அழகியசிங்கர்
புத்தர் ஒருநாள் சிராவஸ்தி போகும் வழியில் கிசா கௌதமி என்ற பெண்மணி ஒரு குழந்தையின் சடலத்தை எடுத்துக்கொண்டு அவரிடம் வந்தாள். புத்தர் தமது தெய்விக சக்தியால் இறந்த குழந்தையைப் பிழைக்க வைத்துவிடுவார் என்று யாரோ அவளிடம் கூறியிருந்தார்கள்.
அவள் சிராவஸ்தியில் ஒரு பணக்கார வணிகரை மணந்த ஏழை. தன் ஒரே மகனை உயிரைப்போல் நேசித்தவள் அவள். தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருக்கும்போது கொடிய பாம்பு கடித்து அங்கேயே அப்போதே இறந்து விட்டான் பையன். அன்னையைத் தேற்றுவாரில்லை. குளிர்ந்துபோன சடலத்தைத் தோளில் போட்டுக்கொண்டு எதிரில் வந்தவர்களிடம் எல்லாம், பிள்ளையைப் பிழைக்க வைக்க மருந்து ஏதும் உண்டா என்று தெருவெல்லாம் அலைந்தாள். பாவம். கௌதமி பைத்தியமாகிவிட்டாள் என்று மக்கள் நினைத்தனர்.
எல்லாரும் அனுதாபப்பட முடிந்ததே தவிர ஏதும் செய்ய முடியவில்லை. கடைசியாக ஒரு புதிய யாத்ரீகர்தான், ‘புத்தரிடம் போ! அவர் புனிதர். எல்லா துன்ப துயரங்களையும் துடைப்பவர்,’ என்று சொல்லியிருந்தார். கௌதமி புத்தரைக் காண ஓடோடிச் சென்றாள். இன்னமும் குழந்தை அவள் அணைப்பில்தான் இருந்தது. அவர் திருவடிகளைப் பணிந்து, ‘சுவாமி, தயவு செய்யுங்கள் என் மகன் பிழைக்க மருந்து தாருங்கள்,’ என்று அழுதாள்.
அவள் துயரைக் கண்ட புத்த பிரான், ‘இருந்தால் ஒரு கை கடுகு கொண்டு வாயேன்,’ என்றார். ‘இதோ வருகிறேன்’ என்று அவள் கிளம்பியபோது, ‘குழந்தையோ கணவனோ, பெற்றோரோ, நண்பரோ யாருமே இறந்திராத வீட்டிலிருந்து கொண்டு வர வேண்டும்மா,’ என்றார் ஞானி.
ஒரு கை கடுகுக்காக கௌதமி வீடு வீடாக, சென்றாள். இங்கே யாராவது மகனோ மகளோ தாயோ தந்ததையோ நண்பரோ உறவினரோ இறந்திருக்கிறார்களா என்று அவளது கேள்விக்கு எல்லா வீட்டிலும் எந்தக் குடும்பத்திலும் பதில் ஆம் என்பதாக இருந்தது.
ஊரெங்கும் தேடியும் சாவு நேராத ஒரு வீடும் அகப்படாதபோது கடைசியாக அவளுக்கு அந்த உண்மை உறைத்தது. புத்தர் கூற முயன்றதும் அதுதான். சாவு எல்லாருக்கும் உள்ளதுதான் என்றாள் அவள்.
குழந்தையை அடக்கம் செய்தாள். சாந்தமூர்த்தி புத்தரிடம் போனாள். ‘வருந்தாதே எதுவும் நிலையானது அல்ல,’ என்றார் மகான் புத்தர்.