அழகியசிங்கர்
‘கசடதபற’ என்ற சிற்றேடு அக்டோபர் 1970ல் வெளிவந்து கொடிகட்டிப் பறந்தது. 3 வருடங்கள் அதன் பங்கு முக்கியமானது. அந்தப் பத்திரிகை வந்த மாதிரியே நின்றும் போய்விட்டது. ‘கசடதபற’வின் நான்காவது இதழில் (ஜனவரி 1971) மௌனியின் ‘தவறு’ என்ற கதை பிரசுரமானது.
‘மணிக்கொடி’ எழுத்தாளரான மௌனி நிறைய வருடங்கள் கழித்து ‘கசடதபற’வில் எழுதிய கதை. அதற்கு முன் ‘அத்துவான வெளி’ என்ற கதையை ‘குருக்ஷேத்திரத்தில்’ மௌனி எழுதினார். அந்தக் கதை பிரசுரமான ஆண்டு 1968.
மௌனியை ‘க.நா.சு’வும், ‘புதுமைப்பித்தனும்’ தூக்கிப் பிடிக்கவில்லை என்றால் யாருக்கும் மௌனியைத் தெரிந்திருக்காது. . அவர் முதல் மகன் மாம்பலத்தில் இரயில் நிலைய தண்டவாளத்தைத் தாண்டும் முயன்றபோது, மின் ரயில் தாக்கி மாண்டு போனான். மூன்றாவது மகன் குளியல் அறையில் மின்சாரம் தாக்கி இறந்தான். முதல் மகனின் இறப்பு ‘மனக்கோட்டை’ என்ற கதையையும், மூன்றாவது மகனின் இறப்பு ‘தவறு’ என்ற கதையையும் எழுத வைத்தன.
தவறு என்ற கதை நாலாவது இதழ் ‘கசடதபறவில்’ வெளிவந்தது. அதற்கு அடுத்த இதழில் தவறு கதையைப் பற்றி பிரமிள் ஒரு விமர்சனம் எழுதியிருப்பார்.
தவறு கதையாவது ஒருவர் புரிந்து கொண்டு விடலாம். பிரமிள் தவறு கதையைப் பற்றிய விமர்சனத்தைப் புரிந்துகொள்ளவே முடியாது.
மௌனி கதைகளில் கதாபாத்திரங்களின் பெயர்கள் இருக்காது. அவன், அவள் என்றுதான் குறிப்பிட்டிருப்பார். இந்த யுத்தியை மௌனிதான் முதலில் தன் கதைகளில்தான் ஆரம்பித்தார். அதே உத்தியைப் பலர் பின்பற்றி பின்னால் எழுதியிருக்கிறார்கள். மௌனிக்கு முன்னும், பின்னும் மௌனியைப் போல் ஒரு படைப்பாளி இல்லை.
மௌனி தவறு கதையில் இப்படி ஆரம்பிக்கிறார்.
‘ அவன், அன்றிரவு திடீரென விழிப்படைந்தவன் போன்று வழக்கமான நேரத்திற்கு முன்பே, அயர்வு நீங்கி எழுந்தான். ‘