ஆத்மாநாம் ஒன்று
ஞாநி வீட்டில் என்று நினைக்கிறேன். ‘இலக்கு’ என்ற கூட்டம் நடந்தது. நான் எப்படி அங்குப் போனேன்? ஏன் கலந்து கொண்டேன் என்றெல்லாம் புரியவில்லை. என் பக்கத்தில் ஒருவர் அமர்ந்திருந்தார். அவர்தான் ஆத்மாநாம் என்று எனக்குத் தெரியாது. அவர் கையில் ‘ழ’ இதழ். அது எந்த இதழ் என்றெல்லாம் ஞாபகத்தில் இல்லை. ஏனென்றால் ஆத்மாநாம் என்ற பெயர் அப்போது பிரபலமாகவில்லை. ஆனால் எனக்கு அவரைப் பார்க்கும்போதும், அப்பத்திரிகையை அவர் எல்லோருக்கும் கொடுத்துக் கொண்டிருக்கும்போதும் ஏதோவிதமான பரிதாபமான உணர்வு ஏற்பட்டது. ஏன் அந்த இளைஞரைக் குறித்து அது மாதிரியான உணர்வு ஏற்பட்டதென்று தெரியவில்லை. எனக்கு இலக்கியக் கூட்டமும், கவிதையும் புரியாத தருணம் அது. நான் முதன்முதலாகப் பேசாத ஆத்மாநாமை அப்படித்தான் சந்தித்தேன்.
ஆத்மாநாம் : இரண்டு
ஒருமுறை எஸ்.வைத்தியநாதன் என்ற என் நண்பர், ஆத்மாநாமுடன், க்ரியாவுக்கு என்னை அழைத்துச் சென்றார். üழý வெளியீடு புத்தகங்களை வாங்கும்படி கோரினார். நானும் சரி என்றேன். க்ரியாவில் ‘ழ’ வெளியிட்ட எல்லாப் புத்தகங்களையும் வாங்கிக் கொண்டேன். üழý புத்தகங்கள் எல்லாம் விலை குறைவாக இருந்தன. ஆத்மாநாமிடம் üகாகிதத்தில் ஒரு கோடுý என்ற அவர் புத்தகத்தை நீட்டி, கையெழுத்துப் போடும்படி கேட்டுக்கொண்டேன். அவர் என் பெயரை எழுதித் தேதியிட்டு கையெழுத்துப் போட்டார். பின், நான், அவர், வைத்தி மூவரும் சாந்தி தியேட்டர் பக்கத்திலுள்ள ஒரு ரெடிமேட் துணிக்கடைக்குச் சென்றோம். அங்கு சில துணிமணிகளைப் பார்த்தோம். பின் திரும்பி வந்துவிட்டோம். ஒன்றும் வாங்கவில்லை. ஏன் அங்குச் சென்றோம்? ஏன் ஒன்றும் வாங்காமல் வந்தோமென்றெல்லாம் புரியவில்லை. திரும்பவும் அங்கிருந்து கவிஞர் ஆனந்த் வீட்டிற்கு வந்தோம். ஆத்மாநாம் ஆனந்தை குடும்பத்தோடு தன் வீட்டிற்கு வரும்படி கேட்டுக்கொண்டார். நாங்கள் அங்கிருந்து கிளம்பும்போது வழியில் ஆத்மாநாமின் நிஜமே நிஜமாகக் கவிதையைக் குறித்து விசாரித்தேன். இதன்மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள்? என்று ஆத்மாநாமைக் கேட்டேன். அவர் என்ன பதில் சொன்னார் என்பது ஞாபகத்தில் இல்லை. இது நான் சந்தித்த இரண்டாவது ஆத்மாநாம்.
ஆத்மாநாம் மூன்று
இந்த முறை ஞாநியின் திருமண அறிவிப்பு. அது ஒரு நாடகத்துடன் தொடங்கியது. மியூசியம் தியேட்டரில் இந்த நிகழ்ச்சி தொடங்கியது. நான் ஆத்மாநாம் பக்கத்தில் அமர்ந்திருந்தேன். நகுலனைப் பற்றி ஆத்மாநாமிடம் விசாரித்தேன். அவர் என்ன பதில் சொன்னார் என்பது ஞாபகத்தில் இல்லை. ஆனால் அவர் விமலாதித்த மாமல்லன் என்ற எழுத்தாளரைப் பார்க்க எழுந்து போய்விட்டார். மரியாதைக்கு என்னிடம் ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லை.
இந்தச் சந்தர்ப்பத்திற்குப் பிறகு நான் ஆத்மாநாமைச் சந்திக்கவில்லை.