ஜே.கிருஷ்ணமூர்த்தியும் நானும்..

அழகியசிங்கர்  

வாசுதேவன் முகநூல் குறிப்பிலிருந்துதான் இன்று ஜே கிருஷ்ணமூர்த்தியின் பிறந்தநாள் என்பதை அறிந்தேன்.  சமீபத்தில் என் நண்பர் ஒருவருடன் உரையாடிக் கொண்டிருக்கும்போது ஜே.கிருஷ்ணமூர்த்தியைப் பற்றிக் குறிப்பிட்டேன்.
அவர்  என்ன தெரிந்து கொண்டீர்கள் கிருஷ்ணமூர்த்தியிடமிருந்து என்று கேட்டார்.
என்னால் அவருக்கு எந்தவிதமான பதிலையும் சொல்ல முடியாது என்பதோடல்லாம் அவர் நான் சொன்னதையே கேட்டு என்னை மடக்கி விடுவார்.
நான் எதுமாதிரியாகவும் கிருஷ்ணமூர்த்தியைப் பற்றிச் சொல்ல முடியாது.  மேலும் அதுமாதிரி விளக்க வேண்டிய தேவையும் இல்லை என்றும் தோன்றியது.
என்னைப் பொறுத்தவரை கிருஷ்ணமூர்த்தி 1978ஆம் ஆண்டிலிருந்து என்னுடைய நெருங்கிய தோழன் மாதிரி வந்து சொண்டிருக்கிறார்.  நான் அவர் புத்தகங்களைப் படித்துப் படித்து இப்போதுதான் புத்தகங்களைப் படிப்பதிலிருந்து கொஞ்சம் விலகி இருக்கிறேன்.
எப்பவாவது கீரின்வேஸ்  ரோடில் போய்க் கொண்டிருந்தால். கிருஷ்ணமூர்த்தி பவுன்டேஷனில் அவர் புத்தகங்களை ஒரு மூட்டையாக வாங்கிக்கொண்டு வந்துவிடுவேன்.
அவர் பேசிய இடத்தில் அடையாளமாய் ஒரு பெரிய பாறாங்கல் ஒன்று இருக்கும்.  எத்தனையோ கூட்டங்களில் அவர் பேசியதை நான் கேட்டிருக்கிறேன்.  
கூட்டத்தில் அவர் பேச வரும்போது நேராக அவருக்கான இருக்கையில் அமர்ந்து கொண்டு அவர் பேசத் தொடங்கி விடுவார்.  சரியாகக் கூட்டத்தை ஆரம்பித்து விடுவார்.  அதே போல் குறிப்பிட்ட நேரத்தில் முடித்துவிடுவார். அவர் கூட்டத்தை ஆரம்பிக்கும்போது கூட்டத்திலிருந்து சலசலப்பு கேட்டுக்கொண்டிருக்கும்.  அவர் பேச ஆரம்பித்தவுடன் கூட்டம் அமைதியாகிவிடும்.  என்னமோ தெரியவில்லை இப்போது கூட என்னால் யார் கூட்டத்தையும் பொறுமையாக ரசிக்க முடியவில்லை.
கிருஷ்ணமூர்த்தியை யாராலும் எந்தக் கேள்வியும் கேட்டு மடக்க முடியாது. எனக்கு இன்னும் கூட ஞாபகமிருக்கிறது.  காலையில் நடந்த ஒரு கூட்டத்தில் ஒருவர் கிருஷ்ணமூர்த்தியைப் பார்த்துக் கேட்கிறார்.  “நீங்கள் ஏன் ஆடம்பரமாக உடை உடுக்கிறீர்கள்” ‘ என்று.  எனக்கோ இந்தக் கேள்விக்கு கிருஷ்ணமூர்த்தி எதுமாதிரியான பதிலை அளிக்கப் போகிறார் என்று பதற்றம். 
ஆனால் அவர் சொன்ன பதிலால் நான் ஆச்சரியமடைந்து விட்டேன். 
“உங்களை மதிப்பதற்குத்தான் இதுமாதிரி உடை உடுத்தியிருக்கிறேன்” என்றார். அந்தப் பதிலைக் கேட்டுக் கையெடுத்துக் கும்பிட வேண்டுமென்று நினைத்தேன்.
நானும், பிரமிளும் கிருஷ்ணமூர்த்தி கூட்டங்களுக்குப் போவோம்.  முக்கியமாக அவரைப் பற்றிச் சொல்லவேண்டும். கிருஷ்ணமூர்த்தி சென்னை வராவிட்டாலும் கூட சனிக்கிழமைகளில் அவர் கிருஷ்ணமூர்த்தி பவுண்டேஷனுக்குப் போவார்.  வீடியோவில் நடக்கும் பேச்சுக்களைக் கேட்கப்போவார்.
கூட்டம் முடிந்து வீடு வரும்போது அவர் ஒன்றும் கிருஷ்ணமூர்த்தியைப் பற்றிப் பேச மாட்டார்.  அதேபோல் ஒவ்வொரு வியாழக்கிழமையும் அவர் மயிலாப்பூரிலுள்ள ஷ்ர்டி கோயிலுக்குப் போவார்.  ஒரு குறிப்பிட்ட நேரத்தில் குரான் ஓதுவார்கள் கோயிலில்.  அதை முக்கியமாகக் கேட்கப் போவார்.
வாராவாரம் இந்த இரண்டு இடங்களுக்கும் போய்க் கொண்டிருப்பார்.  
ஒரு முறை ஜே.கிருஷ்ணமூர்த்தி காரிலிருந்து இறங்குகிறார்.  அவரைப் பார்த்து யாரோ சுடுகிறார்கள்.  இது ஒரு கனவு.  நான் இதுமாதிரி கனவு எப்போது கண்டேனோ அந்த ஆண்டு அவர் இறந்து விட்டார்.  
எப்பவாவது ஜே கிருஷ்ணமூர்த்தியை நினைத்துக்கொண்டால் நான் அவர் புத்தகத்தை எடுத்து சில பக்கங்கள் படித்துக்  கொண்டிருப்பேன்.  
‘இன்று ஒரே ஒரு புரட்சி’  என்ற அவர் புத்தகத்தைக் கையில் வைத்திருக்கிறேன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன