அழகியசிங்கர்
அழகியசிங்கர் : வணக்கம்.
ஜெகனும் மோகினியும் வணக்கம் தெரிவிக்கிறார்கள். காணொளி மூலம் ஒன்றாக சந்திக்கிறார்கள்.
அழகியசிங்கர் : எப்படி உள்ளீர்கள்?
ஜெகன் : நன்றாக உள்ளோம். ஆனால் வீட்டிலேயே இருக்கிறோம்.
மோகினி : நீங்கள் சொன்ன பா ராகவனின் யதியைப் படித்து விட்டேன்.
ஜெகன் : நான் இன்னும் கொஞ்சம் பக்கங்கள் படிக்கப் பாக்கி இருக்கின்றன.
அழகியசிங்கர் : உங்களுக்கு என்ன தோன்றுகிறது அந்த நாவலைக் குறித்து
மோகினி : பக்கங்கள் அதிகம். இன்னும் குறைந்த பக்கங்களில் அவர் எழுதியிருக்கலாம்.
ஜெகன் : ஒரு எழுத்தாளரை இத்தனைப் பக்கங்கள்தான் எழுத வேண்டுமென்று கட்டாயப்படுத்தவோ சொல்லவோ முடியாது.
அழகியசிங்கர் : அவ்வளவு பக்கங்களை உடைய ஒரு நாவலை ஒரு வாசகர் வாசிக்க வேண்டும். இன்றைய வாசகர்கள் அதற்குத் தயாராக இருக்கிறார்களாக என்று தெரியாது.
மோகினி: அவ்வளவு பக்கங்கள் இருந்தாலும் இவர் நாவலை வாசிக்க வேண்டுமென்ற எண்ணம் ஏற்படாமஙூல்லை.
ஜெகன் : என் நண்பர் ஒருவர் தால்ஸ்தாயின் ‘வார் அன்ட் பீஸ்’ என்ற நாவலை ஒரு வாரத்தில் படித்து விட்டார்.
மோகினி : அதையே க.நா.சு இரண்டு மூன்று முறைகள் படித்ததாக சொல்லியிருக்கிறார்.
அழகியசிங்கர் : ராகவன் நாவலைப் படித்துக்கொண்டு வரும்போது இது தொடர்பாக எனக்கு இன்னும் இரண்டு மூன்று நாவல்கள் ஞாபகத்திற்கு வருகின்றன. ஒன்று க.நா.சுவின் அவதூதர், இரண்டு : அசோகமித்திரனின் மானசரோவர், மூன்று ஹெர்மன் ஹெஸ் எழுதிய ‘சித்தார்த்தா’. இதைத் தவிர இன்னொரு புத்தகத்தையும் இங்குக் குறிப்பிட வேண்டும். அது ‘த அக்டிவ் சைட் ஆப் இன்பினிடி’. கார்லஸ் காஸ்டினடா எழுதிய புத்தகம்.
ஜெகன் : இந்த நாவலைப்பற்றி சுருக்கமாகச் சொல்லி விடலாம்.
அழகியசிங்கர் : இந்த நாவலின் கதையை இரண்டே வரிகளில் குறிப்பிடலாம். ஆனால் ராகவன் எழுதிய 925 பக்கங்களையும் படிக்க வேண்டும். ஒரே குடும்பத்தைச் சார்ந்த நால்வர் ஞான வழியைத் தேட ஒவ்வொருவரும் வீட்டிற்குத் தெரியாமல் வெளியேறி விடுகிறார்கள். நால்வரும் ஒவ்வொரு வழியைத் தேடி செல்கிறார்கள்..அம்மா மரணம்போது சந்திக்கிறார்கள். இதுதான் கதை.
மோகினி : இதில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்கள் கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது.
ஜெகன் : முதல் பையன் பெயர். விஜயகுமார். இரண்டாவது வினய் குமார். மூன்றாவது விமல் குமார். நான்காவது வினோத் குமார்.
அழகியசிங்கர் : கதை கடைசி வரை விமல் குமார் மூலமாகத்தான் நடைபெறுகிறது. மடிகேரியில் தங்கியிருக்கும் விமல் குமார் ஒரு ஸ்தாபனமாகி விடுகிறான். அவனைச் சுற்றிலும் ஒருசில சீடர்கள். கேசவன் மாமா விமல் குமாரைப் பார்க்க வருகிறார். அவனுடைய அம்மா உடல் நிலை சரியில்லாமல் இருப்பதாகவும் ஒரு முறை வந்து பார்க்க வேண்டுமென்று கூப்பிடுகிறார்.
ஜெகன் : கேசவ மாமா அவன் அம்மா கேட்கச் சொன்னதைக்கேட்கிறார். “உண்மையைச் சொல்லு. நீ கடவுளைப் பாத்தியா? அப்படி ஊர் உலகமெல்லாம் திரிஞ்சு என்னத்த கத்துண்டே? ஒன்ன பாத்ததும் இதத்தான் கேக்க சொன்ன உங்கம்மா.”
மோகினி : விமல் குமாருக்குச் சொகுசான வாழ்க்கை அமைந்து விடுகிறது. அந்த வாழ்க்கையை அவன் விரும்பவில்லை. உதற விரும்புகிறான். ‘அகங்காரமே ஆடை. அதைக் களைவதற்குப் பிக்ஷை எடுத்து உண்பதே சரி,’ என்கிறான்.
அழகியசிங்கர் : இத்தனைப் பக்கங்களிலும் பளிச் பளிச்சென்று வரிகள். இந்த நாவலை அவ்வளவு சுலபமாக விவரிக்க முடியாது. நான் பல நாட்களாக இதைப் பற்றி என்ன சொல்வது என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
மோகினி : மூத்த அண்ணன் விஜயகுமார் முதல்முதலாக வீட்டைவிட்டுப் போவதை விமலிடம் தெரிவிக்கிறான். அவன் சொல்கிறான் : ‘ ‘வாழ்க்கை ரொம்பச் சின்னதுடா விமல். பாடம் மட்டும் படிச்சி மார்க் வாங்கி வீணாப் போயிடக்கூடாது.’
ஜெகன் : வீட்டைவிட்டு முதல் அண்ணா போய்விடுவான் என்று விமலுக்குத் தெரிந்தாலும் யாரிடமும் அவன் சொல்லவில்லை. அவன் சொல்லிக்கொள்ளாமல் போனது அந்தக் குடும்பத்தில் ஒரு அடி. அவன் அப்பா கலங்கிப் போய்விட்டார். அம்மாவிற்கும் பெரிய அதிர்ச்சி. இந்த நாவல் சுழற்றி சுழற்றி நான்கு சகோதரர்களிடம் நடக்கிறது.
மோகினி : இரண்டாவது அண்ணன் வினயும் வீட்டை விட்டுப் போய்விடுகிறான். அவனை ஸ்ரீரங்கப்பட்டணத்து அரசியல்வாதி வீட்டு வரவேற்பறையில் விமல் பார்க்கிறான். விமல் அவனைப் பார்க்கிறான். ‘காலம் அவன் முகத்தை ஒடுங்கவைத்திருந்தது. கன்னங்கள் இரண்டு டொக்காகியிருந்தன. பிதுங்கி விழுந்துவிடுவது போலக் கண்கள் திரண்டு வெளியே தெரிய, முகம் அடர்ந்த தாடியில் பாதி அதற்குள்ளாகவே வெளுத்திருந்தது. அவன் தலை வாருவதை நிறுத்திப் பல ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும். வினய்யின் 45 வயதில் விமல் பார்க்கிறான்
அழகியசிங்கர் : இந்த நாவலைப் பற்றிய உரையாடலை அவ்வளவு சீக்கிரமாக முடித்து விட முடியாது. இன்னும் பேசுவோம். (தொடரும்)