அழகியசிங்கர்
கே.ஜி. சங்கரப்பிள்ளை கவிதைகளை மலையாள மொழியி லிருந்து மொழிபெயர்த்தவர். சிற்பி அவர்கள். மலையாளத்தில் மட்டுமல்லாது இந்தியக் கவிதை இலக்கியத்திலும் ஓர் அபூர்வமான குரல் கே.ஜி.சங்கரப்பிள்ளையின் குரல்.
அவர் கவிதைகளைக் குறித்து டாக்டர் பி.கே ராஜசேகரன் சங்கரப்பிள்ளை கவிதைகள் குறித்து இப்படிக் கூறுகிறார்.
உருவத்திலும் மொழியிலும் நமக்குப் பழக்கமில்லாத பாதைகளில் நடந்து தன்னைத் தானே புதுமைப்படுத்திக்கொள்ளும் கவிதை இது. வடிவாக்கத்திலும், படிம நிர்மாணத்திலும் கவனம் செலுத்தியவாறு, தினசரி வாழ்வின் புறச் சூழல்களிலிருந்து வரலாற்றையும், பண்பாட்டின் நுண்வெளிகளையும் சங்கரப்பிள்ளை கவிதை உற்று நோக்குகிறது.
73 கவிதைகளின் தொகுப்பைச் சிற்பி மொழிபெயர்த்துள்ளார். சாகித்திய அகாதெமி வெளியீடாக இத் தொகுப்பு வெளிவந்துள்ளது.
இத் தொகுப்பில் நான் பல கவிதைகளை ரசிக்க முடிந்தது. 1959ஆம் ஆண்டிலிருந்து 1996ஆம் ஆண்டு வரை எழுதியுள்ள கவிதைகளை இந்தப் புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளது.
இக் கவிதைத் தொகுதியை 3 பாகங்களாகப் பிரித்துள்ளார்கள். பெரும்பாலான கவிதைகள் நீளமாக எழுதப்பட்டிருக்கின்றன. சிறிய கவிதையாக இருந்தாலும் பெரிய கவிதையாக இருந்தாலும் கவிதையில் பிடிமானம் தெரிகிறது. கவிதைத் தன்னை மீறிப் போய்விடுவதில்லை. சில கவிதைகளை உதாரணமாகத் தரலாமென்று நினைக்கிறேன்.
இதோ ‘பல்லி வால்’ என்ற கவிதையைப் பார்ப்போம்.
பல்லி வால்
பல்லியின் அறுந்துவிழுந்த வால் அமைதியாகத் திரும்பிப் பார்த்தது
அதோ இருக்கிறது என் பல்லி எதுவும் நடந்த உணர்வே இல்லை உதிர்ந்த பூவை விட்டுச் சென்ற கொடிபோலே கண்ணீர்த்துளியை விட்டுச் சென்ற கவிதைபோலே அதோ இருக்கிறது என் பல்லி
*இழந்ததை எண்ணி எந்தத்துக்கமும் இல்லாமல் அறிஞரில் அறிஞனாய்* – அதோ இருக்கிறது என் பல்லி
எவருடனும் பழிவாங்கும் நோக்கின்றி ஒரு புதிய பிரதிக்ஞை ஏதும் இல்லாமல் புகழ் பெற்ற உயர்ந்த ஒன்றை இழந்த துயரமும் இல்ல அதோ இருக்கிறது என் பல்லி பின்பக்கம் தன்னைவிடப் பெரிய நிழலுடன் அதோ இருக்கிறது என் பல்லி ஒரு புதிய இணைக்கோ இரைக்கோ துணைக்கோ காத்திருக்கிறது அதோ என் பல்லி
‘பல்லி வால்’ என்ற தலைப்பில் வேடிக்கையாய் கவிதையை எழுதியிருக்கிறார். வாலை இழந்து விட்ட பல்லியை உதிர்ந்த பூவை விட்டுச் சென்ற கொடிபோல என்கிறார் மேலும் கண்ணீர்த்துளியை விட்டுச் சென்ற கவிதைபோலே என்கிறார். பின் பக்கம் தன்னைவிடப் பெரிய நிழலுடன் என்கிறார்
கவிதையைக் கச்சிதமான வடிவத்தில் முடித்திருக்கிறார். வளவளவென்று எழுதவில்லை. பெரும்பாலும் இன்றைய கவிஞர்கள் சொல்வதற்கு மேலேயே சொல்லிக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு ஒரு கவிதையை எப்படி முடிப்பதென்று தெரியாது. இத் தொகுப்பில் பெரும்பாலும் நீளமான கவிதைகள். கையில் புத்தகத்தை வைத்துக்கொண்டுதான் நீளமான கவிதைகளை நிதானமாக வாசிக்க வேண்டும். உதாரணமாக: ‘மரம்’ என்ற தொகுப்பில் ஆரம்பத்தில் எழுதப்பட்ட ஒரு நீளமான கவிதையில் இப்படி ஆரம்பிக்கிறது ஆரம்ப வரிகள் :
தாரகை சூழ்ந்த இருளைப் போல பூக்கள் நிரம்பிய ஒரு பெருமரம் உண்டு என் சோக இருட்டு மனதில்
பெருமரத்தைப் பற்றி ஒரு நீளமான கவிதை. நீளமான கவிதையைத் தொடர்ந்து படிப்பவர்களுக்குப் படிக்கும் டெம்போ குறைந்து போக வாய்ப்பிருக்கிறது. ஆனால் இவர் கவிதையில் அப்படித் தெரியவில்லை. பெரும்பாலும் நீளமான கவிதைகள் இருப்பதால் படிப்பதற்குச் சற்றும் சோர்வு அளிக்கவில்லை.
‘மழை’
மழை பெய்கிறதுமத்தளம் கொட்டுகிறது மழை பெய்கிறதுகால் சட்டை முற்றத்தில் சேலை முற்றத்தில் சட்டை முற்றத்தில் மழை பெய்கிறது மழை பெய்கிறது பெய்கிறது பெய்கிறது
தாத்தாவின் முற்றத்தில்கண் கண்ணாடி முற்றத்தில் பாரத முற்றத்தில் கோவண முற்றத்தில் மழை பெய்கிறது மழை பெய்கிறது பெய்கிறது பெய்கிறது பெய்கிறது பெய்கிறது
நானும் முற்றத்தில் வீடும் முற்றத்தில் நாடும் முற்றத்தில் மழை பெய்கிறது மழை மழை மழை மழை மழை ழ ழ ழ ழ ழ ழ ழ
மேலே குறிப்பிடப்பட்ட கவிதை மழையைப் பற்றி புதுமையாக இருக்கிறது. நம் உடலில் வழியும் மழையை முற்றத்தில் என்று குறிப்பிடுகிறார். தாத்தாவின் முற்றத்தில், கண் கண்ணாடி முற்றத்தில். அப்படி கூறப்படுவது புதுமையாக இருக்கிறது.
இன்னும் எத்தனையோ கவிதைகளைக் குறிப்பிடலாம். பொதுவாக கவிதைப் புத்தகங்களை வாங்குவதில்லை. ஒருவர் வாங்கி வைத்துக்கொள்ள விரும்பினால் இந்தப் புத்தகத்தை வாங்கி வைத்துக்கொள்ளலாம். 216 பக்கங்கள் கொண்ட கே.ஜி சங்கரப்பிள்ளை கவிதைகளின் விலை ரூ.125தான்.
இன்னும் எத்தனையோ கவிதைகளைக் குறிப்பிடலாம். பொதுவாகக் கவிதைப் புத்தகங்களை வாங்குவதில்லை. ஒருவர் வாங்கி வைத்துக் கொள்ள விரும்பினால் இந்தப் புத்தகத்தை வாங்கி வைத்துக்கொள்ளலாம். 216 பக்கங்கள் கொண்ட கே.ஜி சங்கரப் பிள்ளை கவிதைகளின் விலை ரூ.125தான்.
கடைசியாக ஒரு கவிதையை மட்டும் குறிப்பிட்டு இந்தக் கட்டுரையை முடிக்கிறேன்.
காக்கை
மலை இருக்கிறது மலையாக” மலைக்கு மேலே மாமரம் நிற்குது மாமரமாக மாவின் நிழலில் மேயும் மாடு மாடாக மாவின் கண்ணில் காக்கைக் கொத்திட மா அலையுது மாடாக மலையின் வாலில் காக்கை கொத்திட“ மலை அசையுது மாடாக.