


உலக நாடுகளுக்கு அறிவுறுத்துகிறார்.  அவரவர் இடத்தில் மகிழ்ச்சியுடன் வாழும்படி குறிப்பிடுகிறார். பக்கத்து நாட்டை எட்டிப் பார்க்கவும் இவர்கள் பிரியப்படுவதில்லை என்கிறார். 


ஜெகன் : இந்தக் கொரோன  காலத்தில் அவரவர் வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கும்படி கொல்கிறாரா?


அழகியசிங்கர் : அப்படித்தான் நினைக்கிறேன்.   இந்தப் புத்தகத்தைப் பற்றி எழுதி முடிக்கும்போது ஒரு இடத்தில் 53வது பாடல் ஒன்று பட்டது. அதன் கருத்தைக் கூறும்போது நூலாசிரியர் இப்படிக் கூறுகிறார்.  
லாவோட்சுவின் நூல் ஓர் அரசியல் நூல்.  தாவோ தே ஜிங் தனிமனித அறத்தையும் சமூக நலனையும் ஆய்வு செய்கிறது.  இந்த 53ஆவது பாடல் நாடும் வீடும் நலம் பெற எழுந்த சிந்தனை. 
செல்வம் ஓரிடத்தில் குவிந்தால் அது ஆபத்தின் அறிகுறி.  அது சமநிலைச் சமுதாயத்திற்கு எதிரான போக்கு.
எல்லாவற்றிலும் சமநிலையை விரும்பும் விரும்பும் லாவோட்சு சமூகத்திலும் அதைத்தானே விரும்புவார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன