அழகியசிங்கர்
கரப்பான் பூச்சிகள் வசிக்கும் அறை
தாமரைபாரதி

விளக்கொளிர்ந்ததும்
அறையின் ஏதாவதொரு
இடுக்கினை நோக்கி ஓடுகிறது
ஒரு
கரப்பான்பூச்சி
நான்கு கூட்டுக் கண்களால்
நோட்டம்விட்டு
இரவிலும் இருட்டிலும்
இரைதேடும்
ஒன்று வெளிச்சத்திற்குப் பயந்தோட
ஓராயிரம் இருளுக்குள்
ஒளிந்திருக்கலாம்
சமையலறைகளின்
குளியலறைகளின்
அச்சுறுத்தலாக இருப்பினும்
தூய்மைக் காவலர்களாக
அறியப்படும் கரப்பான்பூச்சிகள்
மனிதர்களுக்கு |
தீங்கு விளைவிக்கக்கூடுமென
மருந்திட்டுக் கொல்லப்படுகின்றன
காருண்யத்தின்
ஒளிக்கிரணங்கள்
தழுவாத அறைகளில்
ஒழுங்கற்று இங்குமங்கும்
கண்ணாமூச்சி காட்டி நடமாடுகின்றன
மனித உருமாற்றமடைந்த
கரப்பான்பூச்சிகள்.
(ஃப்ரான்ஸ் காஃப்காவுக்கு)
நன்றி : தபுதாராவின் புன்னகை – தாமரைபாரதி – கடற்காகம் வெளியீடு, 10-3-53 கணபதி நகர் முதல் தெரு, எஸ்ஆலங்குளம், மதுரை 625 017 – பக்கங்கள் 112 – விலை : ரூ.199 – கைபேசி : 78716 78748