அஞ்ச லட்டைக் கதைகள் 12

அழகியசிங்கர்


இது என் 12வது கதை.  இந்தக் கதையைப் படிக்கும்போது  ஒரு நிமிடத்திலிருந்து இரண்டு நிமிடம் வரை ஆகும்.  முகநூல் நண்பர்களுக்கு வாசிக்க அளித்துள்ளேன். 
கூடவே இந்தக் கதையை வாசிப்பவர்கள் முடிவில் வாய்விட்டுச் சிரிக்காமலிருக்க முடியாது. 

ஏன் இப்படி?

இந்தக் கொடூரமான கொரோனா காலத்தில் நான் வெளியில் செல்வது ரொம்ப ரொம்ப குறைச்சல்.  வயதானவர்கள் போகக்கூடாதென்று யாரையெல்லாம் வயதானவர்கள் என்று அரசாங்கம் சொன்னதோ அதில் நான் அடங்குவேன் என்பதால் நானும் போகவில்லை. 
ஒரு மாதம்வரை நான் வீட்டைவிட்டு வெளியில் போகவில்லை.  பின் ஒருநாள் மாத்திரைகளை வாங்கச் செல்லலாமென்று கிளம்பினேன்.  என் டூ வீலர்கள் எதுவும் ஸ்டார்ட் ஆகாமல் மக்கர் செய்தன.  ஒருவழியாகத் தாஜா பண்ணி கைனடிக் ஹோன்டா வண்டியை ஓட்டத் தயாரானேன்.
அசோக் நகரில் உள்ள மருந்துக் கடைக்கு முகமூடி அணிந்து சென்றேன்.  கடைக்கு முன்னே நிறையா முகமூடிகள்.  நின்று நிதானித்து மாத்திரைகளை வாங்கினேன். 
திரும்பும்போது வழியில் பிள்ளையார் கோயில் மூடி இருந்தது.  அதன் பக்கத்தில் ஒரு மூலையில் ஒரு வெளிநாட்டுக்காரன் அமர்ந்திருந்தான்.  தாடி மீசையுடன்.  உற்றுப் பார்த்தால் அவன் ஒரு யோகியாக இருக்கலாமென்று தோன்றியது. 
கிட்டே போய் ஆங்கிலத்தில்,  “நீ யார்?’  என்று விசாரித்தேன். அவனுக்கு ஆங்கிலம் புரியவில்லை.  அவன் சொன்னான்:  ‘நான் ரஷ்யன்’  என்று.  தடுமாறித் தடுமாறி எனக்குப் புரிய வைத்தான்.  
கை ஜாடைக் காட்டி சாப்பாடு எதாவது வேண்டுமா வென்று கேட்டேன்.  தலை ஆட்டினான்.  பக்கத்தில் உள்ள ஓட்டலுக்குப் போய் டிபன் வாங்கிக்கொண்டு வந்து கொடுத்தேன். அவசரம் அவசரமாகச் சாப்பிட்டான்.
எனக்கு அவனை வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போக வேண்டுமென்று தோன்றியது. 
வீட்டிற்குப் தொலைப்பேசி செய்து அவனைப் பற்றி விபரம் சொல்லி  அழைத்துக்கொண்டு வரட்டுமா என்று மனைவியிடம் கேட்டேன்.  
உடனே,  ‘நீங்களும் போங்கள் அவனுடன்,’  என்றாள் அவள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன