அஞ்சலட்டைக் கதைகள்

அஞ்சலட்டைக் கதைகள்

அழகியசிங்கர்

     அஞ்சலட்டை எடுத்துக்கொண்டு கதை எழுத ஆரம்பித்தேன்.  கதை அஞ்சலட்டைக்குள்தான் முடிய வேண்டும்.  இதுவரை 4 கதைகள் எழுதி விட்டேன். 

இது நான்காவது கதை.  

கொரானாவை ஒழிப்பது எப்படி?

    வீட்டிலேயே இருந்ததால் என்ன செய்வதென்று தெரியவில்லை.  வெளியே போனால்தான் சம்பாத்தியம்.  கிட்டத்தட்ட கொரானாவால் சில நாட்களாக வீட்டில் முடங்கிக் கிடக்கிறேன்.  அப்பா உர்ரென்று என்னை முறைத்துப் பார்ககிறார்.  அம்மா, 'என்னடா செய்யப் போகிறாய்?' என்று கவலையுடன் கேட்கிறாள்.  

    கம்ப்யூட்டர்களை அக்கக்கா பிரித்து ரிப்பேர் செய்கிற இடத்தில்தான் பணி புரிந்து கொண்டிருந்தேன்.  கிட்டத்தட்ட ஒரு மாதம் மேல் ஆகப்போகிறது.  கடையைத் திறக்கவில்லை.  அந்தக் கம்பெனியிலிருந்து கிடைக்கிற சம்பளம் குறைவாக இருந்தாலும், சமாளிக்கும்படி இருந்தது.  ஓரளவு நிலைமையைச் சமாளிக்க போதுமானதாக இருந்தது.  நெட்டியை வாங்கிடும் வேலை.  எந்த நேரமானாலும் எங்க வேண்டுமானாலும் ஓட வேண்டும்.  

ஓனர் முரளியைப் போனில் கூப்பிட்டேன்.   "சார்," என்று.    

    "உங்களைப் போல் பத்து ஊழியர்கள் இருக்கிறார்கள்.  கட்டிட வாடகை அது இதெல்லாம் கட்டாயம் தரவேண்டும்,"  என்று இரக்கமே இல்லாமல் சொல்லிவிட்டார்.

என்ன செய்யவேண்டுமென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கும்போதுதான் மோகனிடமிருந்து போன் வந்தது.  "என்ன பண்ணப் போறே?  உன் கணக்கில் பணம் அனுப்பறேன். கணக்கு எண், வங்கிப் பெயர் குறிப்பிட்டு செய்தி அனுப்பு."

"சார்," என்று நாத் தழுதழுக்கக் கூப்பிட்டேன்.  அவர் ஒரு வாடிக்கையாளர்.  அடிக்கடி அவர் கம்ப்யூட்டரை ரிப்பேர் செய்யப் போவேன்.  அப்படித்தான் பழக்கம்.  ஒரு முறை அவர் கதை தினமணிக்கதிரில் வெளிவந்தது.  அதைப் படித்து அதைச் சிலாகித்துப் பேசினேன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன