சுஜாதாவின் சில வித்தியாசங்கள்

சுஜாதாவின் சில வித்தியாசங்கள்

அழகியசிங்கர்

தேர்ந்தெடுத்த சிறுகதைகள் முதல் தொகுதி வைத்திருக்கிறேன். சுஜாதாவின் கதைகள் எல்லாம். 1968 ஆம் ஆண்டு எழுதிய சில வித்தியாசங்கள் என்ற கதை. முதன் முதலாக சுஜாதாவின் கதைகளை ஒவ்வொன்றாகப் படிக்கலாமென்று ஆரம்பித்தேன்.

நான் ஒரு கதையைப் படித்தால் அந்தக் கதையைப் பற்றி உடனே எழுதி விடவேண்டும். இல்லாவிட்டால் அந்தக் கதை கொஞ்சம் கொஞ்சமாக மறந்துவிடும்.

நான் ஏகப்பட்ட புத்தகங்களை ஒரே சமயத்தில் படித்துக் கொண்டிருக்கிறேன். நியாயமாக என் ஆசை நான் படித்ததெல்லாவற்றையும் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டுமென்பதுதான்.

நான் மெதுவாகத்தான் படிக்கிறேன். ஆனால் படித்ததை அப்படியே விட்டுவிடத் தயாராய் இல்லை. மனதுக்குள்ளாகவாவது எதை எதைப் படித்தோம் என்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நாட்கள் போகப் போக இன்னும் சில புத்தகங்கள் படிப்பதற்குச் சேர சேர ஒவ்வொன்றாய் மூளையிலிருந்து கழன்று கொண்டு விடுகின்றன.

சரி, சுஜாதா கதைக்கு வருகிறேன். இந்தக் கதையை 1968ஆம் ஆண்டிலேயே எழுதி விட்டார். குழப்பமில்லாத நடை. வாசகனைக் கட்டிப் போடுகிற மாதிரி விறுவிறுவென்று எழுதி இருக்கிறார்.

நான் ராஜாராம். டில்லி வாசி என்று கதையை ஆரம்பிக்கிறார்.ராஜாராம் பேசுவதுபோல் கதையைக் கொண்டு போகிறார். நேபாளத்தின் தலைநகர் தெரியாததாலும் ஆஸ்திரேலியாவின் ஜனத்தொகை தெரியாததாலும் ஐ.ஏ.எஸ்ஸில் தேறாமல் மத்திய சர்க்கார் செகரடேரியேட்டில் ஒரு சாதாரண அஸிஸ்டெண்டாக சம்பள ஏணியில் இருப்பவன் ராஜாங்கம்..

இந்தக் கதை முழுவதும் ஒரு நகைச்சுவை உணர்வுடன் எடுத்துக்கொண்டு போகிறார். ராஜாராம் சொல்கிறான். இந்த உலகத்தில் இன்றைய தேதிக்கு என் சொத்து ஒரு டெரிலின் சட்டை, பெட்டி நிறையப் பிரமாதமான புத்தகங்கள், ராஜேஸ்வரி. கடைசியில் குறிப்பிடப்பட்டவள் என் மனைவி என்கிறான். வீட்டின் பட்ஜெட்டையும் சித்தார்த்தனின் அழுகையையும் சமாளிக்கும் சாமர்த்தியம் படைத்த இவள் என்வாழ்வின் ஒரே அதிர்ஷ்டம் என்கிறான் ராஜராம்.

29ஆம் தேதியன்று அவன் கையில் இருப்பது மூன்று ரூபாய் அவனுக்குத் தேவை முந்நூற்று இருபத்தைந்து ரூபாய். எதற்கு? சென்னைக்கு விமான டிக்கெட் வாங்க. அவன் அம்மாவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. தந்தி வந்திருக்கிறது. உடனே புறப்பட்டுப் போக வேண்டும்.

அம்மாவை உடனே போய்ப் பார்க்க வேண்டும். விமானப் பயணம் மூலம். யாரிடமாவது பணம் கடன் வாங்கிக்கொண்டு போக வேண்டும். யாரைக் கேட்பது என்று குழப்பம். நண்பர்களைப் போய் இருபத்தொன்பதாம் தேதி கேட்டால் ஹாஸ்யம் கேட்டதுபோல் சிரிப்பார்கள். மனைவியிடம் நகைகள் கிடையாது.

பணம் கேட்க ராமநாதன் என்பவரைப் பார்க்க தீர்மானிக்கிறான் ராஜாராமன். அவர் ஒரு விதத்தில் தூரத்து உறவினர். முக்கியமான மந்திரிக்கு முக்கியமான மனிதர்.

அவர் வசித்து வந்த இருப்பிடத்தை விவரிக்கிறார் சுஜாதா. ஹோஸ்டிங்ஸ் ரோடின் அமைதியில் பச்சைப்புல் தரை ஏக்கர்களுக்கு மத்தியில், நாவல் மரங்களின் நிழலில், ஏக் கண்டிஷனர், நாய், அம்பாஸ்டர் கார் சகிதம் இருந்தது அவர் வீடு. வீட்டு வாசஙூல் கதர் அணிந்த சேவகர்.

ராமநாதனின் பையன் வரவேற்றான். ராஜாராமன் தமிழில் பேச, அவருடைய பையன் ஆங்கிலத்தில் பதில் அளிக்கிறான். தமிழ் தெரிந்தும் தமிழில் பேசாத ராமநாதனின் பையன் மீது எந்த மரியாதையும் ஏற்படவில்லை ராஜாராமிற்கு.

ராமநாதன் அறையை விட்டு வெளியில் வந்தார். கிளம்பிப் போவதற்குத் தயாராக இருந்தார்.

ராமநாதன் ராஜ சேகரனைப் பார்த்தவுடன் ராமச்சந்திரன் என்று கூப்பிடுகிறார்.

‘நான் ராமச்சந்திரன் இல்லை சார். ராஜாராமன்,’ என்கிறான் ராஜாராமன்.

உண்மையில் உரையாடல் மூலம் கிண்டல், நகைச்சுவை உணர்வு என்றெல்லாம் கொண்டு வருகிறார் சுஜாதா.

இங்கே உரையாடல் மூலம் நகைச்சுவை உணர்வு உண்டாக்குகிற மாதிரி ஒரு காட்சி.

‘சரி, ஜானகி எப்படி இருக்கிறாள்?’

“ஜானகி செத்துப்போய் இரண்டு வருஷங்கசள் ஆச்சு”

“ஓ.எஸ் ஓ.எஸ் ஐ ரிமெம்பர் நௌ. இட்ஸ் எ பிடி. அவளுக்கு எத்தனை குழந்தைகள்?”

“ஒரு பையன். இரண்டு வயசுப் பையன்.”

“ஆமாம். ஜானகி தம்பி ஒருத்தன் டில்லியிலே செக்ரடடேரியட்டிலே வேலையாயிருக்கிறான் இல்லையா?”

“நான்தான் சார் ஜானகி தம்பி.”

இந்த உரையாடல் மூலம் அலட்சியமாக ஹாஸ்ய உணர்வை உருவாக்கி விடுகிறார் சுஜாதா.

பணம் கேட்க வேண்டிய நேரம் வந்து விட்டது. ராஜாங்கம் முந்நூத்தி அம்பது ரூபாய் பணம் வேணும் என்கிறான். இந்த இடத்தில் எதற்காக பணம் வேண்டுமென்று சொல்ல எத்தனிக்கிறான். காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை ராமநாதன்.

“எப்ப வேணும்?” என்று கேட்கிறார்.

“இப்ப,” என்கிறான் ராஜாங்கம்.

அவர் செக் புத்தகம் கொண்டு வந்தார். அவனுடைய பெயரை கேட்டார். செக்கில் எழுதினார். அவனிடம் கொடுக்கும்போது ஒன்று சொல்கிறார்.

“நான் இதை அடிக்கடி செய்யறதா எனக்குப் படுகிறது” என்றார்.

“எதை சார்?”

“இதுமாதிரி உறவுகாரங்களுக்கு செக் எழுதறதை.”

ராஜாங்கத்திற்குக் கோபம் வருகிறது.

அவர் இன்னும் பேசுகிறார். தான் ஒரு செக் எழுதற மெஷின். உனக்குப் பணம் தேவையாக இருக்கும்போது வருகிறாய் என்கிறார்.

அவர் பேசப்பேச கோபம் அதிகமாக வருகிறது ராஜாங்காத்திற்கு. அவர் கொடுத்த செக்கை நாலாகக் கிழித்துப் பறக்கவிட்டான். அவருக்குப் பெரிய அதிர்ச்சி.

சுஜாதா கதையை முடித்துவிடுகிறார்.

முடிக்கும்போது ஒன்று சொல்கிறார். ‘எதிர்பாராத செயலில் அந்த ஒரு தருணத்தில் பூரணமாக வாழ்ந்தேன்

நான் என்று ராஜாங்கம் சொல்வதைப் போல் முடிக்கிறார். கதையில் கடைசியில் ஒரு ட்விஸ்ட். வாசகரைப் பார்த்து ராஜாங்கம் கேட்கிறான். நீங்கள் இவ்வளவு பொறுமையாக என் கதையைப் படித்தீர்கள். அவசரமாக சென்னைப் போய் அம்மாவைப் பார்க்க வேண்டும். எனக்கு முந்நூற்று இருபத்தைந்து ரூபாய் கொடுங்களேன் என்று கேட்கிறான்.

கதை நகைச்சுவை உணர்வுடன் எழுதப்பட்டிருக்கிறது. கதாபாத்திரங்களின் பெயர்களில் ஒரு ஒற்றுமை நிலவுகிறது. பெயர்கள் எல்லாம் ராவில் வருகிறது. ராஜாங்கம், ராஜகோபாலன்,கதையின் ஆரம்பத்தில் ராஜாங்கத்தின் விருப்பத்தை நிறைவேற்ற அவன் மனைவி தன் மோதிரத்தைக் கழட்டிக் கொடுத்து ‘யூலிஸிஸ்’ வாங்க பணம் தருகிறாள்.

ராஜாங்கம்ஆர்வத்தால் ஓர் இலக்கியப் பத்திரிகை இரண்டு மாதம் நடத்த மற்ற நகைகளையும் விற்றுவிட்டாள் அவன் மனைவி.

இலக்கியப் பத்திரிகை மீது சுஜாதாவிற்கு இருக்கும் ஈடுபாடை இங்கே கொண்டு வருகிறார். முழுக்க முழுக்க கற்பனை கதை இது. சுய அனுபவம் எங்கும் தலைக்காட்டவில்லை.நகைச்சுவை உணர்வுடன் மிக மிகச் சுலபமாகக் கதையை எழுதும் திறன் இவரிடம் உள்ளது.

இத் தொகுப்பிலுள்ள கதைகளை எல்லாம் ஒவ்வொன்றாகத் தொடர்ந்து வாசிக்கலாமென்று நினைக்கிறேன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன