அழகியசிங்கர்
அதிகமாகக் கவிதைகளைப் பற்றிச் சிந்திப்பவர் ஞானக்கூத்தன். கிட்டத்தட்ட 700 கவிதைகள் வரை அவர் வாழ்நாள் முழுவதும் எழுதியிருக்கிறார். இதைத் தவிரக் கவிதையைப் பற்றி தன் கருத்துக்களையும் பதிவு செய்திருக்கிறார். பலருடைய கவிதைகளைப் பற்றி விமர்சனம் செய்திருக்கிறார். கவனம் என்ற சிற்றேட்டுக்கு ஆசிரியராக இருந்து 7 இதழ்கள் கொண்டு வந்துள்ளார். இந்தச் சிற்றேடு மார்ச்சு 1981ஆம் ஆண்டு வெளிவந்தது.
ஆனால் யாருக்காவது அவர் கதை எழுதியிருப்பது தெரியுமா? கண்ணீர்ப்புகை என்பதுதான் அவர் சிறுகதை. ரங்கமணி என்ற பெயரில் கவனம் இரண்டாவது இதழில் எழுதி உள்ளார். அந்தக் கத 1981ஆம் ஆண்டு வெளிவந்தது.
அந்த ஒரு சிறுகதையைத் தவிர அவர் வேற எதுவும் எழுதவில்லை. ஒரு இலக்கியத் தரமான கதை என்றால் அந்தக் கதையைத்தான் சொல்ல வேண்டும்.
ஒரு முறைக்கு இருமுறை படித்தால்தான் கதையைப் புரிந்து கொள்ள முடியும். அந்தக் கதையைப் பார்ப்போம்.
ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரும் ஏதோ ஒரு இடத்திற்குப் போகத் தயாராக இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் யோஜனை செய்கிறார்கள். ஒருவர் இரயில் நிலையத்தில் நின்று கொண்டிருப்பதாக நினைக்கிறார். இன்னொருவர் இரயிலில் போய்க் கொண்டிருப்பதாக நினைக்கிறார். பெண்கள் பட்டுப் புடவைக்கு மாறுகிறார்கள். அவர் ஊருக்குப் போவதற்கு முன் 3 நாட்களுக்குப் பால், தயிர், பத்திரிகை வேண்டாமென்று முன்னதாகவே தெரிவித்து விடுகிறார்கள்.
அவர்களுடன் ஒரு பெரியவரை அழைத்துப் போகப் போகிறார்கள். இரயில் நிலையத்திற்குப் போகும் வரைக்கும் தாக்குப் பிடிக்கப் பெரியவர் ஒருமுறை வெற்றிலை பாக்குப் புகையிலையை வாயில் நிரப்பிக் கொண்டுவிட்டார்.
உண்மையில் 3 நாட்கள் ஒரு இடத்திற்குப் போக விரும்பவில்லை. இங்கே பூடகமாக ஒரு குடும்பத்தைப் பற்றி விவரிக்கப் படுகிறது. கதையைப் படிப்பவர் யூகம் செய்துகொண்டுதான் கதையைப் படிக்க வேண்டும். ஆனால் படிக்கப் படிக்க எளிதில் புரிந்து விடும்.
'அம்மா ரங்கநாயகிக்குத் துக்கம். ஒரு மூலையில் சென்று, யாருக்கும் தெரியாமல் துக்கத்தை உதறப் போனதை மற்றவர்கள் பார்த்துவிட்டார்கள்,' என்று ஞானக்கூத்தன் இங்குக் குறிப்பிடுகிறார்.
ஏன் ரங்கநாயகிக்கு துக்கம்? இதை மேலும் படிக்கப் படிக்க விளங்கும். வைத்தியநாதன் அனேகமாக இரண்டு வண்டிகளுடன் திரும்பிக் கொண்டிருப்பான். வைத்தியநாதன் ரங்கநாயகியின் பையனாக இருக்கலாம். கதையில் குறிப்பிடவில்லை.
பெரியவருக்கு மூன்று நாட்கள் வீட்டை விட்டுப் போகப் பிடிக்கவில்லை. 'நீ போ நான் இருக்கிறேன்,' என்கிறார்.
'யார் போனால் என்ன? யார் தங்கினால் என்ன? எல்லாம் ஒன்றுதான் நீங்கள் போங்கள். நான் இருக்கிறேன்,' என்கிறாள் ரங்கநாயகி. இங்கே ரங்கநாயகி போகவில்லை என்றால் உறவில், கருணையில் ஒன்று அல்லது பல புள்ளிகள் குறைந்துவிட்டதாகப் படும் என்று குறிப்பிடுகிறார் கதாசிரியர்.
ஊருக்குப் போவதை நினைத்து பெரியவருக்கு எல்லாப் பிள்ளைகள் மீது வெறுப்பு வந்து விட்டதுபோல் தோன்றியது.
குளிருக்குப் போர்த்திக் கொண்டதுபோல் எட்டு முழ வேட்டியை அணிந்துகொண்டு, தலையில் முண்டாசுக்கட்டி, நிதானமாக சத்யநாதன் படிக்கட்டுகளில் இறங்கி எல்லோரும் இருந்த கூட்டத்திற்கு வந்தான்.
சத்தியநாதன் என்ற கதாபாத்திரத்தை நம்மிடம் அறிமுகப்படுத்தும்போது கதை முழுவதும் சத்தியநாதன் பக்கம் போய்விடுகிறது. யாரையும் பார்க்காதவன் ரங்கநாயகியை மட்டும் கண்டு பிடித்துக் கூப்பிட்டான்.
சென்ற ஆறு மாதத்தில் இப்படி ஒருமுறைகூட அவன் கூப்பிட்டதில்லையாதலால் ரங்கநாயகிக்குத் திணறலாக இருக்கிறது.
'அம்மா, தீப்பெட்டி இருக்கிறதா?' என்கிறான் ரங்கநாயகிடம். ரங்கநாயகிக்கு வியப்பு. அவளுக்கு ஏற்பட்ட வியப்பில் இப்பொழுது பெரியவரும் சேர்ந்துகொண்டார். இந்த ஆறு மாதத்தில் சத்தியநாதன் அவன் பேசிய ஒரு அர்த்தமுள்ள பேச்சாக அவர்கள் இருவர்க்கும் தோன்றியது.
'தீப் பெட்டி எதற்கு? புகைக்கப் போகிறாயா?' என்று விஸ்வநாதன் கேட்டான்.
விஸ்வநாதன் திசையை நோக்கி ஒரு முறை சத்யாநாதன் உற்றுப் பார்த்தான்.
'நான் சுந்தர்ராஜனின் நான்காவது பிள்ளை,' என்கிறான் சத்யநாதன்.
இப்போதுதான் இந்தக் கதையில் ஒன்று புரிகிறது. சுந்தர்ராஜன் குடும்பம் அங்கிருக்கிறது என்பதும், சுந்தர்ராஜனுக்கு 4 பிள்ளைகள் என்பதும். அந்த வீட்டில் எல்லோரும் ஒரு இடத்திற்கு ரயிலில் எங்கேயோ போகப் போவதாகவும், 3 நாட்கள் குறைந்து அவர்கள் திரும்பி வரமாட்டார்கள் என்பதும் தெரியவருகிறது. சத்தியநாதனைப் பார்த்து எல்லோரும் கவலைப்படுவதிலிருந்து அவன் மனநலம் சரியில்லாதவன் என்று படுகிறது. அதனால் பெரியவரும் ரங்கநாயகியும் தனியாக அவனை அந்த வீட்டில் விட்டுவிட்டு ஊருக்குப் போவதற்குத் தயங்குகிறார்கள்.
இதையெல்லாம் வெளிப்படையாக நேரிடையாகக் குறிப்பிடப்படவில்லை. சத்தியநாதன் மாடியில் உள்ள அறையில் இருக்கிறான். காலித் தீப்பெட்டியுடன் அவன் மாடிக்குத் திரும்புகிறான். இந்த இடத்தில் கதாசிரியர் இப்படி குறிப்பிடுகிறார். பிரயாணக் குதூகலம் எல்லோரிடத்திலிருந்தும் அவிழ்ந்து விழுந்துவிட்டது போலிருந்தது. உண்மையில் சத்தியநாதனைப் பார்த்துக்கொள்ள பழனியம்மாள் என்ற பணிப்பெண்ணை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
வைத்தியநாதன் வண்டியை எடுத்துக்கொண்டு வரப் போனவன் வெறுங்கையுடன் வருகிறான். ஒரு வண்டியும் இந்தப் பக்கமும் வரவில்லை என்கிறான். ஏனெனில் அவர்கள் வீட்டு வாசல் பக்கமாக ஊர்வலம் ஒன்று வருகிறது. அந்தக் கூட்டம் அங்கிருந்து போனபிறகுதான் அவர்கள் கிளம்ப முடியும்.
அடுத்தது ஊர்வலத்தைப் பற்றி கதாசிரியர் விவரிக்கிறார். 'ஊர்வலம் பெரிய ஊர்வலமாக இருக்கப் போகிறது. இப்பொழுதே தெருவில் இரண்டு பக்கத்திலும் ஆட்கள் சிறு சிறு கும்பல் பொட்டலங்களாகப் போய்க் கொண்டிருந்தார்கள்,' என்று விவரிக்கிறார்.
இரண்டு கல் தொலைவில் உள்ள சிதம்பரநாதனும் அவன் குடும்பமும் அங்கு சிரமப்பட்டு வருகிறது.
சாவியைப் பக்கத்துவீட்டில் கொடுத்துவிட்டு பழனியம்மாள் வந்தால் அவளிடம் கொடுத்துவிட்டுப் போக வேண்டியதுதானே என்கிறான் சிதம்பரநாதன்.
சிதம்பரநாதனும் அந்தக் குடும்பத்தில் ஒரு பையனாக இருக்க வேண்டும் என்றும் எல்லோரும் சேர்ந்து போக அவன் குடும்பத்துடன் வந்திருப்பதாக நாம் யூகிக்க முடிகிறது. கதாசரியர் யாரைப் பற்றியும் முழுதாக விவரிக்காமல் பெயர்களை மட்டும் சொல்கிறார்.
உடனே கதை கூட்டத்திடம் திரும்புகிறது. கட்டுக்கடங்காத கூட்டம். கூட்டத்தில் உள்ள ஒரு பகுதியினர் ரெங்கநாயகி வீட்டுக் கதவை அடிக்கத் தொடங்கினர். கூட்டத்தை எதிர்த்துக் கேட்ட ரங்கநாயகியை அப்புறப்படுத்திவிட்டு சிலர் மாடிக்குச் சென்றனர். செய்வதறியாமல் திகைத்தனர் வீட்டில் உள்ளவர்கள். கூட்டம் கட்டுக்கடங்காமல் போகவே போலீசார் கண்ணீர்ப் புகையை வீகினார்கள். கூட்டத்தின் ஒரு பகுதியினர் அங்குள்ள கடைகளுக்கும் சென்று வன்முறையில் ஈடுபட்டனர்.
போலீஸôர் ரங்கநாயகி வீட்டிற்குள் நுழைந்து கலாட்டா செய்பவர்களை அப்புறப்படுத்தினார்கள். மாடிக்குச் சென்று சத்தியநாதளை அழைத்துக்கொண்டு வந்தனர். கூட்டத்தினரின் ஒரு பகுதி, மாடியிலிருந்து சோற்றுத் தட்டை வீசினான் என்று சத்தியநாதன் மீது புகார் கொடுத்தனர்.
வீடே ஸ்தம்பித்துப் போய்விட்டது. சத்யநாதனைக் குறித்து கூட்டம் சமாதானம் ஆகவில்லை. கூட்டம் அவனைக் கைதி செய்யச் சொல்கிறது. வேற வழியில்லாமல் கூட்டம் சத்தியநாதனை கைதி செய்கிறது. அவனை வீட்டைவிட்டு வெளியே அழைத்து வருகிறது.
இந்த இடத்தில் கதாசிரியரின் வர்ணனையைக் கவனிக்க வேண்டும்.
'தவறிப்போய்ப் பிறந்த ஒரு மகாராஜா தனது பொன் சால்வையை ஓவியத்துக்காக முன்பக்கம் சேகரித்துக் கொண்டது போல, போர்த்தி இருந்த எட்டு முழு வேட்டியை வலக்கையால் முன்பக்கம் சேகரித்துக் கொண்டு, மற்றபடி நவீன உடையிலிருந்த சத்யநாதன் வண்டியில் ஏறுவதற்காக அதன் அருகில் சென்று ரங்கநாயகி அம்மாளைத் திரும்பிப் பார்த்தான்.'
வண்டியில் ஏறி அமர்ந்தவுடன் சத்தியநாதன் மெல்லிய புன்முறுவலுடன் அம்மாவைப் பார்த்தான். ரங்கநாயகி அவன் புன்முறுவலைப் பார்த்து சந்தோஷத்தில் துக்கிதாள். வண்டி நகர்ந்தது.
நுணுக்கமாக எழுதப்பட்டிருக்கும் இந்தக் கதையை ஒரு முறைக்கு இருமுறை படிக்க வேண்டும். ஞானக்கூத்தன் எழுதிய ஒரே ஒரு கதை. இலக்கியத் தரமான கதை எழுத வரும் என நிரூபிக்கத்தான் எழுதினாரோ என்னவோ?