பாலகுமாரன் பிறந்த நாள் இன்று…

அழகியசிங்கர்

1946 ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்தவர்.  முதலில் சிறுபத்திரிகை உலகத்தில் தன் காலடியைப் பதித்த பாலகுமாரன்.  வெற்றிகரமாகப் பிரபல எழுத்தாளராக மாறியதோடல்லாமல் 200க்கும் மேற்பட்ட நாவல்களும் 100க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதி சாதித்தவர்.
ஆரம்ப ‘கசடதபற’ இதழ்களில் அவர் கவிதைகள்தான் எழுதி உள்ளார். 
அக்டோபர் 1970 ஆண்டு வெளிவந்த ‘கசடதபற’ இதழில்  ‘மனித பாவங்கள்’ என்ற பெயரில் கவிதை எழுதியிருக்கிறார்.
அவர் பிறந்தநாள் போது அவர் கவிதையை வாசிக்க அளிக்கிறேன்.


மனித பாவங்கள்


இரட்டைத் தடங்களில்”

எதிர்ப் பட்ட ரயில்கள்

ஒன்றை ஒன்று கண்டதும்

கண் சிமிட்டிக் கொண்டன

பொறி பறந்தது

நெருங்கி வந்ததும்

வந்தனம் கூறின

குழ லொலித்தது

பிரிந்து போகையில்

இகழ்ச்சி  நிரைத்து

எச்சில் துப்பின

என் முகத்தில் கரி அடித்தது-

தடங்களைக் கடக்கையில் தெரிந்தது

ரயில்களின் சினேகிதம் கண்டு

கட்டைகள் குலுங்கிச் சிரிப்பது.


நான் ஒவ்வொரு மாதமும் இலக்கியச் சிந்தனைக் கூட்டத்தில் சுப்ரமணிய ராஜ÷வையும், பால குமாரனையும் பார்ப்பேன்.  அக் கூட்டத்தில் கலந்து கொண்ட இருவர்களும் எதாவது ரகளை செய்ய வருவதுபோல் இருக்கும்.
ஞானக்கூத்தனை குருவாக மதித்தவர்.  பாலகுமாரனுடைய சில கவிதைகள் ஞானக்கூத்தன் சாயல் இருப்பதாகத் தோன்றும்.
ஞானக்கூத்தன் கவிதைகள் குறித்து ஒரு கூட்டம் நடந்தது.  அதில் பாலகுமாரன், சுஜாதா போன்ற எழுத்தாளர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியைச் சிறப்புச் செய்தார்கள்.
அந்தச் சந்தர்ப்பத்தில் ஒரு நாள் முழுக்க கை வலிக்க வலிக்க எழுதிக்கொண்டே இருக்க வேண்டுமென்று பால குமாரன் சொன்னதாக நினைப்பு எனக்கு.
அதன்பின் ஞானக்கூத்தன் மறைந்தபோது இரங்கல் கூட்டத்தில் உடல் சௌகரியமாக இல்லாவிட்டாலும் கலந்து கொண்டு பேசினார்.  இதெல்லாம் மறக்க முடியாத தருணங்கள்.
பாலகுமாரன் எழுத்தில் இரண்டு விதமான போக்கைக் கண்டு பிடிக்க முடியும்.  யோகி ராம் சூரத் குமாரைச் சந்திக்குமுன் உள்ள எழுத்து, சந்தித்தபின் ஏற்பட்ட எழுத்து மாற்றம்.
நல்ல பெயரை திரைத்துறை அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்தது.   அதை ஒரு தருணத்தில் விட்டு விலகியும் விட்டார். 
ஒரு முறை நான் வண்டியில் போய்க் கொண்டிருந்தேன்.  பாலகுமாரனிடமிருந்து ஒரு போன் வந்தது.  
‘என்ன?’ என்று கேட்டேன்
‘என் வீட்டிற்கு வர முடியுமா?  உங்கள் நவீன விருட்சத்திற்கு நன்கொடை தர வேண்டும்’, என்றார்.
நான் எதிர்பார்க்காத ஆச்சரியம்.  அவர் வீட்டிற்குச் சென்றேன்.  அவருடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தேன்.  அவருடைய அறையைக் கோயில் மாதிரி மாற்றி இருந்தார்.  ஒரு தொகையை நன்கொடையாகக் கொடுத்தார்.  நான் சற்றும் எதிர்பார்க்காத தொகை அது. 
‘யோகி ராம் சூரத் குமார்தான் கொடுக்கச் சொன்னார்..கொடுக்கிறேன்,’  என்றார்.   


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன