அழகியசிங்கர்
“ சூரியனுக்குப் பின் பக்கம் என்ற ஞானக்கூத்தன் கவிதையைப்பற்றி நேற்று குறிப்பிட்டிருந்தேன். உடனே நண்பர் ஸ்ரீதரிடமிருந்து (சிரித்த முகமுடைய நண்பர்) ஒரு தொலைப்பேசி வந்தது. மிளகாய்ப் பழங்கள் மாடியில் என்ற கவிதையைப் பற்றிக் குறிப்பிட்டார். கடைசி இரண்டு வரிகளில் என்ன சொல்ல வருகிறார் என்று கேட்டார்.
நானும் படித்துப் பார்த்தேன். கவிதை புரிவதுபோல் இருக்கிறது. ஆனால் கடைசி இரண்டு வரிகளில் என்ன சொல்கிறார் கவிஞர் என்று தெரியவில்லை.
முதலில் ஒரு கேள்வி எழுகிறது. அணில் மிளகாய்ப் பழத்தைத் தீண்டுமா? என்ற கேள்வி. மிளகாய்ப் பழம் வைத்து வேற எதுவோ ஞானக்கூத்தன் சொல்கிறாரா? இதையெல்லாம் மீறி ஞானக்கூத்தன் கவிதையில் ஒரு வசீகரம் தென்படுகிறது.
கவிதையை இங்கே கொடுக்கிறேன். நீங்களும் படித்துவிட்டு உங்களுக்குப் புரிகிறதா என்று கூறுங்கள்.
1982ல் இந்தக் கவிதை எழுதப்பட்டது.
மிளகாய்ப் பழங்கள் மாடியில்
மிளகாய்ப் பழங்கள் மாடியில் உலர்ந்தன ஆசை மிகுந்து அணிலொன்று வந்தது பழங்களில் ஒன்றைப் பற்றி இழுத்து கடித்துக் கடித்துப் பார்த்துத் திகைத்தது முதுகுக் கோடுகள் விரல்களாய் மாறித் தடுத்திழுத்து நிறுத்திய போதும் ஒவ்வொன்றாகக் கடித்துத் திகைக்க உலவைப் பழங்கள் எங்கும் சிதறின ஜன்னலை விட்டுத் திரும்பினேன் எது நடந்தாலும் கதிருக்குக் கீழென்று