அஞ்சலட்டைக் கதைகள்
அழகியசிங்கர்
இது என் ஆறாவது கதை. இந்தக் கதையைப் படித்தபோது ஒரு நிமிடம்தான் ஆயிற்று. முகநூல் நண்பர்களுக்கு வாசிக்க அளித்துள்ளேன்.
போஸ்டல் காலனி இரண்டாவது தெரு
எங்கும் போகாமல் வீட்டிலேயே இருந்தோம். நானும் மனைவியும்தான். மனைவி டிவியில். நான் கணினியில் மூழ்கியிருப்போம். தினமும் கொரோனா செய்தி எங்களைப் பாடாய்ப் படுத்தும். உண்மையில் டிவியில் வரும் செய்தியைக் கேட்கும்போது திகில் கதையைப் படிப்பது போலிருக்கும். போஸ்டல் காலனி 1வது தெருவிலிருக்கிறோம். இரண்டாவது தெருவில் அமெரிக்காவிலிருந்து வந்த ஒரு இளைஞனுக்குத் தொற்றாம்.
யார் அது? என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். என் நண்பன் வெங்கடேஷ் பையனாக இருக்குமாவென்று யோஜனைப் போயிற்று. அவன் பையனாக இருக்கக் கூடாதென்று வேண்டிக்கொண்டேன். போன வருடம்தான் வெங்கடேஷ் இல்லாமல் போய்விட்டான். போய்ப் பார்க்கலாமென்றால், கட்டையைப் போட்டு தடுத்திருக்கிறார்கள். எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டுமென்று அவர்கள் வீட்டுத் தொலைப்பேசியைத் தட்டினேன். யாரும் தொலைப்பேசியை எடுக்கவில்லை. பக்கத்துத் தெருதானே விஜாரிக்கலாமென்று கிளம்பினேன். தெருவில் ஆட்கள் நடமாட்டமில்லை. போக முடியாதபடி தடுப்பு.
ஓரிடத்தில் கூட்டமாய் காக்கைகள் கரைந்து கொண்டிருந்தன. என்னமோ காக்கைகள் கொரோனா கொரோனா என்று சொல்வதுபோல் தோன்றியது.