அழகியசிங்கர்
இன்று எப்போதும்போல் தூங்கிவிட்டு எழுந்தேன். வழக்கம் போல் முகநூல் பக்கம் திறந்தேன். கண்ணில் பட்டது அம்ஷன்குமார் முகநூலில் எழுதியது. சுதிப்தா பாமிக் எழுதிய PONDS OF JALDANGA என்ற நாவலைப் பற்றி குறிப்பிட்டிருந்தார். 70வயதில் அவர் எழுதிய முதல் நாலல் என்று எழுதியிருந்தார். இந்தப் புத்தகத்தைப் பற்றிய கூட்டமொன்று மார்ச்சு மாதம் ஏழாம் தேதி சென்னையில் நடந்தது.
ஏற்கனவே 2015ஆம் ஆண்டு சுகிப்தா எழுதிய பாலோக் என்ற வங்காள நாடகத்தைத் தமிழ் படுத்தி வேலி என்ற பெயரில் அம்ஷன்குமார் தயாரித்த நாடகம் 2015ஆம் ஆண்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள அலையன்ஸ் பிரான்சிஸில் நடந்தது.
அன்று நாடகத்தைப் பார்க்க அசோகமித்திரனை அழைத்துக்கொண்டு போனேன். நாடகத்தைப் பார்க்க பல படிக்கட்டுகளைத் தாண்டி வர வேண்டியிருந்தது.
அசோகமித்திரன் நாடகத்தைப் பார்த்து எழுதிய கட்டுரையை இங்கே தருகிறேன்.
நாடகப் பிரதி
அசோகமித்திரன்
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு படைக்கப்பட்ட =மிருச்சகடிகா+ இருபதாம் நூற்றாண்டில் அமெரிக்காவில் நடிக்கப்பட்டு ரசிக்கப்படுகிறது. அதற்கும் முன்பும் எழுதப்பட்டிருக்கலாம் என்று அறியப்படும் பல விசேஷமான கிரேக்க நாடகங்களுக்கு இன்றும் மேடையிலும் படப்பிலக்கியத்திலும் தேவை இருக்கிறது. குப்தர்கள் காலத்து சாகுந்தலம் 19ம் நூற்றாண்டில் மஹா இலக்கிய மேதை என்று கொண்டாடப்படும் ஜெர்மானியர் கதேயால் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. காரணம். இவையெல்லாவற்றுக்கும் எழுத்துப் பிரதி இருக்கின்றன. நல்ல நாடகப் பிரதி இருக்கும்வரை அந்த நாடகம் இருந்துகொண்டே இருக்கும்.
வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் தயாரிப்பதில் ஒரு நிபுணர் என்று இன்று கருதப்படும் அம்ஷன்குமார் ஒரு புதிய நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார். சில நாட்கள் முன்பு நார்வே நாட்டில் ஓர் இந்தியத் தாய் தன் இரண்டு வயதுக் குழந்தைக்குக் கையால் உணவு ஊட்டினாள் என்ற காரணத்திற்காகக் குழந்தை அவளிடமிருந்து பறிக்கப்பட்டு வேறு குழந்தைகள் இல்லாத வெள்ளைக்கார தம்பதியரிடம் ஒப்படைக்கப் பட்டது. இது அமெரிக்க வாழ் இந்திய நாடகாசிரியர் ஒருவருக்கு 90 நிமிட நாடகம் எழுதத் தூண்டியிருக்கிறது. முரட்டு குணம் படைத்த ஒருவன் அவனுடைய ஒன்றரை வயதுக் குழந்தையைக் கோபத்தால் தூக்கி குலுக்கியிருக்கிறான். அது பேச்சு மூச்சில்லாமல் போக மருத்துவமனையில் சேர்க்க வேண்டியிருக்கிறது. அவர்கள் காவல் துறைக்குத் தகவல் தந்து விடுகிறார்கள். குழந்தை இனி மீண்டும் பெற்றோர்களிடம் தரப்படாது. கணவன் மீது வழக்கும் தொடரப்படக் கூடும். அப்போது அவன் குற்றத்தை ஒப்புக் கொண்டால் தண்டனை அவ்வளவு கடுமையாக இருக்காது.
இந்த நாடகத்தில் கணவனாக அம்ஷன்குமாரின் மகன் ராஜீவ் ஆனந்த் சிறப்பாக நடித்தாலும், அவனுடைய அப்பாவி மனைவியாக நடித்த பரீன் அஸ்லம் முதல் பரிசைப் பெற்று விடுகிறார். நாடகத்துக்காக மேடை ஜோடனை ஏதும் இல்லாதபோதும் அயல் நாட்டு உணர்வு நாடகத்தின் வலுவால் ஏற்படுத்தப்படுகிறது. நாடகத்திற்கு திடமான பிரதி இருக்கிறது. ஏதேதோ காரணங்கள் சொல்லப்பட்டு நாடகத் தன்மையே இல்லாத மேடை நாடகங்கள் மத்தியில் பூத்திபூர்வமான இந்த நாடக அனுபவம் மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. நாடகத்தின் தலைப்பு =வேலி+. மூலப் பிரதியை எழுதியவர் சுகித்தா பௌமிக். தமிழ்ப்பிரதியைத் தயாரித்தவர் அம்ஷன்குமார். இப்ஸன், டென்னிஸி வில்லியம்ஸ் போன்றோர் எழுதிய நாடகங்களோடு ஒப்பிடக்கூடிய இந்த நாடகம் எல்லா நாடகப் பார்வையாளர்களுக்கும் மனதில் பல கேள்விகளை எழுப்பும்.
உடனே எழக்கூடிய கேள்வி போலி நாடகங்களையும் அற்ப எதிர்மறைக் கருத்துகளையும் மாபெரும் தரிசனங்களாகக் காட்டுவதும், அவற்றைப் பற்றிப் பத்தி பத்தியாக உடனுக்குடனே செய்தியும் படங்களும் வெளியிடும் சென்னை ஆங்கில ஏடுகள் இந்த நாடகம் பற்றி இன்று வரை அபிப்பிராயம் சொல்லவில்லை.
(தேதி : 28.09.2015)