ந.முத்துசாமி
எங்கள் வீட்டு அடுப்பங்கரையில் இரண்டு தூண்களுக்கு இடையில் இறவாணத்திலிருந்து ஒரு நெய்ச் சொம்பு உறியில் தொங்கிக்கொண்டிருந்தது. மிகவும் புராதனமான அந்த உறி எத்தனை தலைமுறைகளைத் தாண்டி அங்கு வந்து எங்கள் நெய்ச் சொம்பிற்கு ஆதாரமாக இருந்தது என்பது எனக்குத் தெரியாது. நெய்யைத் தவிர அதில் வேறு எதுவும் தொங்கியதாக எனக்கு நினைவில்லை. நெய் அல்லது வெண்ணெய். நெய் காய்ச்சுவதற்கு நேரமில்லா மல் அல்லது மனது இல்லாமல் வெண்ணெயை உபயோகப்படுத்தும்போது அங்கு வெண்ணெய் மட்டும் தொங்கிக்கொண்டிருக்கும். வெண்ணெய் மட்டும் எப்போதும் இருக்கும். எங்கள் வீடு எருமைகளுக்குப் பெயர்போனது. இரண்டு நாளைக்கு ஒருமுறை தயிர்கடைவார்கள். நானும் கடைவேன். எல்லோருமே கடைவோம். அதில் ஒரு சுவாரஸ்யம் இருந்தது. அந்த சுவாரஸ்யத்தைக் கம்பனும் அனுபவித்திருப்பான்.
‘தோயும் வெண்தயிர்மத்தொலிதுள்ளவும்
ஆயர் மங்கையர் அங்கை வருந்துவார்.’
எங்கள் அடுப்பங்கரை மிகவும் பெரியது. எங்கள் வீடென்ன, எல்லோர் வீட்டு அடுப்பங்கரையும் மிகவும் பெரியதுதான். ஆனால் எங்கள் அடுப்பங்கரையில் உள்ள தொட்டி முற்றம்தான் மிகவும் பெரியது. அதைப் போல நான் எங்கும் பார்த்ததில்லை. அவ்வளவு பெரிய தொட்டி முற்றமாக இருந்ததால் அடுப்பங் கரையில் வெளிச்சம் இருக்கும். பிற வீடுகளில் அது ஒரு விநோத இருட்டில் இருக்கும். நல்ல நடுப்பகலில் கூட. அப்படிப்பட்ட இருட்டை இன்று நாம் விரட்டிவிட்டோம். பகற்பொழுதிலும் செயற்கையான வெளிச்சத்தில் இருக் கத் தலைப்பட்டுவிட்டோம். நம் தோலையும் கண்களையும் தடவிக்கொடுத்துக் கொண்டிருந்த பழைய வெளிச்சம் பிரகாசமாகிவிட்டது. நல்லதுதான். நியாயங்கள் குன்றியிருந்த மொத்தச் சமூகத்திற்காகவும் நாம் இப்போதுதான் உழைக்கத் தலைப்பட்டிருக்கிறோம். அதற்கு இவ்வளவு வெளிச்சம் தேவைப் படுகிறது.
நெய்ச் சொம்பு தொங்கிக்கொண்டிருந்த இரண்டு தூண்களுக்கு இடையிலான வெளி குறுகலானது. தயிர் கடைவதற்காகவே பிரத்யேகமாக ஒரு தூண் கூடுதலாகக் கூரையைத்தாங்கிக்கொண்டிருந்தது. கிழக்கு மேற்காக நீண்டிருந்த தொட்டிமுற்றத்தில் கிழக்கு மேற்காகவும் வடக்கு தெற்காகவும் வந்து இணையும் மூலையில் உள்ள பிரதான தூணுக்கு அருகில் சற்றுக் கிழக்கே தள்ளி தயிர் கடையும் தூண் அமைக்கப்பட்டிருந்தது. அதற்கு மட்டும் தனிப்பட்ட சித்திர வேலைப்பாடுகள். தூணிலிருந்து மத்தைத் தயிர்ப் பாத்திரத்தில் இணைக்கும் இரண்டு கயிறுகளும் நழுவிவிடாமல் இருக்கத் தேவைப்பட்ட பதிவுகளைச் சித்திர வேலைப்பாடுகளுக்குள் இணைத்துத் தூணைக் கடைந்துவிட்டார்கள் போலும்.
அடுப்பங்கரையின் அமைப்பு சற்று வேறுபட்டது. கிழக்கு மேற்கான தெருவில் இருசாரிகளிலும் கிழக்கு மேற்காகவே அமையும் அடுப்பங்கரைகள் வீட்டிற்கு வீடு வேறுபட்டிருந்தன. ஆனால், ஏதோ ஒரு கணத்தில் பாகப் பிரிவினைகளால் இரண்டாகப் பிரியாமல் இருந்த வீடுகளில் உள்ள அடுப்பங்கரைகள் தொட்டி முற்றங்களைப் பிரதானமாகக் கொண்டு அமைக்கப்பட்டவை. அத்தொட்டி முற்றங்கள் மூன்று புறங்களில் தாழ்வாரங்களால் சூழப்பட்டிருக்கும். ஆனால் எங்கள் அடுப்பங்கரை இரண்டு தாழ்வாரங்களை மட்டுமே கொண்டிருந்தது. முற்றத்தின் வடக்கு தாழ்வாரத்தால் அல்லாமல் சுவரினால் ஆளப்பட்டது. மேற்புறக் கூடத்தை வடக்கே நீட்டிவிட்டது போலவும், வடக்கே வந்து கிழக் கில் திரும்பும் தாழ்வாரத்திற்கு இணையான ஒரு தாழ்வாரத்தை உள்ளே கொண்டு, இரண்டாம் கட்டிற்கு இடம் கொடுத்து உண்டான வாயிலையும் இரண்டாம் கட்டில் முற்றத்தையும் பிரித்துக்கொண்டு உண்டான ஓர் அமைப்பு இது. கூடத்தை ஒட்டி வந்த தாழ்வாரத்தில் வடகோடியில் தலையை இடிக் கும் ஒரு வாயிற்படி அடுப்பங்கரைக்கு. ஆனால், அதற்கு இணையானதாராள மான ஒரு நிலைப்படி இரண்டாம் கட்டிற்கு வழி விட்டது. இன்று நிமிர்ந்த நடையில் போவதற்கு உண்டான வாயில்களைப் போலல்லாமல் சற்றுக் குனிந்தே இருக்க அமைக்கப்பட்ட அளவுகளை மரபாகக் கொண்டிருந்தவை அவை. அதில் இன்னும் வணக்கத்தை ஏற்படுத்தும் அடுப்பங்கரை வாயிற்படி.
உறியில் தொங்கிக்கொண்டிருந்த நெய்ச் சொம்பு தாழ்வாரத்திலிருந்து இந்த நிலைப்படியின் வழியாக வெளியில் இருப்பவர்களுக்குத் தெரியும். வாயிலி மிருந்து உள்ளே வரும் ரேழியைத்தாண்டி இருந்த வாயிற்படியை ஒட்டித்தாழ் வாரத்தின் கீழ்க்கையில் அமைந்திருந்த ஒரு திண்ணையில் ஒருவர் உட்கார்ந் தால் இந்த உறியையும் தயிர் கடைவதையும் பார்க்கலாம். எனவே மேல்புற முள்ள தாழ்வாரத்தையும் அடுப்பங்கரை ஒட்டி அது திரும்பும் வடகையில் உள்ள தாழ்வாரத்தையும் தூண்களால் பிரிக்கப்பட்ட அங்கணங்களில் மூலையில் இரண்டிரண்டை மறைத்துத் தென்னங்கீற்றால் ஆன நெறைச்சல் கட்டி யிருந்தார்கள். ஆகையால் இப்போது சின்னத் திண்ணையில் வந்து அமரும் யாரும் அடுப்பங்கரையை நேரடியாகப் பார்க்கமுடியாது. அதனால் இந்த நெய்ச் சொம்பு பார்வையிலிருந்து மறைந்து இருந்தது.
நெய்ச் சொம்பு என்றால் அது ஈயச் சொம்பு என்பது பழைய மனிதர்களுக்குத் தெரியும். ஈயப்பாத்திரங்கள் மாயவரத்திலும் கும்பகோணத்திலும் செய்யப்படு கின்றன என்பதும் பழைய தஞ்சாவூர்க்காரர்களுக்கு தெரியும். இந்த ஊர் ஈயப் பாத்திரங்கள் மிகவும் பிரசித்திப்பெற்றவை. ஒருவர் மாயவரத்திற்குப் போவ தானால்துலாகட்டத்தை ஒட்டிய பட்டமங்கலத் தெருவின் கோடியில் மேற்குப் பார்த்த கீழ்க்கைச் சாரியில் சில கடைகளில் ஈயப் பாத்திரங்களை லொட்டுலொட்டு என்றுதட்டி செய்து கொண்டி ருப்பதைக்காணலாம். புஞ்சை மாயவரத்திற்கு அருகில் இருந்ததால் இது எனக்குத் தெரியும். கும்பகோணம் பெயர் அளவில்தான் தெரியும். அங்கு போக வேண்டிய தேவையில்லை மாமாங்கத்தைத் தவிர. மாயவரத்திற்கு ஐப்பசி மாதம் துலா ஸ்நானத்திற்கு நாங்கள் எல்லோரும் போவோம். சுற்றுப்புறச் சூழல் அசிங்கப்பட்டுப் போவதைப் பற்றி இப்போது நாம் அதிகம் பேசுகிறோம். ஒரு அறுபது வருடத்திற்கு முன்னால் ஒருவர் குடமுழுக்கு, கடைமுழுக்கு நாட்களில் துலா கட்டத்தை நினைப்பாரானால் தெரியும், அன்றும் சுற்றுப்புறச் சூழல் அதிகம் உபயோகப்படுத்துவதனால் கெட்டுப்போயிருந்தது என்பது. இந்த ஐப்பசி மாதத்தில்தான் ஈயப்பாத்திரங்களும் கற்சட்டிகளும் அதிகம் வாங்கப்பட்டன. அப்போதுதான் ஜனங்கள் மாயவரத்திற்கு அதிகம் வருவார்கள். இந்த நெய்ச் சொம்பும் ஒரு துலா மாதத்தில் வாங்கப்பட்டதாகத்தான் இருக்க வேண்டும். ஈயப் பாத்திரங்களைப்பற்றிய பிரக்ஞையே இப்போது குறைந்து போய்விட்டது. சொம்பைப் பற்றிய பிரக்ஞையே குறைந்துபோய்விட்டது. அதன் இடத்தை பிளாஸ்டிக்குவளைகள் பிடித்துக் கொண்டுவிட்டன. சொம்பு. குவளை. ஈயத்தில் இரண்டு வகை ஈயம், வெள்ளீயம், காரீயம். பார்த்து வாங்கத் தெரியாவிட்டால் காரீயத்தைக் கொடுத்து ஏமாற்றிவிடுவார்கள் என்று சொல்வார்கள். காரீயத்தில் வைக்கும் உப்பு பட்ட பண்டங்கள் கைத்துப்போய்விடும். வெள்ளீயத்தில் அப்படியே இருக்கும். ரசம் வைப்பதற்கும் வெள்ளீயம் மிகவும் ஏற்றது. ஈயச் சொம்பில்தான் ரசம் வைத்துச் சாப்பிட வேண்டும் என்று சொல்வார்கள். ஒருக்கால் ஈயம் உடம்பிற்குத் தேவையோ என்னவோ? இப்போது ஈய விஷத்தைப் பற்றிப் பேசுகிறார்கள். அளவைப் பொறுத்து மருந்தும் விஷ மாக மாறிவிடும் போலும். வைத்தியரைக் கேட்டுத்தான் தெரிந்துகொள்ள வேண்டும்.
அந்த ஈயச் சொம்பு ஒரு மண்டை அளவு இருந்தது. அப்போது நிறைய நெய் யோடு தொங்கிக்கொண்டிருந்தது. நான் அடியில் அமர்ந்து பெரிய கற்சட்டியில் தயிர்கடைந்துகொண்டிருந்தேன். தயிர்கடைவது என்றால் அது காலை நேரம் என்று இன்று நகரத்தில் இருப்பவர்களுக்குச் சொல்ல வேண்டும். காலையில் எட்டு மணி இருக்கலாம். கடிகாரத்தை அல்லாமல் முற்றத்தில் இறங்கும் நிழலைப் பார்த்து நேரம் தெரிந்துகொண்டிருந்த காலம் அது. அம்மா அடுப்பில் பிரை ஊற்றுவதற்குப் பால் காய்ச்சிக்கொண்டிருந்தாள் என்று நினைக்கிறேன். அடுப்பங்கரையின் கீழ்க்கோடியிலும் வடகோடியிலும் அடுப்புகள் இருந்தன. விறகுவைத்து எரிய விடும் மண் அடுப்புகள். நான் தயிர்கடைந்துகொண்டிருந்த அப்போது அம்மா இருந்தது கீழ்க்கோடியில் இந்த அடுப்படியில்.
என் நண்பன் பழனிவேலு தாழ்வாரத்துச் சின்னத் திண்ணையில் அமர்ந்து கொண்டான் போலும்.
‘கண்ணா ‘ என்றான்.
எனக்குப் பெரிய சந்தோஷம். ‘பழனிவேலு’ என்று விநோதமாகக் கத்தினேன் நான். மத்தைக் கற்சட்டியில் விழாதபடி சாத்தி வைத்துவிட்டு வருவதற்குள், – ‘கண்ணா , தண்ணீ’ என்று அவனிடமிருந்து இன்னொரு உரத்த குரல் வந்தது. நாங்கள் தாழ்வாரத்து நெறைச்சலால் மறைக்கப்பட்டிருந்தோம் என்பது நினைவிருக்க வேண்டும். நான் எழுந்து தண்ணீர் எடுக்கப் போனேன். அவன் என் உயிர் நண்பன். அவனுக்கு நான் குடிக்கும் தண்ணீரைத்தானே கொடுக்க வேண்டும். எனவே, மேற்குத் தாழ்வாரத்தில் வடபுறம் சுவரை ஒட்டிக் கொல்லைக் கொட்டகைக்குப் போகும் வாயிற்படிக்கு அருகில் முற்றத்தின் ஓரமாக அமைக்கப்பட்டிருந்த ஒரு மேடையில் பானையில் வைக்கப்பட் டிருக்கும் காவிரித் தண்ணீரை எடுக்கப் போனேன். அடுப்படியில் இருந்த படியே ‘ஏய் இந்தாடா, இந்தாடா’ என்றாள் அம்மா என்னைப்பார்த்து. அதற்கு அர்த்தம் என் நண்பனுக்குக் கொடுக்கும் தண்ணீரில் சிறிது மோரைத் தெளித்துக் கொடுக்க வேண்டும் என்பது. அவன் பிராமணன் இல்லை. முதலியார். புஞ்சையில் பிராமணர்களைப் போலவே செல்வாக்கோடு இருந்தவர்கள் முதலியார்கள். அவனுக்குத் தண்ணீரில் மோரைத் தெளித்துக் கொடுப்பது எனக்கு உடன்பாடில்லை. அப்போது எங்களுக்கு வயது பத்துதான் இருக்கும் என்று நினைக்கிறேன். இந்தத் தீமைகள் அப்போது எனக்குத் தெரிந்திருந்தது. அவனுக்கும் தெரியும். பிராமணர்கள் அல்லாத நண்பர்கள் எங்களைக் கேலி செய்துகொண்டிருப்பார்கள் இதற்காக. அப்போது மாட்டுக்காரச் சிறுவர்கள் காவிரிக்கரையில் தொலைவில் நின்று காவிரியில் குளிக்கும் பிராமணர்களைப் பார்த்து ‘அக்ரகாரப்பாப்பானெல்லாம் சாக மாட்டானா, அவன் ஆத்தங்கரை ஓரத்திலே வேக மாட்டானா ‘ என்று தங்கள் அடையாளத்தை மறைத்துக் கொண்டு பாடத் தொடங்கிவிட்டிருந்தார்கள் அப்போது.
நான் முறைத்துக்கொண்டு தண்ணீரில் மோரை ஊற்றாமல் டம்ளரை எடுத்துக்கொண்டு கிளம்பினேன். அடுப்படியிலிருந்து அம்மா ஓடிவந்து கற் சட்டியில் கடைந்து கொண்டிருந்த மோரில் விரலைத் தோய்த்து டம்ளரில் தெளித்தாள். அவ்வளவுதான். எனக்குக் கோபம் வந்துவிட்டது. டம்ளரை முற்றத்துச்சுவரில் அடித்தேன். கற்சட்டித் தயிரைக்காலால் முற்றத்தில் உதைத்து உடைத்தேன். உறியில் தொங்கிக்கொண்டிருந்த நெய்ச் சொம்பை எடுத்து முற்றத்துச் சுவரில் வீசி மோதி உடைத்தேன். சுவர் முழுதும், முற்றம் முழுதும் நெய், மோர் ஆறாய் ஓடியது. கோபத்தோடு வெளியில் ஓட எத்தனித்த என்னை,நான் உயரமாய் இருந்ததாலும், வாயிற்படி குள்ளமாய் இருந்ததாலும், அது என் தலையை மோதி உடைத்தது.
‘ஐயோ அம்மா நான் கீழே விழுந்து மயக்கம் போட்டுவிட்டேன். இந்த ‘அம்மா’ என்பது தாயைக்கூப்பிட்ட ஓலமில்லை. இது வலியில் சொல்லும் விளிச்சொல். என் நண்பன்தான் ஓடிவந்து என்னைத் தூக்கிக்கிடத்திவிட்டு வைத்தியனைக் கூப்பிட்டுக்கொண்டு வந்து மருந்து வைத்துக்கட்டினானாம்.
இது எப்படி நடந்ததென்று என் நண்பனுக்குத் தெரிந்திருக்க வேண்டும். இதை யெல்லாம் கடந்துதான் அவன் எனக்கு நண்பனாக இருந்தான்.
இந்த நெய்க்கறை இன்னமும் தொட்டிமுற்றச்சுவரில் அது உண்டான காரணத்தை இழந்து இருந்துகொண்டிருக்கிறது