கௌதம புத்தர் – இரண்டு

கௌதம புத்தர் – இரண்டு 

அழகியசிங்கர்

குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் யசோதரா என்ற உறவுக்காரப் பெண்ணைக் கண்டு அப்பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளச் சித்தார்த்தன் விரும்பினான்.  யசோதராவுக்கும் சித்தார்த்தனைப் பிடித்துப் போயிற்று.  யசோதரைப் போன்ற அழகான மனைவியைப் பெற்ற பின்னர், தன் மகன் உலகைத் துறந்து துறவியாகி விடமாட்டான் என்று நினைத்தார் சுத்தோதனர்.

உலகில் துன்பமும் துயரமும் இருக்கிறது என்று கூட அறியாமல் சித்தார்த்தன வளர்ந்து வந்தான். ஆனாலும் சித்தார்த்தன் அரண்மனைக்கு வெளியிலும் ஒரு உலகம் இருப்பதை ஊகித்தே இருந்தான்.  வெளியுலகைக் காண வேண்டுமென்ற தன் அவாவை சுத்தோதனரிடம் வெளிப்படுத்தினான்.  அவர் மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை.  தனக்குப்பின்னால் ஆளப்போகிறவன் நாட்டையும் மக்களையும் அறிந்து கொள்ள வேண்டுமென்று சுத்தோதனர் நினைத்தார்.

சித்தார்த்தன் கிளம்பும்போது, எந்தவிதமான துன்பத்தையும் அவன் காண நேர்ந்து விடக்கூடாது என்று எச்சரிகையுடன் இருந்தார் மன்னன்.  நான்கு அழகிய வெண் குதிரைகள் தேரை இழுத்துச் சென்றன.  சித்தார்த்தன் இருக்கையில் அமர்ந்திருக்க, ரதத்தை மெதுவாக ஓட்டிச் சென்றான் சன்னா என்ற தேர்ப்பாகன்.  தெருவின் இருபுறமும் மக்கள்கூடி வரிசையாய் நிள்று வாழ்த்த இளவரசன் வீதிவலம் வந்தான்.  

மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள்.  உலகம் மகிழ்வான இடம்தான் என்று நினைத்தான்.  ஆனாலும் மேலே போகவேண்டுமென்று  தோன்றவே பாகனிடம்,  இந்தப் பக்கம் போகலாமே என்று ஒரு சிறு சந்துப் பக்கத்தைக் காட்டிச் சொன்னான்.  தேர் திரும்பியது.  அங்கே இருந்தவர்கள் சித்தார்த்தனை எதிர்பார்க்கவில்லை.  அங்கே வரவேற்பு வளைவுகளில்லை அழுக்கான அவ்வீதியில் கூட்டமாகப் பரபரப்போடு மனிதர்கள் காணப்பட்டனர். கோலூன்றி ஒரு கூனக்கிழவன் தட்டித்தடுமாறி நடந்து வந்தான்.  வியப்புடன் சித்தார்த்தன், யாரது என்று கேட்டான்.  யாரோ கிழவன் என்றான் சன்னா.  அரண்மனை திரும்பிய சித்தார்த்தன் சிந்தனையில் ஆழ்ந்து போனான்.

எனது அழகிய யசோதராவும் முதுமையடைந்து இப்படி ஆகி விடுவாளா?  எனக்கும் முதுமை வ்நதுவிடுமோ?  என்றெல்லாம் யோசிக்கிறான்.

மீண்டும் ஒருநாள் நகர்வலம் கிளம்பினான்.  அன்று நடக்கவே சிரமப்பட்ட ஒரு நோயாளியைக் கண்டான்.  நோயும் பிணியும் வருவது இயல்பென்று விளக்கினான் தேரோட்டி.  

மற்றும் ஒருநாள் இறந்தவன் ஒருவனை சுடுகாட்டுக்குத் தூக்கிச் செல்வதைக் கண்டான்.

‘இவர்கள் அந்த மனிதனை எங்கே கொண்டு போகிறார்கள்?’ என்று சன்னாவைக் கேட்டான்.  சன்னா அந்த மனிதன் இறந்து விட்டதையும் உடலை எரிப்பதற்காகக் கொண்டு செல்வதையும் கூறி பிறந்தவர் எல்லோரும் ஒருநாள் இறப்பது உறுதி என்பதை சித்தார்த்தனுக்குச் சொன்னான்.

முதுமை, நோய், சாவு மூன்றும் சித்தார்த்தனை ஆட்டிப் படைத்தன.  உலகம் உண்மையில் ஒரு துன்பம் நிறைந்த இடம் என்று இரக்கம் மிகுந்த இளவரசனுக்குத் தோன்றியது.  உலகில் ஏன் இத்தனை துன்பமும் துயரமும் என்று அறிய விரும்பினான். 

அடுத்த முறை தேரில் வரும்போது மஞ்சள் உடையணிந்த ஒரு சாதுவை சித்தார்த்தன் கண்டான்.  சாது அமைதியும் நிம்மதியும் கொண்டவராக இருந்தார்.

ஆர்வமாக, ‘அவர் யார்?’ என்று கேட்டான்.  சன்னா சொன்னான் : ‘அவர் ஒரு சாது.  துறவி.  துன்ப துயரங்களைக் கடந்தவர்.   இயற்கையுடன் ஒன்றி, நிரந்தரமான உண்மையை அமைதியாய் தேடுபவர்,’  என்றான்.  சித்ததார்த்தனுக்கு யோசிக்கத் தொடங்கினான்.  உண்மையில் இந்த நான்கு பேர்களைச் சந்தித்தது அவன் உள்ளத்தில் பெரிய மாற்றம் ஏற்பட்டது.

அவன் தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருந்தபோது அவனுக்கு ஒரு மகன் பிறந்தான்.  ராகுல் என்று பெயரிட்டார்கள்.  தான் எல்லாப் பற்றையும் விட்டுவிட்டுப் போய்விடவேண்டுமென்ற அவன் முடிவு ஓங்கியே இருந்தது.  மகன் பிறந்தது மகிழ்ச்சியாக இருந்தாலும் அவன் முடிவிலிருந்து சற்றும் மாறக் கூடாதென்று தீர்மானித்தான்.  மேலும் தாமதிக்காமல் உலகைத் துறப்பது என்று உறுதி கொண்டான்.

சித்தார்த்தனுக்கு அப்போது வயது 29.  ராகுல் மீது ஒரு அணைத்திருக்க, யசோதா தூங்கிக் கொண்டிருந்தாள்.  அந்த நள்ளிரவில் சித்தார்த்தன் எழுந்தான்.  இறுதியாக ஒரு முறை குழந்தையைத் தூக்க விரும்பினான்.  ஆனால் மனைவி விழித்துக்கொள்ளக்கூடும் என்ற அச்சம் எழவே திரும்பிப் பார்க்காமல் அரண்மனையை விட்டு விரைவாக வெளியேறினான்.  

நன்றியுள்ள தேரோட்டி சன்னா உடன் வர காட்டினுள் புகுந்தான்.  தன் தûலு முடியை நறுக்கி சன்னா மூலம் அரண்மனைக்குத் திருப்பிவிட்டான்.  தான் ஒரு சந்நியாசி ஆவதற்கு அடையாளமாக அவ்வாறு செய்துவிட்டு அரச உடைகளைக் களைந்து துறவி ஆடை அணிந்து சத்தியத்தைத் தேடும் முயற்சியில் மேலே போகலானான்.

ஆனந்தமும் மகிழ்ச்சியுமாக இருந்த சித்தார்த்தன் வாழ்க்கையில் முக்கியமான நான்கு நிகழ்ச்சிகள் நடந்தன.  ஒரு முதியவன், ஒரு நோயாளி, ஒரு பிணம், பிறகு முற்றிலும் துறந்த துறவி. எல்லா சுகபோகங்களும் கிடைத்த சித்தார்த்தன் போன்ற இளவரசன் எல்லாவற்றையும் துச்சமாக நினைத்து விடுவதை நம்மால் கற்பனை செய்ய முடியாது.  புத்தரின் வரலாற்றில் இந்த நான்கு நிகழ்ச்சிகளும் முக்கியமான பங்கு வகுக்கின்றன.

                                                                     (இன்னும் வரும்) 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன