அழகியசிங்கர்
இன்று புதுமைப்பித்தனின் நினைவு நாள். எதாவது ஒரு கதையைப் படித்துவிட்டு எதாவது எழுத முயற்சி செய்ய வேண்டுமென்று தோன்றியது.
பக்கம் குறைவாக உள்ள கதையாக எடுத்துக்கொள்ளலாமென்று பட்டது.
புதுமைப்பித்தன் 97 கதைகள் எழுதி உள்ளார். ஜøன் 30ல் மரணம் அடைந்தார். 1948ஆம் ஆண்டு.
இங்கு எடுத்துக் கொண்டிருக்கும் கதையின் பெயர் ‘ஒரு கொலை அனுபவம்.’ ஊழியன் என்ற பத்திரிகையில் 22.02.1935ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.
சாதாரண ஒன்றரைப் பக்கம் கொண்ட கதையில் புதுமைப் பித்தன் நகைச்சுவை உணர்வுடன் இந்தக் கதையை எடுத்துக்கொண்டு போகிறார்.
கதைசொல்லி சொல்வதுபோல் இந்தக் கதை ஆரம்பமாகிறது. இது ஒரு தானே சொல்கிற கதை.
இருட்டிலே ஒரு மனிதன் தள்ளாடிக் கொண்டு வருகிறான். ரோட்டில் ஒற்றை விளக்கு வெளிச்சம் மட்டும்தான் இருக்கிறது. வருகிற மனிதன் விளக்கு இருக்கும் இரும்பு கம்பத்தில் ஏறி குறுக்கில் அமர்ந்து கொண்டு விடுகிறான். உட்கார்ந்து கொண்டு ‘ராஜாதி ராஜன்’ என்று பாடுகிறான்.
இப்போதுதான் அவன் முகத்தைக் கவனிக்கிறான் கதைசொல்லி. ‘நான் தான அவன் இதென்ன வேடிக்கை’ என்கிறார் கதைசொல்லி. விளக்கு கம்பத்தில் ஏறி உட்கார்ந்திருப்பவனைப் பார்த்தால் கதைசொல்லி முகம் போல் இருக்கிறது. உடனே கதைசொல்லிக்குச் சந்தேகம் வருகிறது. இரட்டை சகோதரன் மாதிரி இருக்கிறானே என்று. உடனே கவலையும் ஏற்படுகிறது. ‘எங்கே வந்து சொத்தில் உரிமை கேட்கப் போகிறானோ’ என்ற கவலைதான்.
விளக்கெல்லாம் அணைந்து விடுகிறது. அந்த இருட்டில் பாதையின் திருப்பத்திலிருந்து இன்னொரு உருவம் வருகிறது. ஏன் இப்படி நடக்கவேண்டும்? அசாமியைப் பார்த்தால் பொம்மை மாதிரி இருக்கிறான். இதென்ன அதிசயம் அவனும் கதைசொல்லி போல் இருக்கிறான். ஒரே குழப்பமாகி விடுகிறது கதைசொல்லிக்கு. ‘கம்பத்தின் மீதி ஏறி இருக்கும் ஆசாமியும் நான்தான். இப்போது வருகிறானே அவனும் நான்தான்,’ என்ற குழப்பம் கதைசொல்லிக்கு.
இந்த இடத்தில் பிரம்மாவைப் பற்றிக் குறிப்பிடுகிறார். பிரம்மாவிற்கு நான் சொத்து சுகம் வைத்துக்கொண்டிருப்பதில் பொறாமையா என்கிறார்.
இரண்டாவது ஆசாமி நெருங்கி வருகிறான். அவனுக்குத் தாடியும் மீசையும் இருக்கிறது. அவனை உற்றுப் பார்க்கிறான் கதைசொல்லி. சந்தேகமே இல்லை அவனும் நான்தான் என்கிறான் கதைசொல்லி. மூன்று பேரும் நான்தானா என்ற குழப்பம். எல்லாம் நானே என்ற முக்தியை அடைந்து விட்டேனா?
தாடியுடைய என் கையில் என்ன மின்னுகிறது? என்ற கேள்வி கதைசொல்லிக்கு ஏற்படுகிறது. கத்தி.
‘முன் செல்லும் எனக்குப் பின் இந்த இரண்டாவது நான் ஏன் பதுங்கிப் பதுங்கிச் செல்ல வேண்டும்?
முதல் நான் எங்கே?’
முதல் நான் குஷியாகக் கம்பத்தின் மீது பாட்டுப் பாடுகிறான்.
நெருங்கி விட்டான் இரண்டாவது நான்.
அய்யோ கொல்கிறானே
மூன்றும் கதைசொல்லியின் குரல். எல்லாம் இருள். ஒன்றையும் காணோம்.
விழிக்கிறான். பகலில் என்ன தூக்கம் என்று முதுகைத் தட்டிக்கொண்டிருந்தான் நண்பன். கனவு. ஏன் இதுமாதிரி கனவு வருகிறது. துப்பறியும் நாவல் எழுத வேண்டுமென்று உள்ளத்தாசை. கதைசொல்லிக்கு. இந்த இடத்தில் கதைசொல்லி புதுமைப் பித்தனாக மாறி விடுகிறானோ? தூக்குத் தண்டனை இல்லாமல் ஆட்களைக் கொல்ல வேண்டும்.
பிறகு துப்பறிவோனாகக் கண்டு பிடிக்க வேண்டும். அப்பப்பா? அந்தத் தொழில் நமக்கு வேண்டாம் என்கிறார் புதுமைப்பித்தன் என்கிற கதைசொல்லி
பொதுவாக கதைசொல்லி வேறு கதை எழுதுபவன் வேறு. பலருடைய கதைகளில் கதை சொல்லி ஒரு பெண்ணாகவோ ஆணாகவோ முதியவனாகவோ சிறுவனாகவோ இருக்கலாம். அவர்கள் எல்லாம் கதை எழுதுபவனோடு மாறுபட்டுத்தான் தெரிவார்கள்.
இந்தக் கதையில்
புதுமைப்பித்தனே கதைசொல்லியாக வந்து அவருடைய கனவைச் சொல்கிறார். துப்பறியும் கதை எழுதப் போவதில்லை என்று குறிப்பிடுகிறார்.
எளிதான கதை. ஒன்றரைப் பக்கக் கதை. அதைச் சொல்லியிருக்கிற விதம் சிறப்பாக உள்ளது. இங்குதான் கதை எழுதும் விதத்தில் மேதாவித்தனம் தெரிகிறது. புதுமைப்பித்தன் கதைகளில் எந்தக் கதையை எடுத்துப் படித்தாலும் நம்மால் ரசிக்க முடியும். அவருடைய தனித்திறமை எல்லாக் கதைகளிலும் வெளிப்படுகிறது.