அஞ்ச லட்டைக் கதைகள் – 7




அழகியசிங்கர்

இது என் ஏழாவது கதை.  இந்தக் கதையைப் படித்தபோது ஒரு நிமிடம்தான் ஆயிற்று.  முகநூல் நண்பர்களுக்கு வாசிக்க அளித்துள்ளேன்.  

கதை 7

சொல்ல முடியாத சோகம்

மெதுவாக நடந்தான்.  சோர்வாக இருந்தான். ஒன்றும் சாப்பிடவில்லை.  கொரோனாவால் முழு கதவடைப்பு. அவனுக்கு வீடு இல்லை.  வாசலில்லை.
   ஊருக்குத் திரும்பவும் போய்விடலாமென்று எண்ணத்தில் தனியாகத்  தங்கியிருந்த இடத்தைக் காலி செய்துவிட்டான்.  பெங்களூரிலுள்ள தன் கிராமத்துக்கு எப்படியும் போக முடியாது.  மூட்டை முடிச்சுகளைப் பாதுகாப்பாக ஓரிடத்தில் வைத்திருக்கிறான்.
தினமும் காலையிருந்து அலைகிறான்.  ஓரிடத்திலும் இருக்க முடியவில்லை.  பசி.  கோரத்தாண்டவமாடும் பசி.  எங்கே உணவு கிடைக்குமோ அங்கேயெல்லாம் போய் நிற்கிறான்.
இதோ இப்போது நடந்து போகும் தெருவில் எல்லா வீடுகளும் திறக்கவில்லை.  யார் வீட்டுக் கதவையும் தட்டப் பிடிக்கவில்லை.  அயர்ச்சியாக இருக்கிறது.  பார்த்துக்கொண்டே போகிறவனுக்கு ஒரு வீடு வா வாவென்று திறந்து கிடக்கிறது.
வீட்டுக் கேட்டைத் திறந்து உள்ளே நுழைகிறான்.  யாருமில்லை.  கூடத்தில் தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருக்கிறது.  அமெரிக்காவில் கொரோனாவால் பத்து லட்சம் பேர்கள் என்று செய்தி அறிவித்துக்கொண்டிருக்கிறது.
அவசரம் அவசரமாகச் சமையலறைக்குள் நுழைகிறான். யாரும் அவனைத் தடுக்கவுமில்லை. அங்கே சமைத்து வைத்திருந்த உணவை எடுத்து வைத்துக்கொண்டு சாப்பிட ஆரம்பித்தான்.  நிதானமாகச் சாப்பிட வேண்டுமென்று கூடத் தோன்றவில்லை.  சாப்பாட்டைப் பார்த்தவுடன் வெறி.  சாப்பிட்டு கையலம்பிய பிறகு ஒவ்வொரு அறைக்காகச் சென்றான்.  ஒரு அறையில் பீரோ திறந்து கிடந்தது.  பீரோவில் பணம் கட்டுக்கட்டாய் கண்ணில் பட்டது.  ஆச்சரியத்துடன் கொஞ்சம் எடுத்துக் கொண்டான்.  அங்கே இருக்கக் கூடாதென்று தோன்றியது.  வெளியே வந்தான்.  முகமூடி அணிந்த காவலர் அவனைப் பிடித்து அம்புலன்சில் தள்ளினார்கள்.  

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன